"டிரம்ஸ் சிவமணி"யாகவே மாறிய உங்கள் வேட்பாளர் மதுசூதனனை பாருங்கள்!

சென்னை: ஆர்.கே.நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள மதுசூதனன் டிரம்ஸ் அடித்து மக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகருக்கு வரும் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், தினகரன் அணி சார்பில் தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைகோட்டுதயம் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

சாதகமாக்க முயற்சி
கடும் போராட்டத்துக்கு பிறகு, இரட்டை இலை சின்னத்தை பெற்றுள்ள அதிமுகவுக்கு இந்த தேர்தல் வெற்றி என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆளும் கட்சியினர் மீதான மக்களின் அதிருப்தியை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளலாம் என மற்ற கட்சி வேட்பாளர்களும் தீயாக வேலை பார்த்து வருகின்றனர்.

அமைச்சர் பிரசாரம்
ஆர் கே நகரில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து வருவாய் துறை அமைச்சர் ஆர் பி. உதயகுமார் பிரசாரம் செய்தார். அப்போது வ.உ.சி நகர் மார்க்கெட் பகுதியில் உள்ள கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.

நூதன பிரசாரம்
பின்னர் வாக்காளர்களை கவர ட்ரம்ஸ் மேளம் கொட்டி நூதன முறையில் பிரசாரத்தை அமைச்சர் உதயகுமார் தொடங்கி வைத்தார். இதையடுத்து மதுசூதனனும் டிரம்ஸை அடித்து பிரசாரம் செய்து அசத்தினார்.

வீடு வீடாக சென்று வாக்கு
இதனையடுத்து பிரசார வாகனத்தில் வேட்பாளர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆர். பி. உதயகுமார், உடுமலை இராதாகிருஷ்ணன், பாஸ்கரன், மற்றும் மைத்ரேயன் எம் பி, செந்தில்நாதன் எம் பி, மற்றும் ஆர் எஸ் ராஜேஷ், உள்ளிட்டோர் வீதிவீதியாக சென்று வாக்கு சேகரித்தனர்.