For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெனிவாவில் வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் முயற்சி- சென்னை இலங்கை தூதரகம் முன்பு மதிமுக ஆர்ப்பாட்டம்

ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து பேசியதற்காக ஜெனிவாவில் வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டதை கண்டித்து சென்னை இலங்கை தூதரகம் முன்பு நாளை மதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து பேசியதற்காக ஜெனிவாவில் வைகோ மீது சிங்களர்கள் தாக்குதல் நடத்த முயற்சித்ததைக் கண்டித்து சென்னையில் இலங்கை தூதரகம் முன்பு நாளை மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.

இதுகுறித்து மதிமுக அவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி கூறியதாவது:

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனிவா நகரில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைமையகத்தில், மனித உரிமை ஆணையத்தின் 36 ஆவது அமர்வு செப்டம்பர் 11 ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த அமர்வில் பங்கேற்று ஈழத்தமிழர்களின் உரிமைக் குரலை ஒலிப்பதற்காக ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ செப்டம்பர் 17 ஆம் தேதி ஜெனிவா சென்றடைந்தார்.

செப்டம்பர் 18 ஆம் தேதி அன்று, ஈழத்தமிழர்கள் ஜெனிவாவில் நடத்திய பிரம்மாண்டமான பேரணியில் வைகோ உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 36 ஆவது அமர்வில் செப்டம்பர் 18 ஆம் தேதி உரையாற்றிய வைகோ, இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட ஈழத் தமிழர்களின் சோக வரலாற்றை எடுத்துரைத்தார்.

 60 ஆண்டுகள்

60 ஆண்டுகள்

ஈழத்தமிழர்கள்தான் அந்த மண்ணின் பூர்வகுடி மக்கள் என்பதையும், வரலாற்றின் வைகறை பொழுதிலிருந்து தனி அரசு நடத்திய வீர வரலாறு தமிழர்களுக்கு உண்டு என்பதையும் சான்றுகளுடன் சுட்டிக்காட்டினார். இலங்கையிலிருந்து ஆங்கிலேயர்கள் வெளியேறிய 1948 இல் சிங்களவர் கையில் ஆட்சி அதிகாரம் வந்த பிறகு கடந்த 60 ஆண்டு காலமாக ஈழத்தமிழர்கள் சிங்கள இனவாத அரசால் ஒடுக்குமுறைக்கு ஆளானதையும், கல்வி, வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்பட்டு, மொழி, இன, பண்பாட்டு அடையாளங்கள் அழிக்கப்பட்டதையும், ஈழத்தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காக தந்தை செல்வா தலைமையில் நடத்திய அறவழிப் போராட்டங்களை சிங்கள அரசு மிகக் கொடூரமான முறையில் ஒடுக்கியதையும் வைகோ அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

 ஆயுதம் தாங்கிய போராட்டம்

ஆயுதம் தாங்கிய போராட்டம்

ஈழத்தமிழர்களின் அரசியல் சுயநிர்ணய உரிமையை நிலைநாட்ட ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு தள்ளப்பட்டு, மாவீரர் திலகம் பிரபாகரன் தலைமையில் விடுதலைப் புலிகள் இயக்கம் போராடியதையும், ஈழத்தமிழர்களை பூண்டோடு கருவறுக்க 2009 இல் ஜனவரி முதல் மே மாதம் வரையில் இராஜபக்சே அரசு அப்பாவி தமிழர்களை இலட்சக்கணக்கில் கொன்று குவித்ததையும் வைகோ எடுத்துரைத்து, ஈழத்தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இனப் படுகொலை நடத்திய சிங்கள அரசு மீது சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும், தமிழர்கள் இறையாண்மை உள்ள அரசை அமைப்பதற்கு ஐ.நா.மன்றம் உலகின் பல நாடுகளில் நடத்தியது போன்று தமிழ் ஈழம் அமைவதற்கும் பொது வாக்கெடுப்பு ஒன்றை நடத்த வேண்டும் என்றும் வைகோ அவர்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் முழங்கினார்.

 மூன்று முறை உரையாற்றிய வைகோ

மூன்று முறை உரையாற்றிய வைகோ

இக்கூட்டத்தில் மூன்று முறை உரையாற்றிய வைகோ அவர்கள், ஐ.நா . மனித உரிமைகள் ஆணையம் அரங்கில் நடைபெற்ற ஆக்கிரமிப்புக்கு உள்ளான நாடுகளான தமிழ் ஈழம், குர்தீஸ்தான், மேற்கு சகாரா, பாலஸ்தீனம், தெற்கு ஏமன், பலுசிÞதான் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்திலும் ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை எடுத்து வைத்து ஐ.நா. மன்றம் தமிழ் ஈழத்துக்கு பொது வாக்கெடுப்பு நடத்துகின்ற நாள் வந்தே தீரும், உலக வரைபடததில் தமிழ் ஈழ நாடு இடம் பிடிக்கும் என்று முழக்கமிட்டார்.

 இறையாண்மையை மீட்க...

இறையாண்மையை மீட்க...

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள பல்வேறு நாட்டுப் பிரதிநிதிகளுடன் தனியாக உரையாடிய வைகோ, ஈழத்தமிழர்களின் அரசியல் இறையாண்மையை மீட்டெடுக்க வேண்டியதன் தேவையை எடுத்துக்கூறி ஆதரவு திரட்டினார்.

 தொப்புள்கொடி உறவு

தொப்புள்கொடி உறவு

இந்நிலையில்தான் செப்டம்பர் 25 ஆம் தேதி, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் முதன்மை அரங்கில் நடந்த கூட்டத்தில் வைகோ அவர்கள் இருமுறை உரையாற்றிவிட்டு வந்த நேரத்தில் சிங்களவர்கள் ஆறேழு பேர் வைகோ அவர்களைச் சூழ்ந்துகொண்டனர். அதில் ஒரு சிங்களப் பெண்மணி இலங்கைப் பிரஜை அல்லாத நீ எப்படி இலங்கையைப் பற்றிப் பேசலாம்? என்று கேட்டார். எங்களுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொப்புள்கொடி இரத்த உறவு இருக்கிறது. எனக்கு பேச உரிமை இருக்கிறது என்று பதிலடி கொடுத்த வைகோவை சிங்களர்கள் பலர் சூழ்ந்து கொண்டு தாக்க முயற்சித்து உள்ளனர்.

 இலங்கை இனவெறி

இலங்கை இனவெறி

பன்னாட்டு அரங்குகளில் ஈழத்தமிழர்களின் குரலை எழுப்ப முடியாமல் ஒடுக்கி விடலாம் என்று எக்காளமிட்ட சிங்கள அரசு, மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, ஐ.நா.வில் ஈழத்தின் குரலை ஓங்கி ஒலிப்பதை தாங்க முடியாமல் ஆத்திரப்பட்டு, வைகோ மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவி விட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலேயே நடைபெற்ற இந்த நிகழ்ச்சி ஐ.நா. மன்றத்துக்கு விடுக்கப்பட்ட அறைகூவல் ஆகும். இலங்கை இனவெறி அரசுக்கு மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

 இந்திய அரசு கண்டிக்க வேண்டும்

இந்திய அரசு கண்டிக்க வேண்டும்

ஈழத்தமிழர்களின் நீதிக்காக அரசியல் சுயநிர்ணய உரிமைக்காக ஐ.நா. மன்றத்தில் உரிமை முழக்கமிடும் வைகோ அவர்களின் முழு பாதுகாப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையம் உறுதிசெய்ய வேண்டும். இந்தியாவின் குடிமகன், நாடாளுமன்றத்தில் 24 ஆண்டு காலம் உறுப்பினராக பணியாற்றிய வைகோ அவர்கள் மீது நடந்த தாக்குதல் முயற்சியை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

 நாளை ஆர்ப்பாட்டம்

நாளை ஆர்ப்பாட்டம்

ஜெனிவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய தலைமையகத்தில் வைகோ அவர்கள் மீது தாக்குதல் நடத்த கைக்கூலிகளை ஏவிவிட்ட சிங்கள அரசைக் கண்டித்து செப்டம்பர் 27 நண்பகல் 11 மணிக்கு சென்னையில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
MDMK to portest tomorrow in Srilankan Embassy to condemn attack attempt on Vaiko as she expressed his statement about tamil elams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X