சாமி.. சாணம்.. ஆஹா.. மறுபடியும் ஆரம்பிச்சுட்டாரே செல்லூரார்!

சென்னை: திரும்பவும் ஆரம்பிச்சிட்டார் சர்ச்சை புகழ் அமைச்சர் செல்லூர் ராஜூ.
திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய இடைத்தேர்தல்கள் நெருங்கி வருகின்றன. இரு களத்திலும் எத்தனை பேர் போட்டியிட்டாலும் பிரதானமாக பார்க்கப்படுவது திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகளைத்தான். தேர்தல் பணிகளை இந்த கட்சிகள் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டன. அதிமுக தரப்பில் நேற்று திருப்பரங்குன்றத்தில் பிள்ளையார் சுழி போட்டு சைக்கிள் பேரணியை நடத்தினர்.

தினகரனுக்கு குறி
அழகிரியை நேரில் பார்த்து பேசி, திமுகவின் ஓட்டுக்களை பிரிக்கும் வேலையை எப்படியோ ஒரு வழியாக பார்த்துவிட்டார் செல்லூர் ராஜூ. அதனால் இப்போதைக்கு திமுக பக்கம் பெரிய அளவிலான பயமோ, அச்சமோ இல்லை. ஆனால் நேற்றைய சைக்கிளி பேரணி பிரச்சாரத்திலிருந்து அதிமுக அமைச்சர்கள் அதிகமாக குடைந்து வருவது டிடிவி தினகரனைதான். திருப்பரங்குன்றத்தில் தினகரனை ஓரங்கட்டும் முயற்சியில் மும்முரமாக இறங்கிவிட்டனர்.
[Read This: செயல்பாடு 'பவர் ஸ்டார்' மாதிரி இருந்தாலும்.. செல்லூரார் கில்லாடி.. தப்பு கணக்கு போடாதீங்க! ]

தினகரனின் மாயாஜாலம்
நேற்று மக்களிடையே அமைச்சர்கள் பேசும்போதுகூட, "ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 20 ரூபாய் தாளை காட்டி திருட்டுத்தனமாக டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றுவிட்டார். அதுபோல திருப்பரங்குன்றத்திலும் திருட்டுத்தனத்தை காட்டலாம் என்று நினைக்கிறார். இங்கே அவரது மாயாஜாலம் வெற்றி பெறாது. இனி வரும் எந்த தேர்தலிலும் தினகரன் போன்றவர்களுக்கு வேலை இருக்காது. ஜெயலலிதா சிறை செல்ல காரணமானவரே தினகரன்தான்" என்று கடுமையாக தாக்கி பேசினார்கள்.

அதிமுக புனித ஸ்தலம்
இன்று செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியபோது, இஸ்லாமியர்களுக்கு புனித ஸ்தலம் மெக்கா ஆகும். கிறிஸ்தவர்களுக்கு ஜெருசலம்தான் புனித ஸ்தலம். அதேபோல, அதிமுகவுக்கு புனித ஸ்தலம் போயஸ் கார்டனும், ராமாவரம் தோட்டமும், அதிமுக தலைமை அலுவலகமும்தான். அதனால் தேர்தல் என்று வரும்போது, தினகரனிடம் இருக்கும் தொண்டர்கள் எல்லோரும் அதிமுகவிற்கு கண்டிப்பாக திரும்பி வந்துவிடுவார்கள். தினகரன் துணை பொதுச்செயலாளராக இருக்கும் அமமுக கட்சியை ஒரு அமைப்பாக கூட கருத முடியவில்லை" என்றார்.
[அழகிரி - செல்லூர் ராஜு சந்திப்பு ஏன்.. என்ன பேசினார்கள்.. பின்னணி என்ன? ]

சாணம்கூட சாமியாகும்
வார்த்தை தாக்குதல் இதோடு நின்றிருந்தால் பரவாயில்லையே, இதற்கு முன்னதாக கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய செல்லூர் ராஜூ, "அதிமுகவில் இருக்கும் வரை சாணம் கூட சாமியாக மாறும்; விலகினால் சாமி கூட சாணமாக மாறும்" என்றார். அமைச்சர் இவ்வாறு பேசியதும் அங்கிருந்த நிர்வாகிகளுக்கு தூக்கி வாரிப்போட்டது. ஏனென்றால் அமைச்சர் யாரை சாணம் என்கிறார், யாரை சாமி என்கிறார் என்றே ஒருகணம் புரியவில்லையாம்.

இவர் யாரை சொல்கிறார்?
செல்லூர் ராஜு, அதிமுக பெரிய தலை யாரையாவது சொல்கிறாரா??? இல்லை அதிமுகவை விட்டு விரட்டப்பட்ட தினகரனை சொல்கிறாரா??? என்றே விளங்கவில்லை. அதேசமயம், திமுக தரப்பில் யாரையும் குறிப்பிட்டு இங்கு வைத்து குத்திக் காட்டியுள்ளாரா என்றும் புரியவில்லை. எதுவாக இருந்தாலும் செல்லூர் ராஜூவே இதை பற்றி விளக்கினால்தான் உண்டு.. அதுவரை தொடர்ந்து விவாதித்தபடி இருப்போம்.!