For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அட கிராதகர்களே.. கொரானாவையும் விட்டுவைக்காத மீம் கிரியேட்டர்ஸ்..!

Google Oneindia Tamil News

Recommended Video

    The disease that spreads from Coronavirus named a COVID -19

    கொரானா... பேருக் கேட்டாலே சும்மா அதிருதுல்ல... காலம் கலிகாலம் என்பதற்குக் கணக்கு வழக்கில்லாமல் பரவும் வியாதிகளே சாட்சி. இருமல், ஜலதோஷம், காய்ச்சல் என முன்பெல்லாம் வியாதிகளின் எண்ணிக்கையைப் போலவே அவற்றின் தாக்கமும் கட்டுக்குள் இருந்தது. ஆனால் இப்போது கட்டுப்பாடற்ற சுதந்திரப் பறவைகளாக வியாதிகள் மாறிவிட்டன.

    நோயாளிகளை விடுங்கள். புதிதாகப் படையெடுக்கும் வியாதிகளைப் பற்றி டாக்டர்களுக்கே போதுமான புரிதல் இல்லை என்பதுதான் பயமுறுத்தும் நிஜம். தாங்கமுடியாத உடல்வலி, காய்ச்சலுடன் அவதிப்பட்டு வந்தார் ஒருவர். விஷக் காய்ச்சலாக இருக்கப் போகுது. உடனே டாக்டரை பார் என அக்கம்பக்கத்தினர் அச்சமூட்ட, அவரும் அப்படியே செய்தார்.

    memes on corona go viral

    நாக்கை நீட்டுங்க என்பதில் ஆரம்பித்து ஒழுங்கா சாப்பிட முடியுதா, தூக்கம் வருதா? என வக்கீல் அவதாரம் எடுத்து கேள்வி மேல் கேள்வி கேட்ட டாக்டர் கடைசியில் கேட்டதுதான் சுவாரசியம். சரி சொல்லுங்க. உங்களுக்கு என்னதான் பிரச்சனை? டாக்டரின் இந்தக் கேள்வியால் வெறுத்துப்போன ஆசாமி, விட்டால் போதுமென வீட்டுக்கு ரிட்டர்ன் ஆகி சுக்கு கஷாயம் மூலம் நிவாரணம் தேடிக்கொண்டார்.

    டாக்டர்களைச் சொல்லியும் குற்றமில்லை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் என்பார்களே, அந்த மாதிரி நாடு ஒரு மேனியும், கண்டம் ஒரு வண்ணமுமாக புதிது புதிதாக வியாதிகள் புறப்பட்டால் டாக்டர்களால் என்னதான் செய்ய முடியும்? அனைத்தையும் நினைவில் வைத்திருக்க அவர்களின் ஹார்ட்- டிஸ்க் இடம் தர வேண்டுமே!

    சமீப காலமாக மக்களை அச்சுறுத்தும் பல வியாதிகளும் வைரஸ் மூலம் பரவுவதாகவே சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாத இந்த நுண்ணுயிரிகள்தான் வியாதிகளை கண்டம் விட்டு கண்டம் எக்ஸ்போர்ட் செய்கின்றன. இந்தப் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு... கொரானா. சீனாவில் தலைகாட்டத் தொடங்கிய இந்த கொடிய நோய்க்கு அங்கு இதுவரை 700க்கும் மேற்பட்டோர் பலியாகியிருக்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் கொரானா தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். சீன பொருட்கள் எப்படி உலகமெல்லாம் பரவியிருக்கிறதோ அப்படியே கொரானாவும் பரவத் தொடங்கியுள்ளது. சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரானா வைரஸ் பாதிப்பிற்காக தனி பிரிவே தொடங்கப்பட்டுள்ளது.

    memes on corona go viral

    இது மீடியா யுகமாச்சே! டிவிக்களும், பத்திரிகைகளும் சும்மா இருக்குமா என்ன! கொரானா பற்றி மாய்ந்து மாய்ந்து செய்திகளைத் தட்டிவிட்டதில் எங்கும் பீதி நிலவுகிறது. சாதாரணமாக ஒருவர் தும்ம ஆரம்பித்தால் கூட பக்கத்தில் இருப்பவர்கள் கொரானா பீதியில் ஓட்டமெடுக்கிறார்கள். பகல் இரவு வித்தியாசமின்றி எல்லோரும் முகமூடி கொள்ளைக்காரர்கள் போல காட்சியளிக்கிறார்கள்.

    சென்னையைச் சேர்ந்த ஒருவர் பெங்களுருக்குச் செல்ல, ரயிலில் ஏ.சி வகுப்பில் டிக்கெட் புக் செய்திருந்தார். வீட்டிலிருந்து புறப்படும் சமயத்தில் டி.வியில் பேசிய ஒரு பிரகஸ்பதி, 'கொரானா பாதித்தவர் மூச்சுக்காற்றுப் பட்டாலே அவ்வளவுதான்!' என பயம்காட்ட, ரயில் பயணத்தை ரத்து செய்துவிட்டு பெங்களுருக்கு காரில் பறந்துவிட்டார் அவர்.

    கொரானா பீதி இப்படி கொடிகட்டிப் பறக்கும் நிலையில், மீம்ஸ் கிரியேட்டர்ஸ் அந்த கொடிய கொரானாவையும் விட்டுவைக்காமல் வெளுத்து வாங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆளாளுக்கு கற்பனை குதிரைகளை ஓடவிட்டு சோஷியல் மீடியாவை துவம்சம் செய்து வருகின்றனர்.

    memes on corona go viral

    'கொரானா வைரஸைக் கட்டுப்படுத்த சீன தேசம் நோக்கி புறப்பட்டார் சீமதர்மர்' என்கிற டைட்டிலுடன் மின்னல் வேகத்தில் குதிரையில் சீமான் பயணிக்கும் படத்துடன் வெளியிடப்பட்டிருக்கும் மீம்ஸ் இளசுகளை ரொம்பவே கவர்ந்திருக்கிறது.

    'ஒரே ஒரு வெங்காய தோசை ; ஒருபோதும் கொரானா தாக்காது'. ஹோட்டல் போர்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருக்கும் இந்த மீம்சும் டாப்டக்கர் ஹிட்டாகியிருக்கிறது. ''என்னாது கொரானா வைரஸா...எடுடா அந்த நிலவேம்பு கஷாயத்தை'' என வடிவேலு கெத்து காட்டுவது செமத்தியான மரண கலாயாக உள்ளது. பல லட்சம் பேர் இதனை 'லைக்'கியிருக்கின்றனர்.

    மீம்ஸ் கிரியேட்டர்கள் சினிமாக்காரர்களையும் விட்டுவைக்கவில்லை. ''இன்னிக்கு கொரானா வைரசு-க்கு மிளகு ரசம் வச்சுல்லாம் மீம்ஸ் போட்டு கடுப்பேத்துறாங்களே.. அதுக்கெல்லாம் இவர் எடுத்த 7ஆம் அறிவுதான் காரணம்'' என 'தர்பாரால்' ஏற்கனவே நொந்துபோயிருக்கும் டைரக்டர் முருகதாசை மேலும் கடுப்பேற்றியிருக்கின்றனர்.

    வேண்டாத விருந்தாளியை பழிவாங்க என்ன செய்யலாம்? என கேட்கிறார் ஒருவர். அதற்கு மற்றவர் '' ரொம்ப சிம்பிள். சைனிஸ் ரெஸ்டாரெண்டுக்குக் கூட்டிட்டுப் போங்க'' என்கிறார்.

    இப்படி கொரானாவை மையப்படுத்தி வலம்வரும் மீம்ஸ்களுக்குக் குறைவில்லை. இதில் பெரும்பாலான மீம்ஸ்கள் நிலவேம்பு கஷாயத்தை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக தமிழக மக்கள் மனங்களில் ஆழமாக பதிந்த பெயர் எது என கேட்டால்...நிலவேம்பு என தாராளமாகச் சொல்லலாம். அந்தளவிற்கு பாப்பா முதல் பாட்டி வரை அனைவரிடமும் நிலவேம்பு பாப்புலராகி இருக்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் குனியா நோய் தமிழகத்தைப் பாடாய்ப்படுத்தியது. நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பக் கட்டத்தில் மர்மக்காய்ச்சல், மர்ம உடல்வலி என எதையெதையோ சொல்லி அரசு தரப்பு மடைமாற்ற முயற்சித்தது. ஆனால் முடியவில்லை. சிக்கன் குனியாதான் என உறுதி செய்தாகிவிட்டது. ஆனால் அதற்குரிய பிரத்யேக மருந்து எதுவும் இல்லை. என்ன செய்வது என திணறிக் கொண்டிருந்தது தமிழக அரசு.

    இந்த சமயத்தில்தான் யாரோ ஒரு சித்த வைத்திய புண்ணியவான் 'சிக்கன் குனியாவுக்கு ஒரே தீர்வு நிலவேம்பு கஷாயம்தான்' என அடித்துவிட, திணறிக் கொண்டிருந்த அரசுக்கு மூச்சு வந்தது. நாடு முழுவதிலும் நிலவேம்பு கஷாயம் டன் கணக்கில் விநியோகிக்கப்பட்டது. அலோபதி தொடங்கி சித்தா, ஹோமியோபதி என எல்லா மருத்துவர்களுமே நிலவேம்பு கொடியை உயர்த்திப் பிடித்தனர். டாக்டர்களே இப்படி ஆதரவு கொடுக்கும்போது அரசியல் கட்சியினரும், ரசிகர் மன்றத்தினரும் அமைதியாக இருப்பார்களா என்ன? ஊருக்கு ஊர், தெருவுக்கு தெரு போட்டி போட்டுக்கொண்டு விநியோகத் திருவிழாவை நடத்த.. எங்கும் நிலவேம்பு என்பதே பேச்சாக இருந்தது.

    ஏக சமயத்தில் இவ்வளவு டன் நிலவேம்பு எங்கேயிருந்து, எப்படி கிடைத்தது என்பது இன்றுவரை பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. ஆனால் விஷயம் தெரிந்தவர்களோ'' அதையெல்லாம் நிலவேம்புண்ணு யார் சொன்னா? நிலவேம்பு மாதிரி'' என விளக்கமளிக்கிறார்கள். நிலவேம்பு குடித்ததால் சிக்கன் குனியா கட்டுக்குள் வந்ததே என நீங்கள் கேட்கலாம். இந்த இடத்தில் ஒரு கதை சொல்வது பொருத்தமாக இருக்கும். ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் டாக்டரிடம் போனாராம். மருந்து சாப்பிட்டால் எத்தனை நாளில் ஜலதோஷம் குணமாகும், மருந்து சாப்பிடாவிட்டால் எத்தனை நாளில் குணமாகும்? என கேட்டாராம். அதற்கு டாக்டர் ''மருந்து சாப்பிட்டால் 7 நாட்களில் குணமாகும். சாப்பிடாவிட்டால் ஒரே வாரத்தில் குணமாகும்'' என்றாராம்.

    நிலவேம்பு விவகாரத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. சிக்கன் குனியா வைரஸ் மிக அதிகமாகப் பாதித்த ஒருசிலரை தவிர, பெரும்பாலான மற்றவர்களுக்கு, அடுத்த சில நாட்களில் அதன் தாக்கம் படிப்படியாகக் குறைந்துவிடும். நிலவேம்பு கஷாயம், சாப்பிட்டாலும், சாப்பிடாவிட்டாலும் இதுதான் நிலைமை. இதைப் புரிந்துகொள்ளாமல் ஏதோ ஒருமுறை, ஒரே ஒரு மடக்கு நிலவேம்பு கஷாயம் சாப்பிட்டதால் மட்டுமே சிக்கன் குனியா கட்டுக்குள் வந்ததாக பலரும் நம்பத் தொடங்கினார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை! அந்த நம்பிக்கையே அவர்களுக்கு சுகம் தந்தது.

    ஏறத்தாழ இதே அணுகுமுறையைத்தான் இப்போது கொரானா விவகாரத்திலும் மக்கள் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளனர். கொரானா தாக்குதலிருந்து தப்பிக்க பலரும் அலர்ட் ஆறுமுகமாக நிலவேம்பு கஷாயத்தைக் குடிக்கத் தொடங்கியுள்ளனர். இதைத்தான் மீம்ஸ் கிரியேட்டர்ஸ் சோஷியல் மீடியாவில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

    சீரியஸான இத்தகைய சங்கதிகளை காமெடியாக்கலாமா? என நீங்கள் கேட்கலாம். (குராணான்னு நம்மூர்ல ஒரு கவர்னர் இருந்தாரு.. ஞாபகம் இருக்கா.. சரி அதை விடுங்க) வள்ளுவரின் வார்த்தைதான் இதற்கு பொருத்தமான பதிலாக இருக்கும்.

    இடுக்கண் வருங்கால் நகுக (முடியாவிட்டாலும் பரவாயில்லை.. நகுக ப்ளீஸ்)

    - கௌதம்

    English summary
    Meme cretors did not spare Corona virus, lot of memes are on rounds on Corona virus.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X