For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகாளய அமாவாசை : ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்தில் புனித நீராடி பக்தர்கள் வழிபாடு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம், கன்னியாகுமரி, ஸ்ரீரங்கத்தில் இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் புனித நீராடி தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர். சென்னை மயிலாப்பூர் குளக்கரையிலும் ஏராளமான பக்தர்கள் திதி கொடுத்து முன்னோர்களை வணங்கினர்.

அமாவாசை அன்று புண்ணியத்தலங்களுக்கு சென்று நமது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, நாள் முழுவதும் உபவாசம் இருந்து முன்னோர்களை நினைத்து வழிபடுவதுடன், முன்னோர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை படைத்து வணங்கி தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவர். முன்னோர்களின் ஆசி அவர்களது தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

Mahalaya amavasya : Pilgrims take holy dip in Rameswaram and Srirangam

ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை மற்றும் தை அமாவாசை போன்ற நாட்களில் புண்ணிய தீர்த்த ஸ்தலங்களில் புனித நீராடி முன்னோர்களை வழிபடுவதை இந்துக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மகாளய அமாவாசை முக்கியமாக கருதப்படுகிறது.

புனித நீராடல்

இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்தம், தனுஷ்கோடி, வேதாரண்யம், முக்கடலும் சங்கமிக்கும் குமரிக்கடல், திருச்செந்தூர் கடலில் ஏராளமான பக்தர்கள் தீர்த்தமாடி முன்னோர்களை வழிபட்டனர். அதிகாலையிலேயே ராமேஸ்வரம் வந்த பக்தர்கள் ஏராளமானோர் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி காவிரிக்கரையில்

திருச்சி ஸ்ரீரங்கம் காவிரியாற்றின் அம்மாமண்டபம் படித்துறையில் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள், முன்னோர்களுக்கு திதி கொடுக்க குவிந்தனர். அதிகாலையில் இருந்தே திருச்சி மாவட்டம் மட்டும் அல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்தவர்கள் அம்மா மண்டபம் காவிரியாற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர். காவிரியாற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தர்பணம் கொடுத்து வழிபாடு

தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறை, வேதாரண்யம் சன்னதி கடல், கோடியக்கரை ஆதிசேது கடலிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து கடலில் நீராடினர். இதுபோல கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்திலும் ஏராளமான பக்தர்கள் திரண்டு புனித நீராடினர். சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் குளக்கரை உள்பட நீர்நிலைகளில் பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிப்பட்டனர். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுத்து வழிபட்டனர்.

English summary
Mahalaya Amavasya, a day observed to pay homage to their departed loved ones.All traditional Hindus gathered at water storage locations such as sea, ponds, or rivers and took holy bath. Subsequently, they performed the rites, known as ‘tarpanam’, for the souls of the departed ancestors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X