For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ. சிறைக்கு போக பி.எச். பாண்டியன்தான் காரணம்… திண்டுக்கல் சீனிவாசன் பகீர் குற்றச்சாட்டு

மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு செல்ல பி.எச். பாண்டியன்தான் காரணம் என்று வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வரும் பி.எச். பாண்டியன்தான் ஜெயலலிதா சிறைக்கு செல்ல காரணமாக இருந்தார் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

அதிமுக பொருளாளரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் மரணம் குறித்து பி.எச்.பாண்டியனும், அவரது மகன் மனோஜ்பாண்டியனும் உண்மைக்குப் புறம்பாகவும், மக்கள் மனங்களில் விஷத்தை விதைக்கும் வகையிலும் கூறி வரும் கருத்துக்களுக்கு என்னுடைய கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் காரணங்களுக்காக ஜெயலலிதாவின் மரணத்தை விமர்சனத்திற்குள்ளாக்குவது மனிதாபிமானத்திற்கு விரோதமானது. ஜெயலலிதாவின் மரணம் குறித்து அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் தெளிவான விளக்கம் அளித்த பின்னரும் மீண்டும் மீண்டும், சிலர் குதர்க்கமாகப் பேசி வருவதைப் பார்க்கையில் புரியாதவர்களுக்கு விளக்கிச் சொல்லி புரிய வைக்கலாம்; புரிந்து கொள்ள மறுப்பவர்களுக்கு எப்படி புரியவைப்பது என்ற கேள்விதான் எழுகிறது.

நடந்தது என்ன?

நடந்தது என்ன?

ஜெயலலிதாவின் உடல்நிலை எப்படி இருந்து வந்தது?. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் யாவை? அவருக்கு அளிக்கப்பட்ட மருந்துகள் யாவை? ஜெயலலிதாவினுடைய உயிரிழப்பு எதனால் ஏற்பட்டது? என்ற அனைத்து வகையான கேள்விகளுக்கும் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்களும், லண்டனில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறப்பு டாக்டர் ரிச்சர்டு பிலேவுக்கும், தமிழக அரசின் டாக்டர் சுதா சேஷையனும் 6-2-2017 அன்று விரிவான பதில்களை பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ளனர். நீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்திற்கு அப்பல்லோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையை வழங்கி இருக்கிறது.

ஜெ.வுக்கு இழுக்கு

ஜெ.வுக்கு இழுக்கு

ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பற்றிய அறிக்கையை, மத்திய அரசிடம் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அளித்துள்ளனர். இத்தனை உண்மைக்கும் பிறகு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து நியாயமற்ற வகையிலும், உண்மைக்கு முற்றிலும் புறம்பாகவும், மக்கள் மனதில் அடிப்படையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலும் பேசுவது ஜெயலலிதாவின் புகழுக்கு இழுக்காகிவிடும் என்பதை அன்பு கூர்ந்து நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

என்.எஸ்.ஜி. பாதுகாப்பு படை

என்.எஸ்.ஜி. பாதுகாப்பு படை

ஜெயலலிதாவுக்கான என்.எஸ்.ஜி. பாதுகாப்புப் படை குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்கான தேசிய பாதுகாப்புப் படையினர், ஜெயலலிதாவின் அன்றாட நிகழ்ச்சிகள் முடிந்து ஜெயலலிதா இல்லம் திரும்பியவுடன் தமக்கான முகாமுக்கு, அதாவது சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள முகாமுக்கு திரும்பிவிடுவர். முக்கிய பிரமுகர்களுக்கான தேசிய பாதுகாப்புப் படையினர் பிரமுகர்களின் பயணங்களின் போது உடன் இருப்பவர்களே தவிர அவர்களது வீடுகளுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஜெயலலிதாவின் தனிப் பாதுகாவல் அதிகாரி தான், ஜெயலலிதாவை ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மாநில போலீஸ் உடன் வர அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட வேதனை

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட வேதனை

‘‘குற்றவாளியை நெருங்கிவிட்டோம்'' என்று பி.எச்.பாண்டியன் கூறியிருப்பதைப் பார்க்கையில் அவர் ஏதோ விசாரணை மேற்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அவர் தனது விசாரணையின் முடிவுகளை நீதிமன்றத்தில் தெரிவிக்கட்டும். 1988-ல், தான் சபாநாயகராக அமர்ந்துகொண்டு ஆடிய சூதுமதி ஆட்டத்தால் அ.தி.மு.க. ஆட்சியை கலைத்துவிட்டு தி.மு.க. மறுவாழ்வு பெற உதவியதைப் போல இன்று நடைபெறாமல் போய்விட்டதே என்ற விரக்தியால் பேசும் பி.எச்.பாண்டியன் ஆலமரம் போல் வளர்ந்து நிற்கும் அ.தி.மு.க.வை மிரட்டுவதாக நினைத்து வார்த்தைகளை வீச வேண்டாம். எதையும் எதிர்த்து நின்று சாதிக்கும் ஆற்றல் அ.தி.மு.க.வுக்கு உண்டு என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

ஜெ.வுக்கு சிறை

ஜெ.வுக்கு சிறை

கடந்த காலங்களில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய மன வேதனைகளுக்கு எல்லாம் பி.எச்.பாண்டியன் தான் மூல காரணமாக இருந்தார் என்பது பாண்டியன் குடும்பத்தினருக்கே நன்கு தெரியுமே. ஜெயலலிதா மீது, பி.எச்.பாண்டியன், சி.பொன்னையன் போன்றவர்கள் 1996-ல் கவர்னரிடம் பொய் புகார் மனு கொடுத்து வழக்குகள் பல போட காரணமாயிருந்தவர்கள் என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் நன்கு அறிந்து வைத்திருக்கிறார்கள். ஜெயலலிதா மீது இத்தகையவர்கள் கொடுத்த புகார் காரணமாகவே, ஜெயலலிதா சிறைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. சிறைச்சாலையில் ஏற்பட்ட மன உளைச்சல், சுகாதாரமற்ற சூழல், அடிப்படை வசதிகளும், மருத்துவ கண்காணிப்பும் இல்லாத வாழ்க்கை காரணமாக 2014-ம் ஆண்டு சென்னை திரும்பியதில் இருந்தே ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார் என்பதை அ.தி.மு.க. தொண்டர்கள் நன்கு அறிவார்கள். இந்த உண்மைகளை எல்லாம் வசதியாக மூடி மறைத்துவிட்டு தங்கள் அரசியல் சுயலாபத்திற்காக அ.தி.மு.க.வால் அனைத்து வகையான பதவிகளையும், உயர்வுகளையும் அடைந்த குடும்பத்தினர் இன்று அவதூறை அள்ளி வீசுவது கண்டனத்திற்குரியது.

களங்கம்

களங்கம்

ஜெயலலிதாவின் தியாக வாழ்வையும், தன்னிகரில்லாத உழைப்பையும், ஜெயலலிதா மீது மக்கள் கொண்டிருக்கும் பேரன்பையும், நன் மதிப்பையும் எண்ணி பார்த்து ஜெயலலிதாவுக்கு சிறிதும் களங்கம் ஏற்பட்டுவிடாத வகையில் பேச வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன் என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.

English summary
Minister Dindigul C. Sreenivasan has attacked ex-speaker P.H. Pandian, who raised questions about Jayalalithaa’s death.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X