For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமரி மாவட்ட இயற்கை வளங்களை அழிக்கும் குவாரிகள்.. நடவடிக்கை எடுக்க மனோ தங்கராஜ் எம்எல்ஏ கோரிக்கை!

By Veera Kumar
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட இயற்கை வளங்களை அத்துமீறி அழிக்கும் குவாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனோ தங்கராஜ் எம்.எல்.ஏ. (பத்மநாபபுரம் தொகுதி-திமுக) வற்புறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

Mano Thangaraj wants action against the quarries that destroy the natural resources

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 47 குவாரிகள் அரசால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெரும்பாலான குவாரிகள் கனிம வளங்களை உடைத்தெடுத்து கேரளாவிற்கு கடத்துவதை தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

அனுமதிக்கப்பட்ட அளவை விட பன்மடங்கு அதிகமாகக் கனிம வளங்கள் உடைத்தெடுக்கப்பட்டு சூறையாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தின் ஊரகச் சாலைகள் 10 முதல் 15 டன் வரையிலான எடையுடைய பாரங்களை கொண்டு செல்லும் விதத்திலேயே அமைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஒரு சில குவாரி உரிமையாளர்கள் 40 டன் வரையிலான எடையையுடய கற்கள் மற்றும் ஜல்லிகளை ஏற்றிச் செல்வதால் இந்தச் சாலைகள் முற்றிலுமாகப் பழுதடைந்து வருகிறது.

இப்படி பழுதடைந்த குண்டும், குழியுமான சாலைகளில் மீண்டும் மீண்டும் அதிகனரக வாகனங்கள் இயக்கப்படுவதால், பயணிகளும் பொது மக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகளில் நிதி இல்லாத சூழ்நிலையில் இவ்வாறு பழுதடைந்த சாலைகளைச் சரி செய்ய முடியாமல் உள்ளாட்சி நிர்வாகங்கள் திணறி வருகின்றன.

குவாரி நிர்வாகங்களின் அத்துமீறலுக்கு உதாரணமாக: கடந்த ஜூலை மாதத்தில் 11736 யூனிட் கருங்கற்கள் மற்றும் ஜல்லி, 7000 யூனிட் மண் மட்டுமே வெட்டியெடுக்க கனிம வளத்துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதித்த அளவைவிட பன்மடங்கு அதிகமாகக் கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக குவாரி நிறுவனங்கள் முறைகேடாக, ஒரே அனுமதிச்சீட்டை பலமுறை பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலை தொடருமாயின் குமரி மாவட்டத்தின் தற்போதய சூழலை விட மிகப்பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என்பது பலதரப்பட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்களின் கருத்தாகும். இது மட்டுமல்லாமல் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படும் ஜல்லி, மண் மற்றும் கற்கள் போன்றவை பாதுகாப்பற்ற முறையிலேயே கொண்டு செல்லப்பட்டு வருகிறது.

அதாவது, இவற்றை முறையாகவும் பாதுகாப்பாகவும் மாசுபடுத்தாத வகையில் பொது மக்களுக்கு இடையூறின்றி கொண்டு செல்லப்படுவதில்லை. இதன் விளைவாக காற்றில் பறந்து வரும் மண் துகள்கள் பாதசாரிகள், பயணிகள், வாகன ஓட்டிகள், சாலையோர வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களுக்கு பெரும் மாசுபாட்டை உருவாக்குவதோடு பொது மக்களுக்கு பல்வேறு வகையிலான நோய்கள் ஏற்படவும் காரணமாக உள்ளது.

எனவே இது போன்ற குற்றச்சாட்டுகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து தவறுகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

English summary
Mano Thangaraj MLA insist gvt have to take immediate action against the quarries that destroy the natural resources of Kanyakumari District.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X