For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

7 தமிழரை பொங்கலன்று விடுவிக்க வேண்டும்.. மதிமுக மா.செக்கள் கோரிக்கை

Google Oneindia Tamil News

திருச்சி: பொங்கல் நாளன்று ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனைக்காலம் முடிந்தும் கூட தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை கழக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில், திருச்சியில் நடைபெற்றது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை குறித்த விவரம்:

கரும்பு கொள்முல் விலை

கரும்பு கொள்முல் விலை

2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா அரசு பொறுப்பு ஏற்றதில் இருந்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் தன்னிச்சையாக கரும்பு கொள்முதல் விலையை தீர்மானித்து வருகிறது. 2013 - 14 ஆம் ஆண்டு தமிழக அரசு கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ 2550 என்று அறிவித்தது. அரசு அறிவித்த கரும்பு கொள்முதல் விலையை கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மட்டுமே விவசாயிகளுக்கு வழங்கின. ஆனால், தனியார் சர்க்கரை ஆலைகள் ரூ 2250 மட்டுமே வழங்கின. இதனால் கரும்பு விவசாயிகள் வருவாய் இழப்புக்கு ஆளாகி பாதிக்கப்பட்டனர்.

2 ஆண்டுகளாக நிலுவை

2 ஆண்டுகளாக நிலுவை

2013 - 14, 2014 - 15 கரும்பு அரவைப் பருவத்திற்கு விவசாயிகளுக்கு சேர வேண்டிய 964 கோடி ரூபாய் நிலுவைத் தொகை இரண்டு ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. கரும்பு நிலுவைத் தொகையை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றுத்தரக்கோரி கரும்பு விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால் ஜெயலலிதா அரசு கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கதாகும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ 3000 வழங்கப்படும் என்று ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டது.

முடியும் போதாவது தரலாமே

முடியும் போதாவது தரலாமே

அதிமுக அரசு முடியும் தருவாயில் இருக்கும்போது கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும். விவசாயிகளுக்கு இரண்டு ஆண்டுகளாக கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை 964 கோடி ரூபாயை சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பெற்றத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு ஆண்டுக்கான முத்தரப்பு பேச்சுவார்த்தை உடனே நடத்தி, கரும்பு கொள்முதல் விலையை தீர்மானிக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

நெல் கொள்முதல் விவகாரம்

நெல் கொள்முதல் விவகாரம்

இயற்கை இடற்பாடுகளை சந்தித்த விவசாயிகள் காவிரி பாசனப் பகுதிகளில் உற்பத்தி செய்த நெல்லை நியாயமான முறையில் கொள்முதல் செய்வதற்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

ராஜீவ் கொலையாளிகள்

ராஜீவ் கொலையாளிகள்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் அநியாயமாக தண்டிக்கப்பட்டு, கடந்த 24 ஆண்டுகளாக பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இம்மூவரும் தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் அப்போதைய தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு, பிப்ரவரி 18, 2014 இல் மூவரின் தூக்குத் தண்டனையை இரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.

சீராய்வு மனு

சீராய்வு மனு

இந்தத் தீர்ப்பை எதிர்த்து அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. மீண்டும் காங்கிரஸ் கூட்டணி அரசு மறு சீராய்வு மனு தாக்கல் செய்ததை விசாரித்த தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான நீதிபதிகள் தாகூர், அனில் ஆர்.தவே, ரஞ்சன் கோகேய், சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்தது சரியே என்று ஜூலை 29, 2015 இல் தீர்ப்பளித்தது. ஆனால், இத்தீர்ப்புக்கு முன்பு பிப்ரவரி 19, 2014 இல் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேரறிவாளன், சாந்தன், முருகன் மற்றும் நளினி, ராபர்ட்பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக அமைச்சரவையைக் கூட்டி முடிவெடுத்தது.

மத்திய அரசுதான் விடுவிக்க முடியும்

மத்திய அரசுதான் விடுவிக்க முடியும்

இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் தண்டனை குறைக்கப்பட்ட கைதிகளை மத்திய அரசின் ஒப்புதலுடன்தான் மாநில அரசு விடுதலை செய்ய முடியும். எனவே இந்த 7 பேரையும் தமிழக அரசு விடுதலை செய்ய முடியாது என்று டிசம்பர் 2, 2015 இல் தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதேநேரம் தண்டனை குறைப்பு, மன்னிப்பு முதலியவற்றை வழங்குவதற்கு இந்திய அரசியல் சட்டப்பிரிவு 72 குடியரசுத் தலைவருக்கு வழங்கியிருக்கும் அதே அதிகாரம் அரசியல் சட்டப்பிரிவு 161ன் படி மாநில ஆளுநருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது.

161வது பிரிவைப் பயன்படுத்தி

161வது பிரிவைப் பயன்படுத்தி

இதில் மத்திய மாநில அரசுகளின் அறிவுரையின்படியே குடியரசுத் தலைவரும், ஆளுநரும் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே வழிகாட்டுதல் அறிவித்துள்ளது. எனவே உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி அரசியல் சட்டப்பிரிவு 161ஐ பயன்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்கு தமிழக முதல்வர் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும். கால் நூற்றாண்டுகாலமாக சிறையில் வாடும் இவர்களை இந்த ஆண்டு பொங்கல் திருநாளில் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் வலியுறுத்துகிறது.

English summary
MDMK district secretaries meeting has urged the centre and state govts to release 7 Rajiv convicts on Pongal day
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X