For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பி.ஆர்.ஓவினால் பியூஸ் போன மந்திரி... இதோ பின்னணி தகவல்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: உலக சேனல்களை விட உள்ளூர் சேனல்களைத்தான் இன்றைக்கு அதிகம் ரசிக்கின்றனர். நம்ம ஊர் செய்தி வருதே என்ற பாசம்தான் காரணம். இதனால் சேட்டிலைட் சேனல்காரர்கள் கூட கொஞ்சம் கலங்கித்தான் போனார்கள்.

மதுரை, கோவை, திருப்பூர், கரூரில் லோக்கல் சேனல்களின் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் பிரபலம். எல்லா சேனல்களும் உள்ளூர் அரசியல்வாதிகளின் பாக்கெட்டில்தான் இருக்கிறது. நம்ம செய்தி அதைப்பற்றியதல்ல. உள்ளூர் சேனல் முழுக்க தன் முகத்தை மட்டுமே ஒளிபரப்பிய அந்த அமைச்சரைப் பற்றியும், அவர் பியூஸ் போக காரணமாக இருந்த அந்த பி.ஆர்.ஓவைப் பற்றியும்தான்.

செல்லப்பிள்ளை செல்லப்பிள்ளை என்று சொல்லப்பட்ட அந்த மந்திரியைப் பற்றியும் அவர் செய்யும் தந்திரங்களைப் பற்றியும், புட்டு புட்டு வைத்திருந்தது ஒரு வார இதழ். அப்போதே அமைச்சருக்கு பிடித்தது ஏழுரை. ஆனாலும் எப்படியோ தப்பித்து வந்த அவருக்கு வசமாய் ஆப்படித்து விட்டார்கள் என்று நமட்டு சிரிப்பு சிரிக்கிறார்கள் அவரால் பாதிக்கப்பட்டவர்கள்.

மணல் மாவட்டத்தில் லோக்கல் டி.வி சேனல்கள் அத்தனையும் அந்த அமைச்சரின் கட்டுப்பாட்டில்தான் இருந்திருக்கின்றன. அரசு கேபிள் டி.வி கார்ப்பரேஷன் பெயரில் இயங்கும் லோக்கல் சேனலில்கூட அந்த அமைச்சரின் முகம்தான் தெரியவேண்டும் என்பது கட்டளையாம். காவடி தூக்கியதும், தீச்சட்டி ஏந்தியதும், சேனல்களில் ஓடிக்கொண்டிருக்க எதிர்கட்சியினர் மட்டுமல்ல உள் கட்சியில் இருந்தவர்களே வயிற்றெரிச்சலில் பாதிக்கப்பட்டனர். பணம் கொடுத்து விளம்பரம் செய்ய நினைத்தாலும் விளம்பரத்தை வாங்க மாட்டார்கள். எதிர்க் கட்சிகளுடையது மட்டுமல்ல, கட்சியின் எதிர்கோஷ்டியினரின் விளம்பரங்கள்கூட இந்த சேனல்களில் வராது. அந்த அளவுக்கு அமைச்சரின் ஆதிக்கம் இருக்கவே அதை வகையாக போட்டுக்கொடுத்துவிட்டார்களாம் தலைமையிடம். இது வேட்டு நம்பர் 1ஆக இருந்திருக்கிறது.

அதேபோல எதிர்கட்சியாக இருந்த போது ஜே.சி.பி முன் படுத்து உருண்டு புரண்டு போராட்டம் நடத்தியவர், அமைச்சரான பின்னர் மணல் மாஃபியா கும்பல்களைப் பற்றி மூச்சே விடாமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழவே, ரகசிய உறவு இருப்பதை ஆதாரத்தோடு போட்டு கொடுக்கவே வேட்டு நம்பர் 2 ஆனதாம்.

அது மட்டுமல்லாது தில்லாலங்கடி பி.ஆர்.ஓ ஒருவர் மூலம் எதிர்கட்சியைச் சேர்ந்த ஒருவரை போக்குவரத்துத்துறைக்கு பி.ஆர்.ஓவாக நியமித்ததுதான் தலைமையின் கோபத்திற்கு காரணமாகிவிட்டதாம். அந்த பி.ஆர்.ஓ மூலம்தான் உள்கட்சி விவகாரங்களும், அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளும் எதிர்கட்சிக்கு போனதாக தகவல் இது வேட்டு நம்பர் 3 என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள்.

நெல்லையில் பணிபுரிந்தாலும் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த அந்த பி.ஆர்.ஓதான் முதலில் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார். அதற்குப்பின் அமைச்சரின் பியூஸ் பிடுங்கப்பட்டது. இனி அமைச்சரால் பி.ஆர்.ஓவாக நியமிக்கப்பட்டவரின் மீது நடவடிக்கைப் பாயலாம் என்கின்றனர்.

English summary
PRO appointment and Local TV channel publicity for back story of minister dismiss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X