For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிகப் பெரிய ஊழல், அமைச்சர் தங்கமணி ராஜினாமா செய்ய வேண்டும்: ஸ்டாலின்

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: காற்றாலை மின்சார ஊழல் தொடர்பாக மின்துறை அமைச்சர் தங்கமணி பதவி விலக வேண்டும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Minister Thangamani should resign: MK Stalin

உற்பத்தியே இல்லாத காற்றாலையில் இருந்து மின்சாரம் பெற்றதாக கணக்குக் காட்டி, மின்துறை அமைச்சர் தங்கமணியின் நிர்வாகத்தில் உள்ள தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் நடைபெற்று வரும் மிகப்பெரிய ஊழல், அதிர்ச்சியடைய வைக்கிறது. மாநிலம் முழுவதும் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்பட்டு, நிலக்கரி பற்றாக்குறையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் தத்தளித்துக் கொண்டிருக்கின்ற நேரத்தில், கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்தப் புதுவிதமான முறைகேடு, அமைச்சரின் நிர்வாகத்தில் மின்சாரத்துறை முழுவதும் எந்த அளவிற்கு ஊழல் மயமாகி விட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின், திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மின்வாரியத்தின் ஆடிட் பிரிவு, காற்றாலை மின்சாரம் குறித்து நடத்திய ஆய்வின் போது, இந்த ஊழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பெறாத மின்சாரத்தைப் பெற்றுக் கொண்டதாக, தூத்துக்குடி மேற்பார்வைப் பொறியாளரே 29.11.2016 அன்று கடிதம் அனுப்பி, அதனடிப்படையில் அரசுப் பணம் சூறையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக நவம்பர் 2016 மற்றும் டிசம்பர் 2016 ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும், ஒரு கோடியே 35 லட்சம் யூனிட்டுகளுக்கு மேற்பட்ட காற்றாலை மின்சாரத்திற்கு இப்படி போலியான கணக்கு தயார் செய்யப்பட்டு 9.17 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது முதற்கட்ட ஆய்வில் வெளிவந்துள்ளது.

காற்றாலை மின்சாரம் சப்ளை செய்யாத அந்த கம்பெனிக்கு, இந்த 9 கோடி ரூபாய் ஏன் போனது?. அங்கிருந்து வேறு யார் யாருக்கு எல்லாம் அந்த ஊழல் பணம் பிரித்துக் கொடுக்கப்பட்டது என்பது தனியாக விசாரணைக்குரியவை. தமிழகம் முழுவதிலும் காற்றாலை மின்சாரத்தில் போலி கணக்கு போடப்பட்டு, எப்படி ஊழல் நடக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் பகிர்மான டைரக்டராக இருக்கும் ஜூனியர் மோஸ்ட் தலைமைப் பொறியாளருக்கும், வாரிய சேர்மனுக்கும் இந்த ஊழல் தெரியவந்தும், இதுவரை ஊழலில் தொடர்புடைய முதலைகள் மீது நடவடிக்கை இல்லை.

மின்துறையில் என்ன தவறு நடந்தாலும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று பேட்டியளிக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி, இந்த காற்றாலை மின்சார ஊழல் பற்றி இதுவரை வாய் மூடி இருப்பது ஏன்?. ஊழல் செய்வதற்குத் துணை போன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் தடையாக நிற்பது ஏன்?. வராத மின்சாரம் வந்ததாக கணக்குக் காட்டி, கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க மேற்பார்வை பொறியாளரே கடிதம் எழுதியது யாருடைய தூண்டுதலால்? என்று அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.

ஆகவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் தூத்துக்குடி வட்டம் மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் நடக்கும் காற்றாலை மின்சார ஊழல் குறித்து லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என்றும், மாநிலமே மின்வெட்டு அச்சத்திலும் நெருக்கடியிலும் இருக்கும் போது, இப்படியொரு முறைகேட்டிற்கும், ஊழலுக்கும் சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில் துணைபோயிருக்கும் மின்துறை அமைச்சர் தங்கமணி பொறுப்பேற்று பதவி விலகி, போலி கணக்கு காற்றாலை மின்சார ஊழல் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு வழிவிட வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK chief MK Stalin said in a statement that TN electricity minister Thangamani should resign in connection with windmill power corruption issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X