For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

11 மணிக்குள் கடைகளை மூடச் சொன்னால் எப்படி?... கொந்தளிக்கும் மதிமுக

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தீபாவளி பண்டிகை நெருங்கும் சூழலில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவுள்ள வணிக நிறுவனங்களை இரவு 11மணிக்குள் மூடி விடவேண்டும் என்று காவல்துறையினர் கெடுபிடி செய்வதற்கு மாவட்ட ஆட்சியாளர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உடனடியாக தடை விதிக்கவேண்டும் என்று தூத்துக்குடி மதிமு மாவட்ட செயலாளர் எஸ்.ஜோயல் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள ஜோயல் கோரிக்கை மனு:

MDMK opposes Tuticorin SP's order to closure shops by 11 pm

தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள், துறைமுகம், அரசு-தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ளன. தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள், கல்வி நிறுவனங்களில் பயின்றுவரும் மாணவ-மாணவியர்கள், பலபகுதிகளில் இருந்துவரும் சுற்றுலாப்பயணிகள் என லட்சக்கணக்கானவர்கள் தூத்துக்குடிக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர்.

இவ்வாறு வரும் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் இரவு நேரங்களில் பயணம் செய்யும் நேரத்தில் தங்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மற்றும் தேவையான பொருட்களை வாங்குவதற்கு பஸ் நிலையம், ரயில் நிலையம் என பொதுஇடங்களிலுள்ள வணிக நிறுவனங்கள் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர் உழைப்பாளர்களான வியாபாரிகளின் வியாபாரத்தை முடக்கும் வகையில் இரவு 11மணிக்குள் வணிக நிறுவனங்களை மூடிவிடவேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பித்து, இதனை நடைமுறையில் கெடுபிடியாக செயல்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்திலுள்ள வணிக நிறுவனங்களை இரவு 11மணிக்குள் மூடிவிடவேண்டும் என்று தமிழக அரசு இதுவரை எந்தவிதமான சட்டம் இயற்றவோ அல்லது அரசாணை மூலமாக இதுவரை எந்த உத்தரவையும் காவல்துறைக்கு பிறப்பிக்கவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இரவு 11மணிக்கு மேல் வணிகர்கள் வியாபாரம் செய்யக்கூடாது என்று கூறுவது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தினை அவமதிக்கும் செயல் மட்டுமின்றி, ஜனநாயக நாட்டில் வணிகர்களின் அடிப்படை உரிமையை தட்டிப்பறிக்கின்ற சர்வாதிகார செயலாகும்.

பொதுமக்கள் கூடும் இடங்களில் இரவில் திறந்து இருக்கும் வணிக நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பையும், பெண்கள் தைரியமாக வெளியில் செல்லலாம் என்ற தைரியத்தையும் தருகின்றன. ஆனால், காவல்துறையோ கடைகள் திறந்து இருப்பதால் தான் கொள்ளை, கொலை போன்ற சம்பவங்கள் நடப்பதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்ட பொது இடங்களில் இதுமாதிரியான நிலையே நிலவி வருவதால் வியாபாரிகள், சில்லரை வணிகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது தீபாவளி பண்டிகை விற்பனை மும்முரமாக நடைபெற்றுவரும் சூழலில் மாவட்ட காவல்துறையினரின் இந்த வாய்மொழி உத்தரவால் வணிகர்கள் சொல்லமுடியாத அளவிற்கு பெரும் துயரத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

எனவே, தமிழக அரசும், மாவட்ட ஆட்சியாளரும் மாவட்டத்தில் வணிகர்கள், பொதுமக்களை பாதிக்கும் மேற்படி வாய்மொழி உத்தரவை உடனடியாக வாபஸ் பெற்று வணிகர்கள் சுதந்திரமாக வணிகம் செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுத்து மாற்று உத்தரவினை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பிறப்பிக்கவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இல்லாதபட்சத்தில், பாதிக்கப்பட்டு வரும் தொழிலாளர்கள், பயணிகள், பொதுமக்கள் மற்றும் வணிகர்களின் நலன் கருதி, எங்கள் தலைவர் வைகோ அவர்களின் ஆலோசனையை பெற்று, இதுதொடர்பான பொதுநலவழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று ஜோயல் தெரிவித்துள்ளார்.

English summary
MDMK has opposed Tuticorin SP's order to closure shops by 11 pm and urged the district collector to cancel the order of the SP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X