For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொறுமை இழந்து உக்கிரமாக கனைக்கும் திராவிட ' மாடுகள்' - மனுஷ்யபுத்திரன்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: மாட்டிறைச்சி தடைக்கு எதிராக தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாடு கோஷம் சமூக வலைதளங்களில் விஸ்வரூபமெடுத்து பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த களேபரத்தில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் 'திராவிட மாடு' என்ற பெயரில் எழுதிய கவிதையும் வைரலாக பரவி வருகிறது.

மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடை மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல் என கேரளா கொதித்துக் கொண்டிருக்கிறது.

கேரளாவில் மாட்டிறைச்சி திருவிழா தெருவெங்கும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் உச்சகட்டமாக இந்தியாவில் இருந்து பிரிந்து தனிநாடாக தென்னிந்திய மாநிலங்கள் இணைந்து திராவிட நாடு என்ற பெயரில் உருவாக வேண்டும் என்ற கோஷம் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. இந்த நிலையில் கவிஞர் மனுஷ்யபுத்திரன் 'திராவிட மாடு' என்ற பெயரில் தற்போதைய சூழலை வைத்து எழுதிய கவிதையும் வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Manushya Puthiran poem on 'Dravida Maadu' goes viral

மனுஷ்யபுத்திரன் கவிதை

திராவிட மாடு
..................................
மாட்டுக்கு கொம்பு சீவு
வண்ணம் தடவு
நம் திராவிட மாட்டுக்கு

மாட்டை கட்டிய கயிறை தறி
வரலாற்றின் பட்டிகளைத் திற
திராவிட மாட்டை அவிழ்த்து விடு

திராவிட மாடுகள் வயலில்
ஆழ உழுபவை
திராவிட மாடுகள்
வாடிவாசலில் சீறிப் பாய்பவை
திராவிட மாட்டுபால்
சத்துக்கள் நிறைந்தவை
திராவிட மாட்டுக்கறி
மனதிற்கு இச்சை தருபவை

மாட்டுத்திருடன்
அதிகாரத்தின் மாறுவேடங்களில் வருகிறான்
தந்திரமாக
பட்டிக்குள் நுழைகிறான்

நீ இப்போது
திராவிட மாடுகளை அவிழ்த்து
கையில் பிடித்துக்கொண்டு
மாட்டுச் சந்தைக்குச்செல்
மாடுகளை விற்று
உழவுக்கு தானியங்கள் வாங்கு
நமது நிலங்கள் பாழ்பட்டு விட்டன
நமது மாடுகள் தீவனமின்றி
வயல் வெளிகளில் செத்து விழுகின்றன
நமக்குத் தெரியும்
நம் மாடுகளை என்ன செய்ய வேண்டும் என்று
ஐய்யாயிரம் வருடங்களாக
இந்த மாடுகளை நாங்கள்
எங்களோடு பராமரித்து வருகிறோம்
மாட்டிற்கு எப்படி பிரசவம் பார்க்க வேண்டுமென்று
எங்களுக்குத் தெரியும்
நோயுற்ற கன்றுகளுக்கு
என்ன மருந்து தர வேண்டும்
என்று எங்களுக்குத் தெரியும்
எந்தநேரம் எங்கள் மாடுகளுக்கு'
இணை சேர்க்க வேண்டும் என்று
எங்களுக்குத் தெரியும்
மாட்டுத்திருடர்கள் போன திசையை
எப்படிக் கண்டுபிடிப்பது என்று
எங்கள் ஜோசியர்களுக்குத் தெரியும்

மாட்டுத்திருடனுக்கு
ஒரு மண்ணும் தெரியாது
அவன் தரகனாக இருந்து
திருடனாக மாறியவன்
அவன் நம் மாடுகளை கவர்ந்து கொள்ள
இனிய மொழிகள் பேசுகிறான்
நன்கு வெந்த
ஒரு திராவிட மாட்டு மாமிசத்துண்டை எடுத்து
அவன் வாயில் திணி

மாட்டு சந்தைக்கு எங்கள்
மாடுகளை நாங்கள் அழைத்து செல்கிறோம்
சந்தையின் வழியில்
முள் வேலிகள் போடப்பட்டிருக்கின்றன
' மாற்றுப்பாதையில் செல்லவும்''
என்று ஒரு அறிவிப்புப் பலகை
கண்ணுக்குத் தெரியாமல் வைக்கப்பட்டிருக்கிறது

திராவிட மாடுகளுக்கு
திராவிட நாட்டில் ஒரு சந்தை
இருக்கிறது

திராவிட மாடுகள்
பொறுமை இழந்து
மண்ணைக் கிளறுகின்றன
எங்கோ ஒரு திராவிட மாடு
உக்கிரமாக கனைக்கிறது

நாம் ஒரு முடிவெடுத்தாக வேண்டும்

28. 5. 2017
இரவு 10. 48
மனுஷ்ய புத்திரன்

#dravidanadu

English summary
Manushya Puthiran's poem on Dravida Maadu also going viral on Social Medias.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X