For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

23 வருசமாச்சு.. வைகோவின் மதிமுக பிறந்து!

Google Oneindia Tamil News

சென்னை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது 23வது ஆண்டு விழாவை இன்று பெரும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் கொண்டாடிக் கொண்டுள்ளது.

கட்சியின் தலைமை அலுவலகமன சென்னை தாயகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு தொடக்க விழா நடைபெற்றது. மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, சட்டத்துறைச் செயலாளர் ஜி.தேவதாஸ் ஆகியோர் அண்ணா, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, கொடி ஏற்றி, இனிப்புகள் வழங்கினார். மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட திரளானோர் இதில் கலந்து கொண்டனர்.

MDMK turns 23

1994ம் ஆண்டு பிறந்த கட்சி மதிமுக. திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட வைகோ தனது ஆதரவாளர்களுடன் மதிமுகவை தொடங்கினார். ஆனால் கட்சி தொடங்கியதிலிருந்து இதுவரை சட்டசபைக்கு ஒருமுறை கூட வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை.

3 முறை ராஜ்யசபா எம்.பியாக இருந்துள்ள வைகோ, 2 முறை லோக்சபா எம்.பியாகவும் இருந்தவர். கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாதம் சிறைவாசம் அனுபவித்தவர்.

சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் பதவி முதல் எம்.பி பதவி வரை பல நிலைகளைப் பார்த்தவர். இவருக்குக் கிடைக்க வேண்டும் என்று பலரும் எதிர்பார்த்த மத்திய அமைச்சர் பதவியை மட்டும் இவர் வகிக்கவே இல்லை. பலருக்கும் இது இன்னும் கூட ஒரு ஏமாற்றமாகவே உள்ளது. அதேபோல முதல்வர் பதவிக்குத் தகுதியான ஒரு தலைவர் என்ற பெருமையும் நீண்ட காலமாகவே "பென்டிங்கில்" உள்ளது.

1964ல் அரசியலில் நுழைந்த வைகோ அரசியலில் பொன் விழா கண்டவர். தமிழகத்தின் பல உயிர் நாடிப் பிரச்சினைகளில் எல்லோருக்கும் முன்பு உரக்கக் குரல் கொடுத்தவர், முதலில் போராட்டக் களம் புகுந்தவர். ஈழத் தமிழர் பிரச்சினையாகட்டும், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையாகட்டும், மீனவர்கள் பிரச்சினையாகட்டும்.. மது விலக்குப் போராட்டமாகட்டும். வீறு கொண்டெழுந்து போராட்டக் களம் கண்டவர் வைகோ.

இப்படி பல்வேறு சவால்களையும், சண்டைகளையும் சந்தித்து 23 வருடம் வரை கட்சியைக் கொண்டு வந்து விட்டார் வைகோ. இடையில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், நாஞ்சில் சம்பத் என பிரபலமானவர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறிச் சென்று விட்ட நிலையிலும் கூட கட்சியை இன்னும் உயிர்ப்புடன் வைத்துள்ளார்.

தற்போது இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த சட்டசபைத் தேர்தலில் மதிமுகவும், வைகோவும் பம்பரம் போல சுழன்று செயல்பட்டுக் கொண்டுள்ளனர். மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற மக்கள் நலக் கூட்டணி, தேமுதிக மற்றும் தமாகாவுடன் இணைந்து அமைத்துள்ள 3வது அணி தமிழக அளவில் மட்டுமல்லாமல் தேசிய அளவிலும் பெருத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அணியை வெற்றி பெற வைக்க உறுதி பூண்டுள்ள வைகோ புயல் போல சுழன்றாடிக் கொண்டுள்ளார் தேர்தல் களத்தில். பெரும் பரபரப்பான, மிக முக்கியமான கால கட்டத்தில் மதிமுக உள்ளது. இந்த நிலையில் அது தனது 23வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறது.

English summary
MDMK has turned 23 years in politics. Party leaders celebrated the beginnig of the 23rd year today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X