For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெற்றிமேல் வெற்றி குவித்து வாழ வேண்டும்... ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து!

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: திமுக தலைவராக பொறுப்பேற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து அறிக்கையில், ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையை படிப்படியாக சுட்டிக் காட்டியுள்ளார். இளைஞர் அணி தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மேயர், துணை முதல்வர், பொருளாளர், என ஸ்டாலினின் அரசியல் வாழ்வின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியையும் தெரிவித்து வைகோ வாழ்த்து கூறியுள்ளார். மேலும், வெற்றிமேல் வெற்றி குவித்து வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சி பொறுப்பினையும் ஏற்று பல்லாண்டு வாழ வேண்டும் வைகோ அந்த அறிக்கையில் என்று மனதார கூறியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து அறிக்கை இதுதான்:

உலக வரலாற்றில் எங்கும் காண முடியாத வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அரை நூற்றாண்டு காலம் தலைமை வகித்து வழிநடத்திய ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவு தமிழ்கூறும் நல்லுலகத்தை உலுக்கியது; திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்குத் தீராத் துன்பத்தை அளித்தது.

MDMK leader Vaiko has greeted newly selected DMK president MK Stalin

அண்ணன் கலைஞர் அவர்களின் தொண்டு தொடரவும், மக்கள் பணியிலும் திராவிட இயக்கத்திற்கு காவல் அரணாக இனம், மொழி, நற்றமிழ் நாடு காக்கும் சீரிய கடமைகளை நிறைவேற்றவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்றுள்ள ஆருயிர் சகோதரர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

"வளரும் பயிர் முளையிலே" என்ற முதுமொழிக்கு ஒப்ப, இளம் வயதிலேயே கோபாலபுரத்தில் இளைஞர் தி.மு.க., என்னும் சார்பு அமைப்பைத் தொடங்கி நடத்தி, மக்கள் திகலம் எம்.ஜி.ஆர். உள்ளிட்ட கழக முன்னணியினரை அழைத்துக் கூட்டங்கள் போட்டு, கழகத்திற்கு வலுசேர்த்த இளைஞர்தான் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆவார். 1975 இல் நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, திருமணம் ஆன ஐந்தாவது மாதத்தில் மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கொட்டடியில் அடைக்கப்பட்டார்.

சென்னை சிறையில் காவலர்களின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாகிய ஸ்டாலினைக் காப்பாற்ற முயன்ற முன்னாள் மேயர் சிட்டிபாபு, காவல்துறை குண்டாந்தடி தாக்குதலால் உயிர் இழக்கும் நிலைமை ஏற்பட்டது. அந்த இளம் வயதில் சிறை சித்ரவதைகளை தாங்கிக் கொண்டதால்தான் பின்னாளில் கழகத்திற்கு வலிய படைக்கலனாக, இளைஞர்களின் ஈட்டி முனையாக ஸ்டாலின் அவர்கள் வார்ப்பிக்கப்பட்டார்.

1980 ஜூலை 20 இல் மதுரை மாநகர் ஜான்சிராணி பூங்காவில் 'திமுக இளைஞர் அணி' துவக்கப்பட்டபோது, அதன் அமைப்பாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பினை ஏற்று, இளைஞர் படையை திறம்பட வழிநடத்தி கழகப் பாசறையின் தளபதியாக உயர்ந்தார். தி.மு.க. என்னும் ஆலமரத்துக்கு விழுதாக இருந்து தாங்கும் வகையில் கழக இளைஞர் அணியை வலிமை உள்ளதாக்கிட நாடெங்கும் அயராமல் சுற்றுப் பயணம் செய்து, அமைப்புப் பணிகளை முடுக்கிவிட்டார்.

1989 இல் தேசிய முன்னணி தொடங்கப்பட்டபோது, வெள்ளைச் சீருடை அணிந்த இளைஞர்களின் அணி வகுப்பிற்கு தலைமை தாங்கி, சகோதரர் ஸ்டாலின் பீடு நடை போட்டது இன்றும் என் நெஞ்சில் நிழலாடுகிறது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வருகை தந்த வி.பி.சிங் உள்ளிட்ட தலைவர்கள் தி.மு.கழகத்தின் இளைஞர் சக்தியைக் கண்டு வியந்து பாராட்டினார்கள்.

1989 ஆம் ஆண்டு முதன் முதலில் சென்னை ஆயிரம்விளக்குத் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்றத்தில் அடியெடுத்து வைத்த தளபதி ஸ்டாலின், அதே தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்று மக்கள் பணியாற்றினார். 1996 இல் சென்னை மாநகராட்சி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு, சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்றார். அதனால்தான் 2001 லும் இரண்டாவது முறையாக சென்னை மேயராகும் பெருமை அவருக்குக் கிடைத்தது.

அண்ணன் கலைஞர் அவர்களால் ஆட்சிப் பொறுப்புக்குப் பயிற்றுவிக்கப்பட்டு, உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், துணை முதல்வர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று, சிறப்பாக கடமையாற்றினார். தற்போதும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஜனநாயகக் கடமைகளை சீரிய முறையில் ஆற்றி வரும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் பாராட்டுகிறார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி செயலாளர், துணைப் பொதுச்செயலாளர், பொருளாளர் என்று தனது கடும் உழைப்பால், தியாகத்தால் படிப்படியாக உயர்ந்த தளபதி ஸ்டாலின், அண்ணன் கலைஞர் அவர்கள் உடல்நலம் குன்றியிருந்த நிலையில் செயல் தலைவராக பொறுப்பு ஏற்று, கழகத்திற்கு அரும்பணி ஆற்றினார்.

தளபதி ஸ்டாலின் அவர்கள் சோதனைகளை எல்லாம் கடந்து தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏறுநடை போடுவதற்கு நாடெங்கும் சுற்றிச் சுழன்று பணியாற்றியதும், குமரி முனையில் தொடங்கி சென்னை வரை நமக்கு நாமே பயணத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களைச் சந்தித்துக் கழகத்திற்கு வலிவும் பொலிவும் சேர்த்தார்.

திராவிட இயக்கம் அறைகூவல்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் திராவிட இயக்கத்தைப் பாதுகாக்க தமிழ்நாட்டின் நலன் காக்கவும், மாபெரும இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பொறுப்பை ஏற்கும் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வெற்றி மேல் வெற்றி குவித்து, வரும் காலத்தில் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பினையும் ஏற்று பல்லாண்டு வாழ்க! வாழ்க! என வாழ்த்துகிறேன்.

கல்லூரி மாணவர் பருவத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் அன்பைப் பெற்றவராக, ஆருயிர் அண்ணன் கலைஞர் அவர்களுக்கு பக்க பலமாக தக்க துணையாக இருந்து கழகத்திற்கு பெருமை சேர்த்தவர் என்னருமை நண்பர் துரைமுருகன். பல ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி அனுபவம் பெற்றவர். அமைச்சர் பொறுப்பை ஏற்று, கலைஞர் அவர்களின் கண் அசைவுக்கு ஏற்ப பணியாற்றி, அமைச்சர் பதவிக்கு பெருமை சேர்த்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் பொறுப்பை ஏற்கும் நண்பர் துரைமுருகன் அவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

English summary
MDMK leader Vaiko has greeted newly selected DMK president MK Stalin.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X