• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மீனவர்களை மீட்பதை விடவும் முதல்வருக்கு எம்.ஜி.ஆர் விழா முக்கியமா ? : வேல்முருகன் சரமாரி கேள்வி

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை: புயலால் காணாமல் போன மீனவர்களை மீட்பதை விடுத்து எம்.ஜி.ஆர் விழா கொண்டாட்டங்களில் முதல்வர் ஈடுபட்டிருப்பது தேவை தானா என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன் சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.

ஓகி புயல்-மழையால் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன. குறிப்பாக கன்னியாகுமரி இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

கன்னியாகுமரி முதல் சுசீந்திரம் வரையிலான ஒரு பெரும் பகுதியே வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாமல் உணவு, தண்ணீர், கழிப்பிட வசதி இல்லாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. மின்கம்பங்கள் அனைத்தும் சாய்ந்துவிட்டதால் மாவட்டமே இருளில் மூழ்கியது.

இன்னும் சேதம் குறித்து முழுமையான விபரங்கள் தெரியாத நிலையிலும், காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணி குறித்தும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

 கவலையில் மீனவ கிராமங்கள்

கவலையில் மீனவ கிராமங்கள்

நம்மை அதிர்ச்சியிலும் அச்சத்திலும் ஆழ்த்தியிருப்பது கடலுக்குச் சென்ற 1,300 மீனவர்கள் கரை திரும்பாததாகும். இவர்கள் சின்னத்துறை, பூத்துறை, தூத்தூர், இரவிபுத்தன்துறை, வள்ளவிளை, முட்டம், தேங்காய்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள். புயல்-மழையில் சிக்கி அவர்கள் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் அவர்களின் குடும்பத்தினர்-உறவினர் வேதனையில் உறைந்துள்ளனர்.

 மீனவர்கள் போராட்டம்

மீனவர்கள் போராட்டம்

காணாமல் போன மீனவர்களை மீட்கும் பணியில் இந்திய கடற்படையின் நிரீஷக், ஜமுனா, சாகர்த்வானி, ஷர்துல், சாரதா உள்ளிட்ட 8 கப்பல்கள், 5 விமானங்கள்; கடற்காவற்படையின் 8 கப்பல்கள், 2 விமானங்கள் மற்றும் 3 ஹெலிகாப்டர்களும் ஈடுபட்டுள்ளன என்று கூறப்பட்டது. ஆனால் மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி சின்னத்துறையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மீனவ மக்கள் குறிப்பாக ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அவர்கள், "உயர் தொழில்நுட்ப வசதிகள் கொண்ட அதிநவீன கடற்படை இருந்தும் தமிழக மீனவர்கள் மீட்கப்படவில்லை.

 மீனவர்கள் நிலை என்ன ?

மீனவர்கள் நிலை என்ன ?

இந்தியப் பாதுகாப்புத்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மீனவர்கள் 198 பேர் லட்சத்தீவு மற்றும் மினிகாய் தீவுகளில் பத்திரமாய் தங்கவைக்கப்பட்டுள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "837 மீனவர்கள் 71 படகுகளில் குஜராத், கர்நாடகா, லட்சத்தீவு கடல் எல்லைப் பகுதிகளில் பத்திரமாக கரையொதுங்கியுள்ளனர்; அந்த அரசுகளுடன் பேசி அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்படுவர்" என்றார்.

 ட்விட்டரில் மட்டும் செயல்பாடு

ட்விட்டரில் மட்டும் செயல்பாடு

இந்நிலையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், "காணாமல் போன தமிழக மீனவர்கள் 1000 பேர் என்பது தவறு, அவர்களில் தமிழகத்தில் 71 பேர்; கேரள மீனவர்கள் 183 பேர் உள்ளிட்ட 261 பேர் மீட்கப்பட்டுள்ளனர்" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை உடைய அமைச்சரே இப்படிப் பேசுவது, வேதனையில் இருக்கும் மீனவ குடும்பத்தினர் நெஞ்சில் வேலையே பாய்ச்சியது போலானது.

 நாளை குமரி வரும் நிர்மலா சீதாராமன்

நாளை குமரி வரும் நிர்மலா சீதாராமன்

மீனவரை மீட்க உருப்படியான நடவடிக்கை எடுக்காமல் அமைச்சரே இப்படி பொய் கூறுவதா என்று அவர்கள் ஆதங்கப்பட்டனர். இதே நிர்மலா சீதாராமன் "நீட்" விவகாரத்தில் நாடகமாடியதையும்; இந்திய கடற்காவற்படையே ராமேஸ்வரம் மீனவரைச் சுட்டதை ஒப்புக் கொண்ட பிறகும், "அப்படியில்லை" என அதைப் புரட்டிப் பேசியதையும் நினைவுகூர்ந்தார் ஒரு மீனவ இளைஞர். இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட பணிகளை பார்வையிட நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வர உள்ளதாக தமிழக வருவாய்த்துறை இணை ஆணையர் தெரிவித்துள்ளார்.

 தமிழர்களுக்கு தொடரும் அவலம்

தமிழர்களுக்கு தொடரும் அவலம்

இப்படிப்பட்ட சூழலில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி என்ன செய்துகொண்டிருக்கிறார் என்ற கேள்வியே முதன்மையாக எழுந்துள்ளது. அவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவதிலும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்வதிலும்தான் ஈடுபட்டிருக்கிறார். இதிலிருந்து, உயிருக்குப் போராடும் மீனவர்களைப் பற்றி அவருக்கு எந்தக் கவலையும் இல்லை என்பது தெளிவாகிறது. நடுவண் அமைச்சரின் சொல்லும் செயலும் தமிழர்களுக்கு எதிராகவே இருக்க; மீனவரை தமிழக முதல்வரும்கூட கண்டுகொள்ளாதிருப்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்புகின்றது.

 மீனவர்களை மீட்கும் பணி ?

மீனவர்களை மீட்கும் பணி ?

அதாவது, தமிழர்களை வஞ்சம் தீர்ப்பதில் உயிருக்குப் போராடும் நிலையையும் பயன்படுத்திக் கொள்கிறார்களா என்ன? உயர் தொழில்நுட்ப கடற்படை இருந்தும், புயலால் கரைசேராத 1,300 மீனவர்களை 3 நாட்களாகியும் மீட்காததேன்? மீனவர் உயிரைக் காட்டிலும் முக்கியமாகிப் போனதா எம்ஜிஆர் விழாவும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலும் நாட்டின் முதல்வருக்கு? இந்தக் கேள்விகளை முன்வைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், எம்ஜிஆர் விழா மற்றும் இடைத்தேர்தல் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு மீனவரை மீட்கும் பணிகளை முடுக்கிவிட முதல்வரே குமரி சென்று நேரில் களமிறங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.

English summary
MGR Centenary Celebrations is that much important than Rescuing Fishermen Velmurugan raises questions against CM .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X