For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலித் இளைஞர் கொலைக் குற்றவாளிகளை உள்ளாடையுடன் போட்டோ எடுத்து வெளியிட்டது ஏன்? - ஹைகோர்ட்

Google Oneindia Tamil News

சென்னை: உடுமலைப்பேட்டையில் தலித் இளைஞர் சங்கர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்குக் காரணமானவர்களை உள்ளாடையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டதற்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் டிஜிபி மீது அவதூறு வழக்குத் தொடரப்படும் என்றும் நீதிபதிகள் கடுமையாக எச்சரித்துள்ளனர்.

Madras HC slams Police for releasing Udumalapettai murder accused's photograph

உடுமலைப்பேட்டையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று பட்டப் பகலில் தலித் இளைஞரான சங்கர் மற்றும் அவரது காதல் மனைவி கவுசல்யா ஆகியோரை 3 பேர் கொண்ட கும்பல் வெறித்தனமாக வெட்டியது. இதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். கவுசல்யா படுகாயமடைந்தார்.

இந்த வெறிச் செயலைக் கண்டு பொதுமக்கள் சமைந்து போய் நின்றிருந்தனரே தவிர யாருமே அந்த கொலையாளிகளைத் தடுக்கவோ, பிடிக்கவோ முயலவில்லை.

இந்த நிலையில் இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களின் புகைப்படமும் வெளியானது. இது தற்போது பிரச்சினையாகியுள்ளது.

இவர்களின் புகைப்படம் வெளியானது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நாகமுத்து, ஜெயச்சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து ஒரு வழக்கைப் பதிவு செய்துள்ளது.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் காவல்துறைக்கும், ஊடகங்களுக்கும் கண்டனம் தெரிவித்தனர். நீதிபதிகள் பின்னர் கூறுகையில், குறறம் சாட்டப்பட்டோரைக் கொண்டு, சாட்சிகளை வைத்து அணிவகுப்பு நடத்தாமல் குற்றவாளிகள் என போலீஸார் முடிவு செய்தது எப்படி?.

புகைப்படத்தில் உள்ள ஐந்து பேரையும் உள்ளாடையுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்து வெளியிட்டது ஏன்? இப்படி வெளியிடுவது விசாரணையைப் பாதிக்கும் என போலீஸாருக்குத் தெரியாதா?.

இதுபோல செயல்பட்டால், போலீஸ் டிஜிபி மீது அவதூறு வழக்கு தொடர நேரிடும். காவல்துறையும், ஊடகங்களும் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

இந்தப் புகைப்படத்தை வெளியிட்டது யார், ஏன் வெளியிட்டார்கள் என்பது குறித்து அரசு வழக்கறிஞர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதையடுத்து ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், இந்தப் புகைப்படம் வெளியாக காரணமான காவல்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

English summary
A division bench of Madras HC has slammed the Police for releasing the photograph of Udumalapettai murder accused in the media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X