For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முழு மதுவிலக்கு கோரி டிச.4-ல் மதிமுக ஆர்ப்பாட்டம்: வைகோ

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, டிசம்பர் 2-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றது. மேலும் சில அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. ஆனால், அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் மக்கள் நலனில் துளியும் அக்கறையின்றி இருக்கிறார்கள்.

MDMK to stage demonstration total liquor ban on December 4

மது அருந்துவது இழிவானது என்ற நிலைமை மாறி, இன்றைக்கு அதுவே கொண்டாடப்பட வேண்டிய அன்றாட நிகழ்வாக ஆகிவிட்டது. இதனால் தமிழ்ச் சமூகம் மீள முடியாத சீரழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. தமிழக அரசு வருவாய் ஈட்டுவதற்குக் கோடிக்கணக்கான ஏழை, எளிய, உழைக்கும் மக்களின் குடும்பங்களைச் சுரண்டுவதை நியாயப்படுத்த முடியாது. தனி மனிதனின் உயர்வும் தாழ்வும் அவன் வாழும் சமுதாயத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் அவனது பழக்கங்களைச் சார்ந்துதான் அமைகின்றன. மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் உடல், உள்ளம், பண்பு நலன்கள் அழிவது மட்டுமின்றி, அவர்களை நம்பி உள்ள குடும்பம், அவர்கள் சார்ந்துள்ள சமுதாயம் ஆகியவற்றின் அழிவிற்கும் காரணமாகின்றது.

உயர்ந்தோங்கிய சிறப்புகளையும், பழம்பெருமைகளையும் தாங்கி நிற்கும் தமிழ்ச் சமூகம் பண்பாட்டு சீரழிவால் சிதைந்து வருவதற்கு மதுப் பழக்கமே காரணமாக உள்ளது. தமிழ்நாடு அரசு வீதிக்கு வீதி திறந்து வைத்துள்ள மதுக்கடைகளில் வளர் இளம் பருவத்தில் உள்ள இளைஞர்கள், பள்ளிச் சீருடைகளுடன் நிற்கின்ற கொடுமைகளைப் பத்திரிகைகள் படம்பிடித்துக் காட்டி வருகின்றன.

ஓர் ஆய்வு நிறுவனம் (Global Survey) எடுத்த கள ஆய்வுகளில் இந்தியாவிலேயே மதுப் பழக்கத்திற்கு அடிமையான மாநிலங்களில், 21 விழுக்காட்டுடன் உத்தரப்பிரதேசம் முதல் இடத்திலும், 16 விழுக்காடு பெற்று தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளது. இதிலும் தமிழ்நாட்டில் 13 வயது முதல் 16 வயது வரை உள்ள இளம் தலைமுறையினர் 11 விழுக்காடு பேர் மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவலும் ஆய்வறிக்கையின் மூலம் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் தினமும் 200 சாலை விபத்துகள் நடக்கின்றன. இவற்றில் 80 விழுக்காடு விபத்துகளுக்கு மதுப் பழக்கம்தான் முக்கியக் காரணியாக இருக்கிறது. ஆண்டுதோறும் டாஸ்மாக் வருமானம் உயர்ந்து வருவதைப்போல குடிபோதையினால் ஏற்படும் விபத்துகளும் உயர்ந்து வருகின்றன. 2003-ஆம் ஆண்டில் குடிபோதை விபத்துகளின் எண்ணிக்கை 9,275 ஆக இருந்தது. பத்து ஆண்டுகளில் 2013-ஆம் ஆண்டில் 17,000 ஆக உயர்ந்து விட்டது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கும் மதுப் பழக்கம்தான் முதன்மைக் காரணமாக காவல்துறையால் சொல்லப்படுகிறது. சின்னஞ்சிறு பிஞ்சுக் குழந்தைகள்கூட குடிவெறியர்களின் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் அவலநிலை அதிகரித்துவிட்டது.

மதுக்கடைகளால் 'மனிதவள இழப்பு' ஈடுசெய்ய முடியாத அளவுக்குப் போய்க் கொண்டிருக்கிறது. குடிப் பழக்கத்தால் சமூக சீர்கேடுகள் பரவி வருவது மட்டுமின்றி, உடல்நலன் பாழாகி நோய்கள் பல வகைகளில் உருவாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள மதுப்பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்களில் 45 விழுக்காடு பேர் உயர் இரத்த அழுத்த நோய்க்கு ஆளாகி இருப்பதாக ஓர் ஆய்வு கூறுகிறது.

எனவே, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தைப் பாதுகாக்கவும், மரபுவழி பண்பாட்டுப் பெட்டகமான தமிழகத்தை சீரழிவுகளிலிருந்து மீட்கவும், தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டிசம்பர் 4 ஆம் நாள் வியாழக்கிழமை காலை 11 மணி அளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் அறப்போர் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தலைநகர் சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK general secretary Vaiko said the statement to stage protest against liquor on December 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X