For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“இதய நன்றியுடன் இலட்சியப் பயணத்தை - மக்கள் தொண்டினைத் தொடர்கிறேன்”... ஸ்டாலின் உருக்கம்

தனது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு மு.க. ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதய நன்றியுடன் இலட்சியப் பயணத்தை மக்கள் தொண்டினைத் தொடர்கிறேன் என்று ஸ்டாலின் உருக்கமாக நன்றி கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: மார்ச் 1ம் தேதியான நேற்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திமுகவின் மூத்த தலைவர்கள், தொண்டர்கள் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர். இவர்கள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துள்ளார் ஸ்டாலின்.

இதுதொடர்பாக ஸ்டாலின் எழுதியுள்ள கடித்தத்தில் கூறியிருப்பதாவது: உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் அன்பு நன்றி மடல்.

மனதெல்லாம் புத்தெழுச்சியை மலரச் செய்தது மார்ச் 1ஆம் தேதி. என்னுடைய பிறந்தநாள் என்பதால் அல்ல, இந்த இயக்கத்தைக் காக்கும் ஒரு கோடிக்கும் மேலான என்னருந் தொண்டர்களும் இந்த இயக்கம் தங்களைக் காக்கும் என நம்பி வாழும் தங்கத் தமிழகத்தின் மக்களும் பொழிந்த பேரன்பின் விளைவினால் ஏற்பட்ட மகிழ்ச்சி அது. ஆடம்பரக் கொண்டாட்டங்கள் வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த என்னை, அன்புக் கொண்டாட்டங்களால் அள்ளியணைத்து திக்குமுக்காடச் செய்துவிட்டீர்கள்.

கழகம் ஒரு குடும்பம்

கழகம் ஒரு குடும்பம்

கழகம் ஒரு குடும்பம் என்ற உணர்வு, பேரறிஞர் அண்ணா காலத்தில் ஊட்டப்பட்டு, தலைவர் கலைஞர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வு. என் குடும்பத்தினரும் அதே உணர்வுடன் என்னைச் சூழ்ந்து நின்று, ‘கேக்' வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடி, மகிழ்ச்சியை ஊட்டினார்கள். அந்த மகிழ்ச்சி நாள் முழுவதும் தொடரும் வண்ணம், கழகக் குடும்பத்தினர் அணிஅணியாய்த் திரண்டு வந்து அரவணைத்த படியே இருந்தனர்.

தாய் கழகத்தின் அன்பு

தாய் கழகத்தின் அன்பு

நமக்கு பகுத்தறிவுக் கண் திறந்த தந்தை பெரியார், நமது இதயத்தைத் திறந்து எழுச்சியூட்டிய அறிஞர் அண்ணா நினைவிடங்களிலும் வணக்கம் செலுத்தி, முறைப்படியான நிகழ்வுகள் தொடங்கின. சென்னை மேற்கு மாவட்ட கழக சார்பில் அண்ணா நினைவிடத்தில் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் காலை நேரத்திலேயே நிறைந்து நின்றது, இட்ட பணியைச் சட்டென முடிப்போம் எனச் சொல்வது போல இருந்தது. பெரியார் நினைவிடத்திற்கு சென்ற போது திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களும் கருஞ்சட்டைத் தோழர்களும் உடன்வந்து வாழ்த்தி, தாய்க்கழகத்தின் அன்பைப் பரிமாறினர்.

ஒப்பில்லா பரிசு

ஒப்பில்லா பரிசு

பெரியார் திடல் அருகிலேயே சென்னை கிழக்கு மாவட்டக் கழகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில், பொதுமக்கள்-சிறார்களுடன் இணைந்து கேக் வெட்டிய போது, "நமக்கு நாமே" பயணம் நெஞ்சில் நிழலாடி மகிழ்ச்சி தந்தன. சென்ற வழியெல்லாம், என் வேண்டுகோளை ஏற்று ஆடம்பர பேனர்களை கழகத்தினர் தவிர்த்திருந்ததும், கழகத்தின் இருவண்ணக் கொடியை உயர்த்திப் பறக்கச் செய்திருந்ததும், அண்ணா வழங்கிய மூல இலட்சிய முழக்கங்களான கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு மூன்றையும் தலைவர் கலைஞர் அவர்கள் வழியிலான நமது உடன்பிறப்புகள் உறுதியாகக் கடைப்பிடித்து ஒப்பிலாப் பரிசினை வழங்கியிருக்கிறார்கள் என்ற உணர்வை ஏற்படுத்தியது.

இலட்சிய பாதை

இலட்சிய பாதை

அரசியல் பயணத்தில் தலைவர் கலைஞர் அவர்களின் உற்ற தோழராக-உடன்பிறவா சகோதரராக-எந்நிலையிலும் ஏற்ற கொள்கைத் தடம் மாறாத பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான கழகத்தின் பொதுச்செயலாளர் இனமானப் பேராசிரியர் அவர்களின் இல்லம் சென்று வாழ்த்து பெற்றபோது, உள்ளம் முழுவதும் ஊக்கமும் உத்வேகமும் நிறைந்தது. என்றும் எனக்கு வழிகாட்டி துணைநிற்கும் பேராசிரியர் பெருந்தகை அவர்கள் எனக்கு சால்வை போர்த்தி, நெஞ்சார வாழ்த்திய போது, என் தோளில் ஏற்றப்பட்டுள்ள சுமையையும் அதனை சுகமாக எண்ணிப் பயணிக்க வேண்டிய இலட்சியப் பாதையையும் உணர்ந்தேன்.

வங்கக் கடல்

வங்கக் கடல்

கழகத்தின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வந்தபோது, வங்கக் கடல்தான் இடம் பெயர்ந்து வந்துவிட்டதோ என நினைக்கும் வகையில் கழகத்தினரின் பெருந்திரளும் பேரார்வமும், உணர்ச்சி முழக்கமும் ஒன்று கலந்து என்னை வரவேற்றன. தோழமைக் கட்சியின் தலைவர்கள், இலக்கியத்துறையினர், திரைக்கலைஞர்கள், தொழிலதிபர்கள் என பலத் தரப்பினரும் அறிவாலயம் தேடி வந்து அகம் மகிழ வாழ்த்தினர். அலைபேசி வாயிலாக அன்பு வாழ்த்துகளை அள்ளியள்ளி வழங்கியோர் அநேகர்.

குன்றுபோல் குவிந்த புத்தகங்கள்

குன்றுபோல் குவிந்த புத்தகங்கள்

பயனற்ற பொன்னாடைகளைத் தவிர்த்து, பயன்மிகு புத்தகங்களைப் பரிசாக வழங்குங்கள் என்ற அன்புக்கட்டளையை ஏற்று கழகத்தினர் தங்கள் கைகளில் புத்தகங்களை ஏந்தி நின்ற காட்சி, ‘அறிவாலயம்' என்று சொல்லுக்கு அருஞ்சொற்பொருள் கண்டது போல இருந்தது. காலில் விழுவதைத் தவிர்த்து, வாழ்த்தும் வணக்கமும் தெரிவித்தபடி, நீண்ட வரிசையில் வந்த கழகத்தினர் ஏராளமான புத்தகங்களைப் பரிசளித்தனர். அந்தப் புத்தகங்கள் உடனுக்குடன் அங்கிருந்த அலமாரிகளில் அடுக்கப்பட்டன. பிறந்தநாள் விழாவிலே புத்தகங்கள் குன்றுபோல் குவிந்த வண்ணம் இருந்தது கண்டு எண்ணமெல்லாம் இறும்பூதெய்தின.

அற்புத தருணம்

அற்புத தருணம்

பிறந்தநாள் நிகழ்வுகளையெல்லாம் பெருமையோடும் நிறைவோடும் நினைவூட்டுகிற நேரத்தில், முக்கியமான ஒரு நிகழ்வை இன்னும் சொல்லவில்லையே எனும் உங்கள் உள்ளத்து ஓசை எனது செவிகளுக்கு எட்டாமல் இல்லை! ஆம்.. என்னையும் உங்களில் ஒருவனாக- உதிரத்தோடு ஒட்டிப் பிறந்த உடன்பிறப்பாகவே எண்ணி வழிநடத்தும் தலைவர் கலைஞர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற அந்த தருணத்தை மறக்க முடியுமா?

கலைஞரின் புன்னகை பூக்கள்

கலைஞரின் புன்னகை பூக்கள்

65 வயதானாலும் நான் தந்தைக்குத் தனயன் தானே! செயல் தலைவர் என்ற பொறுப்பை ஏற்றாலும் அவர் விரல் பிடித்தே இயக்கப் பாதையில் இன்றளவும் பயணிக்கிறேன். தந்தை என்பதைவிட தலைவர் என்று சொல்வதில் தான் எனக்குத் தகுதியும் பெருமையும். கழகம் தான் குடும்பம் என்பது தனது செயல் மூலம் எனக்கு அவர் கற்றுத் தந்த பாலபாடம். முத்தமிழும் மொத்தமாய் முடிசூட்டிக் குடிகொண்டிருக்கும் மாபெரும் தலைவரை கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றேன். உடல்நலக் குறைபாடு காரணமாக அவர் அதிகம் பேசவில்லை என்றாலும், இன்முகத்துடன் அவர் சிந்திய புன்னகை ஒரு கோடி வாழ்த்துப் பூக்கள் ஒன்றாகத் திரண்டு என் மேல் கொட்டுவது போல இருந்தது. கழகத்தினர் பலரும் வாழ்த்து சொல்லி, புத்தகங்களைத் தந்தனர். தலைவர் கலைஞர் எனும் நடமாடும் புத்தகாலயமே வாழ்த்துப் புன்னகையை எனக்குப் பரிசாகத் தந்ததை உணர்ந்தேன். தமிழர்களின் வாழ்த்து பெற்ற நாளில், தமிழின் வாழ்த்து முத்தாய்ப்பாக அமைந்தது. தமிழைத் தாயாகவும் தாயைத் தமிழாகவும் கருதும் இயக்கமன்றோ நமது கழகம்! தமிழாகவே வாழும் தலைவர் கலைஞர் அவர்களின் வாழ்த்துகளுடன், தாயார் தயாளு அம்மாள் அவர்களிடமும் வாழ்த்துப் பெற்று மகிழ்ந்தேன்.

ஈடில்லா குழந்தைகள்

ஈடில்லா குழந்தைகள்

முதன்முதலில் நான் சட்டமன்றத் தேர்தல் களம் கண்ட 1984ஆம் ஆண்டு முதல், ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட சிறுமலர் கண்பார்வையற்றோர் காதுகேளாதோர் பள்ளிக்கு ஒவ்வொரு பிறந்தநாளன்றும் சென்று, அங்குள்ள மாணவ-மாணவியருக்குப் பரிசுகளும் உணவும் வழங்கி அவர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம். எத்தனையோ பெரியவர்கள் புகழ் பெருக்கும் ஆன்றோர் சான்றோர் எனப் பலரைச் சந்தித்தாலும் அந்த சிறாருடன் நேரத்தை செலவிடுவதில் ஏற்படும் மனநிறைவுக்கு ஈடு கிடையாது. இந்தப் பிறந்தநாளிலும் அந்த சிறாருடன் அளவளாவி அகமகிழ்ந்தேன்.

10 ஆயிரம் புத்தகங்கள்

10 ஆயிரம் புத்தகங்கள்

பிறந்தநாளில் பரிசாகக் கிடைத்த புத்தகங்களின் எண்ணிக்கை 10ஆயிரத்தைத் தாண்டும். இவற்றில் சிலவற்றை என் அறிவுத்தேடலுக்குப் பயன்படுத்திக் கொண்டு, மிகுந்திருப்பதை நூலகங்களுக்கு வழங்குவது என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். அறிவாலயத்தில் அமைந்துள்ள பேராசிரியர் நூலகம் தொடங்கி தமிழகம் முழுவதுமுள்ள பல நூலகங்களிலிருந்தும் புத்தகங்கள் வேண்டுமென விருப்பத்தினைத் தெரிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு இவற்றைப் பிரித்து வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது. இது ஒரு தொடக்கம் தான்.

நூலகங்களுக்கு புத்தகம்..

நூலகங்களுக்கு புத்தகம்..

கழகத்தின் சார்பில் நடைபெறும் நிகழ்வுகளில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகள், இனி பொன்னாடைகளுக்குப் பதில் புத்தகங்களை வழங்கவும் பெறவும் செய்து, அவற்றை உங்கள் பகுதியில் உள்ள நூலகங்களின் தேவைக்கேற்பக் கொடுத்து, தமிழகத்தின் அடுத்த தலைமுறை அறிவாற்றலைப் பெருக்கிக் கொள்ளத் துணை நிற்க வேண்டியது நமது கடமையாகும்.

இதயம் கனிந்த நன்றிகள்

இதயம் கனிந்த நன்றிகள்

இந்த ஒரு கடமை மட்டுமா? தமிழகத்தின் எதிர்காலத்தை இன்பமயமாக்க வேண்டிய பெருங்கடமையும் கழகத்திற்கு இருக்கிறது. அதற்குத் தேவையான திட்டங்களை வகுத்து-போராட்டக் களங்களை சந்தித்து-ஜனநாயகப்பூர்வமான முறையிலே ஆர்வம் குன்றாமல் அடக்கத்தோடு செயல்பட்டு-பினாமி ஆட்சியை அகற்றி-மக்களின் பேராதரவுடன் கழக அரசை அமைக்கும் அந்த இலக்கு நோக்கிப் பயணிக்க, என் பிறந்தநாளில் நீங்கள் அளித்த அன்பு நிறைந்த வாழ்த்துகள் ஊக்கமளிக்கின்றன. நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்த அனைத்துத் தரப்பினருக்கும் என் இதய நன்றியை உரிதாக்குகிறேன். உங்களின் வாழ்த்துகளின் துணை கொண்டு, இலட்சியப் பயணத்தை, மக்கள் பணியைத் தொடர்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK's working president M.K. Stalin writes a thanks letter for wishing on his birthday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X