For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னோர்களின் ஆசி கிடைக்கும் மகாளய பட்சம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: 'மகாளயம்' என்றால் பெரிய கூட்டம் என்று பொருள். மறைந்த நம் முன்னோர் மொத்தமாக நம் இல்லத்தில் கூடும் நேரமே மகாளய பட்சம்.

மகாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, புரட்டாசி மாதம் அமாவாசை வரை நீடிக்கும்.

புரட்டாசியில் வரும் அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். மறைந்த நம் முன்னோர் பித்ரு லோகத்திலிருந்து இந்த பதினைந்து நாட்கள் நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம் ஆகும்.

நமது மூதாதையர்களின் அருளாசியே நம்மை காக்கும் கவசங்களாகும். ஒருவன் எந்த ஒரு செல்வத்தை இழந்தாலும், வறுமையின் எல்லையில் நின்று வாழ்வை நொந்தாலும், அவனது முன்னோர்களான பித்ருக்களின் ஆசிர்வாதம் மட்டும் இருந்தாலே போதும்.

கடக்க முடியாத காட்டாற்று வெள்ளத்திலும் கிடைக்கும் மரக்கலன்போல பித்ருக்களின் ஆசி அமையும். எனவேதான் பித்ருக்களுக்கு தர்ப்பணம் இடுவது என்பது நம்மை நாமே காத்துக்கொள்வதற்காக நாம் அணிந்து கொள்ளும் கவசத்துக்கு ஒப்பாகும்.

மஹாளய அமாவாசையை முன்னிட்டு வரும் 17ம் தேதி பிரதமை திதியில் இருந்தே பித்ருக்களுக்கு தர்ப்பணம் அளிக்கத் தொடங்கலாம்.

ஒவ்வொரு திதியிலும் அளிக்கப்படும் பித்ரு தர்ப்பணத்தால் எவ்வகை பலன் கிட்டும் என்பது யஜூர் வேதத்தில் விளக்கப்பட்டுள்ளது.

மகாளய பட்சம்

மகாளய பட்சம்

17-09-2016 சனி கிழமை முதல் மகாளய பட்சம் ஆரம்பம் ஆகிறது. சனிக்கிழமை முதல் பதினைந்து நாட்களுக்கு மகாளய பட்சம் காலமாகும்.

பொதுவாக ஒவ்வொரு அமாவாசையன்றும் விடும் தர்ப்பணம் எமதர்மராஜனின் கைகளுக்கு சென்று அவர் நம் முன்னோர்களை அழைத்து அவர்களிடம் ஒப்படைப்பாராம். மஹாளய பட்சம் ஆரம்பிக்கும் நாளன்று நம் முன்னோர்களை அவரவர்கள் விருப்பமான இடத்திற்கு சென்று வரும்படி அனுமதிப்பாராம். நம் முன்னோர்களுக்கு விருப்பமான இடம் நம் இல்லம் தானே, எனவே அவர்கள் மஹாள்ய பட்சமான பதினைந்து நாட்களும் முன்னோர்கள் நம் இல்லத்தில் வந்திருப்பதாக நம்பிக்கை. இந்த பதினைந்து நாட்களும் நம் வசிப்பிடத்தை சுத்தமாக வைத்திருந்து நம் முன்னோர்களை வணங்கி வந்தால் நம் வாழ்க்கை விருத்தியடைவது உறுதி.

முன்னோர்களுக்குத் திதி

முன்னோர்களுக்குத் திதி

தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்கு மிகவும் சிறந்தது. வருடத்தில் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும். அனைத்து முன்னோர்களையும் அப்போது நினைவு கூர வேண்டும். புனித நீர் நிலைகளுக்கு (கடலுக்கு) சென்று புனித நீராடி, நம் முன்னோர் ஆத்மசாந்திக்காக பிரார்த்தித்து வர வேண்டும்.

பிரதமை தொடங்கி அமாவாசை வரை

பிரதமை தொடங்கி அமாவாசை வரை

இந்த தர்ப்பணம் 17-09-2016 சனி கிழமை முதல் பதினைந்து நாட்களில் மஹாபரணி, மஹாவியதீபாதம், மத்யாஷ்டமி, அவிதவா நவமி ஆகிய நட்களில் ஒருமுறையும் மகாளய அமாவாசை அன்று ஒரு முறையாக இரு நாட்களில் முன்னோர்களுக்கான தில தர்ப்பணம், படையல் வைத்தல், தானதர்மங்கள் செய்தல் ஆகியவை செய்யலாம்.

மூதாதையரின் பெயர்கள்

மூதாதையரின் பெயர்கள்

நமது தேசத்தின் பல நூற்றாண்டுகளுக்கும் முந்தைய வரலாற்றைக் கூட தெரிந்து வைத்திருக்கும் பலர், தங்கள் மூதாதையரில் மூன்று தலைமுறைகளுக்கு முன்புள்ளவர்கள் பெயரை நினைவில் வைத்திருப்பதில்லை. அந்த பயிற்சியை இந்த காலத்தில் நமது குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். தற்போது நினைவில் உள்ள தலைமுறையினர் பெயரை டைரியில் குறிக்கச் சொல்ல வேண்டும். அப்படி செய்தால் தான் எதிர்காலத்தில் தர்ப்பணம், சிராத்தம் குறித்த அறிவு நம்மிடையே நீடித்து நிலைத்திருக்கும்.

எந்த திதியில் என்ன பலன்

எந்த திதியில் என்ன பலன்

மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் தரப்பட்டுள்ளன.
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
இரண்டாம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
மூன்றாம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
நான்காம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
ஐந்தாம் நாள் - பஞ்சமி - செல்வம் சேரும் நியாயமான சொத்துகள் கிடைக்கும். வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
ஆறாம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
ஏழாம் நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும், தடை பட்ட பதவி உயர்வு கிடைக்கும்.
எட்டாம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
ஒன்பதாம் நாள் நவமி - திருமண தடை நீங்கும். சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல். குடும்ப ஒற்றுமை சிறப்படையும்.
பத்தாம் நாள் - தசமி - நீண்ட நாள் ஆசை நிறைவேறுதல், எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
பதினொன்றாம் நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
பன்னிரெண்டாம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல், விலை உயர்ந்த ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.
பதின்மூன்றாம் நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
பதினான்காம் நாள் - சதுர்த்தசி - ஆயுள் விருத்தியாகும், பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
பதினைந்தாம் நாள் - மகாளய அமாவாசை - முன் சொன்ன அத்தனை பலன்களும் நம்மைச் சேர முன்னோர் ஆசி வழங்குதல்.
எனவே, மகாளய பட்சம் என்னும் அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருந்தால் லாபம் நமக்கு மட்டுமல்ல! நம் தலைமுறைக்கும் சேர்த்து தான். மகாளய பட்சம் தர்ப்பணம் செய்வதால் நமது முன்னோர்களின் ஆசியுடன் நமது வாழ்க்கையும் நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும் என்பது நிச்சயம்.

English summary
The Mahalaya Pitru Paksha and Shradh 2016 dates. Tarpan and Shradh are performed on all Amavasi. Mahalaya Paksha starts on Saturday, September 17, 2016 and ends on Friday, September 30, 2016 (IST).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X