For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை அரசின் அராஜக சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க வேண்டும்: வைகோ ஆவேசம்

இலங்கை அரசின் அராஜக சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மீனவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், இலங்கை அரசின் அராஜகமான சட்டத்தை நிறைவேற்றவிடாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தமிழர் கடலில் நீந்தி விளையாடி, படகுகளைச் செலுத்தி மீன்கள் செல்வத்தை வலைகளில் அள்ளியும், கடலின் ஆழ்மடியில் சிப்பிகளில் உறங்கும் முத்துக்களை எடுத்தும் தமிழகத்துக்கு வளத்தையும், செல்வத்தையும் வாரி வழங்கிய பரதவர்களாகிய மீனவ மக்களின் வாழ்வு 40 ஆண்டு காலமாக சிங்கள அரசின் கொடுமையால் சிதைந்து சின்னா பின்னமாகிறது.

 MDMK demonstration hold on december 16th at rameshwaram - vaiko

தமிழகத்தின் உரிமை பூமியான கச்சத் தீவினை 1974-ல் இந்திய அரசு சட்ட விரோதமாக சிங்கள அரசுக்கு தாரைவார்த்துக் கொடுத்து, தமிழக மீனவர்களின் வாழ்வை பலி பீடத்தில் நிறுத்தியது. ஒரு நாட்டின் குடிமகன், மற்றொரு நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டால், உயிரைப்பறி கொடுத்த நாடு வெகுண்டு வெளியுறவைத் துண்டிக்கும்.

ஆனால், ஆயிரக்கணக்கான முறை சிங்களக் கடற்படை தமிழர் கடலில் நுழைந்து, நமது கடல் பகுதியிலும், சர்வதேச கடல் பகுதியிலும் தமிழக மீனவர்களை தாக்குவதும், சுட்டுப் படுகொலை செய்வதும், படகுகளை உடைப்பதும், வலைகளைக் கிழித்து எறிவதும், மீன்கள் செல்வத்தைக் கொள்ளையடிப்பதும், பல நேரங்களில் தமிழக மீனவர்களின் ஆடைகளைக் களைந்து அம்மணமாக்கி அடித்துக் கடலில் வீசுவதும், மேலும் பல வேளைகளில் நமது மீனவர்களைக் கொண்டுபோய் இலங்கைச் சிறைகளில் வதைப்பதும், தமிழர்களின் படகுகளை அங்கே சிறை வைப்பதும் பெரும்பாலும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.

இந்தப் பின்னணியில், இன்னும் ஒரு பெரும் கொடூரமான அபாயம் தமிழக மீனவர்களின் தலைக்குமேல் பேரிடியாக விழக் காத்திருக்கிறது. ஆழிப் பேரலை உயிர்களை வாரிச் சுருட்டியதைப் போல தமிழக மீனவர்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக நரகப் படுகுழியில் தள்ள சிங்கள அரசு திட்டம் போட்டுவிட்டது. 1979 சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவந்து தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றுவதோடு, ஒரு படகுக்கு 7 இலட்சம் முதல் 7 கோடி வரை அபராதம் விதிக்கும் அக்கிரமமான சட்டத்தை 2017 ஜனவரியில் நாடாளுமன்றத்தில் அரங்கேற்ற ஆயத்தமாகிவிட்டது.

தமிழர்களின் நெஞ்சில் சூட்டுக்கோலைத் திணிக்கும் சிங்கள அரசின் நடவடிக்கையை தடுக்க வேண்டிய முழுப் பொறுப்பும், கடமையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் உண்டு என்பதை சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழக மீனவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், இலங்கை அரசின் அராஜகமான சட்டத்தை நிறைவேறவிடாமல் தடுக்கவும் மத்திய அரசு உடனடியாக செயல்பட வேண்டும். இந்த கோரிக்கை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி ராமேஸ்வரத்தில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK demonstration hold on december 16th at rameshwaram, said party chief vaiko
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X