For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கை விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள்: வைகோ பரபரப்பு அறிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையுடன் எதிர்ப்போக்கை கொள்ள வேண்டிய இந்திய அரசு கடமை தவறிவிட்டது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தீவில் தமிழ் இனப் பேரழிவை நடத்திய சிங்களப் பேரினவாத ராஜபக்சே அரசின் ராணுவ அமைச்சகத்தின் இணையதளத்தில், இந்தியப் பிரதமரையும், தமிழக முதல்வரையும் மிகவும் இழிவுபடுத்தி கருத்துப் படத்துடன் கட்டுரை வெளியிட்டதால், தமிழகத்தில் கட்சி எல்லைகள் தாண்டி பலத்த கண்டனமும், கொந்தளிப்பும் ஏற்பட்டது.

முடங்கி கிடந்த இந்திய அரசு

முடங்கி கிடந்த இந்திய அரசு

இச்செய்தியை அறிந்து கொண்ட பிறகும், இலங்கை அரசுக்குக் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் தரவேண்டிய இந்திய அரசு மூன்று நாட்கள் முடங்கிக் கிடந்தது. நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய போர்க்குரலும், தமிழ்நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சிகளும், வேறு வழி இல்லாமல் சிங்கள அரசைக் கண்டிப்பதாக வெளி விவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் ஒப்புக்குத் தெரிவித்தார். இலங்கை ராணுவ அமைச்சகம் வருத்தப்படுவதாகவும், நேற்றைய தினம் அதிபர் ராஜபக்சே நடந்ததற்கு வருந்துவதாகவும் கண் துடைப்பாக அறிவித்து உள்ளனர்.

சிங்களர் மாறமாட்டார்கள்

சிங்களர் மாறமாட்டார்கள்

சிங்கள அரசு ஒருக்காலும் தமிழ் இன விரோதப் போக்கை மாற்றிக் கொள்ளாது என்பதற்கு நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற சம்பவமே எடுத்துக்காட்டு. 2008, 2009 ஆண்டுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்தும், ஏராளமானவர்கள் சிங்கள இராணுவத்தால் கடத்தப்பட்டுக் காணாமல் போனது குறித்தும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து அமெரிக்கத் தூதரகம் கொழும்பில் ஏற்பாடு செய்து இருந்த துயர் களைய குறை கேட்கும் நிகழ்ச்சியில், தங்கள் துன்பம் தீர வழி பிறக்குமா? என்ற ஏக்கத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

புத்த பிட்சுகள் வெறியாட்டம்

புத்த பிட்சுகள் வெறியாட்டம்

காணாமல் போனவர்கள் உயிரோடு இருக்கின்றார்களா? அல்லது வதை முகாமில் சித்திரைவதை செய்யப்படுகிறார்களா? என்ற கவலை மேலிட்டவர்களாக அவர்கள் தங்கள் துயரங்களை அக்கூட்டத்தில் பதிவு செய்ய முற்படுகையில், புத்த பிட்சுகளின் தலைமையில் வன்முறையாளர்கள் கூட்டத்தில் புகுந்து கலவரம் செய்து உள்ளனர். மனிதாபிமானத்துடன் விசாரணை நடத்திய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகளை மிரட்டி உள்ளனர். இதனால் அந்தக் கூட்டத்தை நடத்த முடியாமல் போனது. துயர் கேட்கும் கூட்டத்தில், கலவரத்தில் ஈடுபட்ட சிங்களக் குண்டர்களுக்கு இலங்கை அரசின் காவல்துறையினர் ஆதரவாகவே நடந்து கொண்டனர்.

சர்வதேச நாடுகள் கண்டனம்

சர்வதேச நாடுகள் கண்டனம்

இலங்கையில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், ஜனநாயக அடிப்படையான பேச்சு உரிமைக் கூட்டம் நடத்துவதற்கான உரிமைக்கு உத்தரவாதம் வழங்கவும் இலங்கை அரசு முன்வர வேண்டும் என்றும், இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வடக்கு மாகாணத்தில் இருந்து வந்த தமிழர்கள் பத்திரமாக ஊர் திரும்ப பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கத் தூதரகம் அறிக்கை தந்து இருக்கிறது. இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து நாடுகள் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கூட்டு அறிக்கை தந்து இருக்கின்றன.

மோடி அரசு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை

மோடி அரசு கிஞ்சித்தும் கவலைப்படவில்லை

இந்த நாடுகளில் எல்லாம் ஈழத் தமிழர்களின் தொப்புள் கொடி உறவுகள் கோடிக் கணக்கில் குடிமக்களாக இல்லை. ஆனால், இந்தியாவின் தமிழ்நாட்டில் ஈழத் தமிழர்களின் ரத்த உறவுகள் ஏழரைக் கோடிப் பேர் வாழ்கிறோம். இலங்கைத் தீவில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை குறித்தோ, தற்போது மனித உரிமைகள் நசுக்கப்படுவது குறித்தோ இந்தியாவின் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கிஞ்சிற்றும் கவலைப்படுவதாகக் காணோம்.

மண்ணை தூவும் ராஜபக்சே

மண்ணை தூவும் ராஜபக்சே

உலகத்தின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காக, கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணையம் என்று ராஜபக்சே ஒரு விசாரணை ஆணையத்தை அமைத்தார். குற்றவாளியையே நீதிபதியாக்கும் அந்த ஆணையம், சிங்கள அரசுக்கு ஆதரவாகவே அறிக்கை தந்தது. மனித உரிமைக் கவுன்சிலையும், ஐ.நா. மன்றத்தையும் கிள்ளுக் கீரையாகச் சிங்கள அரசு நினைக்கிறது. மீண்டும் உலகத்தை ஏமாற்றும் நோக்கத்தோடு, தானே ஒரு விசாரணைக் குழுவை ராஜபக்சே இப்பொழுது அறிவித்து உள்ளார். இந்த விசாரணைக் குழுவினால் தமிழர்களுக்கு எந்த நீதியும் கிடைக்காது. வடக்கு-கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனவர்களைப் பற்றிய எந்த உண்மையும் வெளிவராது.

தமிழர்கள் நாதியற்று போனார்களா?

தமிழர்கள் நாதியற்று போனார்களா?

உலகத்தில் எத்தனையோ இனங்கள் அழிவுகளையும், அவலங்களையும் அடக்குமுறையாளர்களால் அனுபவித்தபோதும், அதற்கெல்லாம் உரிய நீதியை பல்வேறு கட்டங்களில் அனைத்துலக நாடுகளும், ஐ.நா. மன்றமும் வழங்கி வந்துள்ளன. ஆனால், ஈழத் தமிழர்களைப் பொறுத்தமட்டில் நாதியற்றுப் போனார்களா? நானிலத்தில் அவர்களுக்கு நீதியே கிடையாதா? என்ற கேள்விகள் விசுவரூபம் எடுக்கின்றன.

இனப்படுகொலைக்கு இந்தியா உடந்தையா?

இனப்படுகொலைக்கு இந்தியா உடந்தையா?

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த சிங்கள அரசின் கொடுஞ்செயல்கள் குறித்து விசாரணை செய்வதற்கு ஐ.நா. மன்றம் அமைத்த மூவர் குழுவினருக்கு இந்திய அரசு விசா அனுமதி மறுத்தது மன்னிக்க முடியாத குற்றம் மட்டும் அல்ல, ஈழத் தமிழ் இனப்படுகொலைக்கு உடந்தையாகச் செயல்படுகிற குற்றமும் ஆகும். புண்ணுக்குப் புனுகு பூசி விடலாம், லட்சக்கணக்கான தமிழர்கள் மண்ணுக்குள் புதைந்ததுபோல் நீதியும் புதைந்து போகட்டும், காலம் அனைத்தையும் மறக்கடித்து விடும் என்ற மனோநிலையில், இந்திய அரசின் போக்கு குறிப்பாக வெளிவிவகாரத்துறை அமைச்சகத்தின் போக்கு அமைந்து இருக்கிறது.

இளைஞர்களே எழுச்சி கொள்ளுங்கள்

இளைஞர்களே எழுச்சி கொள்ளுங்கள்

பலியான தமிழ் உயிர்களும், சிந்தப்பட்ட இரத்தமும், கொட்டப்பட்ட கண்ணீரும், பறிபோகும் தமிழர் தாயக நிலங்களும் உலகின் மனசாட்சியை உசுப்ப, உயிர்கொடை தந்த முத்துக்குமார்களின் தியாகமும் ஒருபோதும் வீண்போகாது. தாய்த் தமிழகத்தில் உள்ள இளைஞர்களும், மாணவர்களும், உலகெங்கும் உள்ள புலம்பெயர்வாழ் ஈழத் தமிழர்களும் தமிழ் இனப்படுகொலைக்கு காரணமானவர்களைக் கூண்டில் நிறுத்தவும், இருளின் பிடியில் தவிக்கும் ஈழத் தமிழர்களுக்கு நிம்மதியான விடியல் கிடைக்கவும் உறுதி கொள்வோம். இவ்வாறு அந்த அறிக்கையில் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

English summary
Mdmk general secratery Vaiko condemn central government for pro Srilanka stand and ask Tamil youngsters to stand by affected Tamils.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X