For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவில் ஜெ., ஓ.பி.எஸ்.க்கு எவ்வளவு ஆதரவு என்று ஏன் கணக்கெடுப்பு நடத்தவில்லை? கருணாநிதி கேள்வி

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: அ.தி.மு.க. விலே ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பேர் ஆதரவு? ஓ.பன்னீர் செல்வத்திற்கு எத்தனை பேர் ஆதரவு? என்றா கேட்டிருக்கிறார்கள். தி.மு. கழகத்தில் மட்டும் இரண்டு பேரைக் குறிப்பிட்டு எதற்காக கணக்கெடுக்க வேண்டும். கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது தான் கருத்து கணிப்பு எடுத்து வெளியிட்டவர்களின் நோக்கமா? என்று தேர்தல் கருத்துக் கணிப்பு குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி.

இதுகுறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

கருத்துக் கணிப்பு என்ற பெயரிலே யாரோ சிலர் வெளியிடுகிறார்கள். அதனால் எந்தப் பயனும் விளைவதில்லை. அதை நான் நம்புவதுமில்லை. உண்மையில் அவர்களே மோதலை விலை கொடுத்து வாங்குவதைப் போல வெளியிடுகிறார்கள்.

Medias targeting DMK: Karunanidhi

உதாரணமாக கருத்துக் கணிப்பு எடுத்தவர்கள், முதலமைச்சர் பதவி தி.மு.க.வுக்குக் கிடைக்குமா? அ.தி.மு.க. வுக்குக் கிடைக்குமா? தே.மு.தி.க. வுக்குக் கிடைக்குமா? என்று கணக்கெடுத்து அறிவிப்பது தான் முறை. யார் முதல்வர் என்று, அ.தி.மு.க. விலே ஜெயலலிதா பெயரை வெளியிட்டுவிட்டு, தி.மு.க. என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக, கருணாநிதிக்கு எத்தனை பேர் ஆதரவு? ஸ்டாலினுக்கு எத்தனை பேர் ஆதரவு? என்று அவர்களே ஒரே கட்சியிலே இரண்டு பெயரைக் குறிப்பிட்டு, எதற்காக பிரச்சினையை உண்டாக்குகின்ற வகையில் கருத்துக் கணிப்பை வெளியிட்டிருக்கிறார்கள்?

அ.தி.மு.க. விலே ஜெயலலிதாவுக்கு எவ்வளவு பேர் ஆதரவு? ஓ. பன்னீர் செல்வத்திற்கு எத்தனை பேர் ஆதரவு? என்றா கேட்டிருக்கிறார்கள். தி.மு. கழகத்தில் மட்டும் இரண்டு பேரைக் குறிப்பிட்டு எதற்காக கணக்கெடுக்க வேண்டும். கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டுமென்பது தான் கருத்து கணிப்பு எடுத்து வெளியிட்டவர்களின் நோக்கமா?

அதுவும் தேர்தல் நெருங்கு வதற்கு முன்பாகவே இப்படிப்பட்ட குழப்பத்தை ஏற்படுத்த எதற்காக முனைகிறார்கள்? திராவிட முன்னேற்றக் கழகத்திலே யார் முதலமைச்சர் என்று நாங்களே கவலைப்படாத போது, கருத்துக் கணிப்பு எடுக்கின்றவர்களுக்கு ஏன் அக்கறை?

தம்பி ஸ்டாலினே பல முறை கழகத் தலைவர் கருணாநிதி தான் ஆறாவது முறையும் முதலமைச்சராக வருவார் என்று பல முறை சொன்ன பிறகும் வம்பு வளர்ப்பதில் அவர்களுக்கு என்ன அக்கறை? அதனால் ஸ்டாலினுக்குத் தான் எப்படிப்பட்ட தர்ம சங்கடம்? அவர் கழகமே என் மூச்சு என்று அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கிறார். அவரை ஏன் இப்படியெல்லாம் வேதனைப்படுத்துகிறார்கள்?

சில பத்திரிகையாளர்கள் மேலும் மிகுந்த அக்கறையோடு, கழகத்திலிருந்து நீக்கி வைக்கப்பட்டுள்ள, என் மகன் மு.க. அழகிரி சென்னை வருகிற விமானம் எப்போது வருகிறது என்று தெரிந்து கொண்டு, விமான நிலையத்திற்கே சென்று இந்தக் கருத்துக் கணிப்பு பற்றி கேள்வி கேட்கிறார்கள் என்றால், அவர்களுக்கு ஏன் இந்த திடீர் அக்கறை?

அந்தப் பேட்டிக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து சில ஏடுகள் வெளியிடுகின்றன என்றால், அவர் மீது உள்ள அக்கறை காரணமாகவா? அவரும் தன் தம்பி மீதுள்ள சொந்த கோபத்தின் காரணமாக, என்னைப் புகழ்ந்து கூற, அதனால் என்ன பயன்? எதிர்ப்பாளர்களுக்கு இடம் கொடுத்து விடுகிறது!

இருவருக்கும் இடையே புகுந்து, கழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயலுவோருக்கு இடம் கொடுத்ததாக ஆகி விடுகிறது. டி.கே.எஸ். இளங்கோவனின் பேட்டியையும், மு.க. அழகிரியின் பேட்டியையும் நாளேடு (தமிழ் நாளேடு ஒன்று) முதல் பக்கத்தில் கொட்டை எழுத்திலே வெளியிடுகிறது என்றால், எந்த அளவுக்கு அவர்களுக்கு நம்மீது குரோதம் என்பது புரிகிறதா? அல்லவா?

"பத்திரிகா தர்மம்"என்பதையே அடியோடு குழியிலே தோண்டி புதைத்து விட்டு, இப்படிப்பட்ட சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வரும் அப்படிப்பட்ட ஏடுகளுக்கு நாமே இரையாகி விடலாமா? இப்படியெல்லாம் செய்து கழகச் செயல்வீரர்களின் கவனத்தைத் திருப்ப முயலுகிறார்கள்.அத்தகைய முயற்சிகளுக்கு கழகத்தவர்கள் இரையாகக் கூடாது, இரையாக வேண்டாம் என்பதற்காகவே இந்தக் கடிதம்!

ஒருமுறை திருச்சியிலே நடைபெற்ற பொதுக்கூட்டத்திலே, அறிஞர் அண்ணா அவர்களுடைய மறைவிற்குப் பிறகு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், தந்தை பெரியார் அவர்கள் பேசினார்கள். அப்போது சொன்னார், ``அண்ணாத்துரை சொன்னார் என்று கருணாநிதியும், அந்தக் கட்சியிலே உள்ளவர்களும் நாம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்றையும் காப்பாற்ற வேண்டும் என்று அடிக்கடி சொல்கிறார்கள். நான் கருணாநிதிக்கு மாத்திரம் அல்ல, கருணாநிதி தலைமையிலே இருக்கின்ற கட்சித் தொண்டர்களுக்கெல்லாம், கட்சித் தோழர்களுக்கெல்லாம் சொல்வேன், நீங்கள் கடமையை மறந்தாலும் மறந்து விடுங்கள், கண்ணியத்தை நீங்கள் போற்றாமல் விட்டாலும் விட்டு விடுங்கள்.

ஆனால் கட்டுப்பாடு; அதை மாத்திரம் துறந்து விடாதீர்கள் என்று நான் கட்சித் தோழர்களுக்கு - தி.மு.க. நண்பர்களுக்கு சொல்வேன்"என்று பெரியார் அழுத்தந்திருத்தமாக எடுத்துச் சொன்னார்.

ஏனென்றால், கட்டுப்பாடு இருந்தால் எல்லோரும் சேர்ந்து கண்ணியம் தவறி கூட நடக்கலாம். இது பெரியாருடைய வியாக்கியானம். கடமை கூட தவறி-விடலாம். கட்டுப்பாட்டோடு இருந்தால் எவனும் எதுவும் செய்ய முடியாது. பெரியார் அவ்வளவு நிர்த்தாட்சண்யமாக, மூர்த்தன்யமாக சொன்ன அந்த வார்த்தையை இன்றளவும் கடைப்பிடிக்கின்ற காரணத்தினாலே தான் நம்முடைய கழகத்தை யாரும் அசைக்க முடியவில்லை, ஆட்ட முடிய வில்லை, வானுயர ஓங்கியிருக்கின்ற ஆல மரம் போல் திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு இருக்கின்றது.

வளர்ச்சியைத் தடுக்க - இந்த ஆட்சியாளர்கள் எடுக்கின்ற முயற்சி போதாது என்று, அவர்களுக்கு அனுசரணையாக தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒருசில நாளேடுகள் எப்படியெப்படியோ முயற்சிகளை மேற் கொண்டு வருகின்றன.

"திராவிடம் "என்ற இனப் பெயரைக் காப்பாற்றவும் - "இன உணர்வை"ப் பாதுகாக்கவும் - அதைப் பரப்பிட பாடுபட்டு வருபவர்களுமான நம்மை நாமே வருத்திக் கொண்டாலும் பரவாயில்லை என்று இந்த ஒப்புயர்வற்ற இயக்கத்தை நடத்தி வருகிறோம். இதை வீழ்த்திட, எதிரிகள் எத்தகைய சூழ்ச்சிகளை கையாண்டாலும், அந்தச் சூழ்ச்சிகள் அனைத்தும், "மலையில் மோதி வீழ்கிற சிற்றலைகள்"என்று கருதி நாம் நம்முடைய சுயமரியாதைப் பயணத்தைI தொடர்ந்து கொண்டிருக்கிறோம்; மேலும் தொடர்வோம்!

English summary
Tamilnadu news papers targeting only on DMK, the party chief Karunanidhi charged.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X