For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

“உதயசூரியனைப் போற்றிய ஒளிஉமிழ் நட்சத்திரங்கள்!”- ஸ்டாலினின் நெகிழ்ச்சியான பதிவு

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் "மறக்க முடியாத" நம் தலைவரின் கலைத்துறை நினைவுகளைப் போற்றும் மடல்.

தமிழினத்தலைவர், முத்தமிழறிஞர், டாக்டர், செம்மொழி நாயகர், பன்முக வித்தகர் என எத்தனை புகழ்ப்பட்டங்கள் இருந்தாலும் அவர் இயற்பெயருக்கு நிகராக - பெயருக்கும் மேலாக மக்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் பெயர் கலைஞர் என்பது தானே! அந்தப் பெயருக்கு அடித்தளமே கலைத்துறை தானே! 75 திரைப்படங்கள், எண்ணற்ற திரை இசைப் பாடல்கள், சின்னத்திரை தொடர்கள் என சிறப்பு முத்திரை பதித்தவர் தலைவர் கலைஞர்.

 MK Stalin post about function about Karunanidhi

எத்துறையைத் தொட்டாலும் எந்நாளும் வெற்றியன்றி வேறில்லை என கொள்கைப் பயணம் மேற்கொண்ட மாபெரும் தலைவரான கலைஞர் அவர்களின் கலைத்துறை - திரைத்துறை முத்திரைகள் தமிழர்களின் நெஞ்சில் பதிந்தவை. அவர்களின் நாவில் செந்தமிழின் இனிமையையும், வீரியத்தையும், மென்மையையும், மேன்மையையும் களிநடம் புரியவைத்த கன்னித்தமிழ்ப் படைப்பாளி தலைவர் கலைஞர்.

ராஜகுமாரி திரைப்படம் தொடங்கி ராமானுஜர் சின்னத்திரைத் தொடர் வரை அவர் படைத்த கலை - இலக்கியப் படைப்புகள் அனைத்திலும் திராவிட இலட்சிய உணர்வே மேலோங்கி நின்றது. புராணம் சார்ந்த கதையாக இருந்தாலும், அதிலே, பகுத்தறிவு சார்ந்த எண்ணங்களே வசனங்களாக மலரும். அது மக்களின் மனதில் புதிய எண்ணத்தையும் புரட்சிகர மாற்றத்தையும் ஏற்படுத்தியது.

பராசக்தி, மனோகரா, மந்திரிகுமாரி, மருதநாட்டு இளவரசி, பூம்புகார், காஞ்சித் தலைவன், பாலைவன ரோஜாக்கள், பாசப்பறவைகள் என கலைஞர் பங்கேற்ற 75க்கும் மேற்பட்ட படங்கள் ஒவ்வொன்றும் தமிழ்த் திரையுலகச் சரித்திரத்தின் திருப்புமுனை. ஒரு படைப்பாளியின் வசனங்கள் தமிழ்த் திரையுலகுக்கு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் - நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என இருபெரும் நட்சத்திரங்களைத் தந்தது.

அன்று முதல் இன்றுவரை தமிழ்த் திரையின் வசனங்கள் என்றால் அதற்கு முன்னோடி இலக்கணமாகத் திகழ்பவர் தலைவர் கலைஞர் அவர்கள் தான். அவரது வசனத்தைப் பேசி புகழ்பெற்ற மூத்த கலைஞர்கள் உண்டு. அவரது படத்தில் இடம்பெற முடியாவிட்டாலும், அவரது வசனத்தைப் பேசி திரையுலக வாய்ப்புகளைப் பெற்ற இளம் கலைஞர்கள் ஏராளம்.

தமிழ்த் திரையுலகின் திசையை மாற்றி- சமூகப் புரட்சியை உண்டாக்கிய கலைஞரின் கலைத்துறை தாய்வீடு என்பது கோவை மாநகரம். அங்குள்ள சிங்காநல்லூரில் தான் தலைவர் அவர்கள் தன் திரை வாழ்வைத் தொடங்கினார். எனவே, அங்கே அவருக்கு சிறப்பு சேர்த்திடத் தீர்மானித்தோம்.

ஊடகத்துறையில் கருத்துரிமை காத்த கலைஞருக்கு திருச்சியிலும், இலக்கியத்துறையில் முத்திரை பதித்த கலைஞருக்கு தமிழ் வளர்த்த மதுரையிலும் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்திய நிலையில், கலைத்துறையில் "மறக்க முடியுமா கலைஞரை" என்ற நினைவலைகளுடன் கலைத்துறையின் சாதனையாளர்கள் திரைத்துறையின் பெருமக்கள் பங்கேற்ற நிகழ்வு நேற்று (25-8-2018) சிறப்பாக நடைபெற்றது. அதில், திரைக்கலைஞர்கள் ஆற்றிய உரை நெஞ்சில் தித்திக்கிறது.

கலைஞர்கள் போற்றிய நம் தலைவர் கலைஞர் பற்றிய நினைவேந்தல் நிகழ்வுகளிலிருந்து சில தேன் துளிகளை தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கலைஞரின் கலை வழியைப் பின்பற்றும் நடிகர் ராஜேஷ்:

மக்கள் தொடர்பு சாதனங்கள் 6 உள்ளன. அவைதான், மக்களிடம் கருத்துகளைக் கொண்டு போய்ச் சேர்க்கின்றன. பத்திரிகை, அரசியல், நாடகம், மேடை, சினிமா, டி.வி. என இன்றைய நவீன, மக்கள் தொடர்பு சாதனங்கள் வரை அனைத்தையும் கடைசிவரை எதிர்கொண்டவர் கலைஞர். அனைத்து தலைவர்களின் பாராட்டுகளையும் பெற்ற தலைவர். எதிர்த்தவர்களும் பாராட்டினார்கள். அவர் எந்த செயலையும் ஆற்றியதில் சோம்பல் கிடையாது; தூக்கம் கிடையாது. மறதி என்பதை அவரிடம் நான் பார்த்ததே கிடையாது.

எம்.ஜி.ஆர் ரசிகரும், கலைஞர் பற்றாளருமான நடிகர் மயில்சாமி:

கலைவாணர் முதல் விவேக் வரை பல நகைச்சுவை நடிகர்களைப் பார்த்தவர் கலைஞர். அவருடைய நகைச்சுவை எப்போதும் சிறப்பானது. ஒரு முறை எம்.ஆர்.ராதாவிடம் கலைஞர், சம்பாதிச்சதையெல்லாம் சேர்த்து வச்சிருக்கீங்களா என்று கேட்கிறார். எம்.ஆர்.ராதா அதற்கு, எல்லாம் மண்ணா போச்சு என்று சொல்ல உடனே கலைஞர், அப்படின்னா நிறைய நிலம் வாங்கி போட்டிருக்கீங்களா என்று கேட்டிருக்கிறார். அந்த உடனடி நகைச்சுவை அவரிடம்தான் உண்டு. நடிகர் விவேக் தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து பெற வந்தபோது, வயதைச் சொல்லி வாழ்த்து கேட்க, என்கிட்டேயாவது உண்மையைச் சொல்லக்கூடாதா அப்போதும் நகைச்சுவையாக சொல்லியிருக்கிறார். கலைஞர் டி.வியில் என்னுடைய காமெடி டைம் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டு அழைத்தவர், தினமும் உன்னைப் பார்த்துவிட்டு, சிரிச்சிட்டுத்தான்யா தூங்குறேன் என்றார். அதுதான் எனக்கு கிடைத்த பெருமை.


கலைஞரின் படங்களில் பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ள இளையவேள் ராதாரவி:

சினிமாவில் கதாநாயகர்களுக்கு பட்டம் தந்து மரியாதை தந்த காலத்தில், ஒரு எழுத்தாளனுக்கு மரியாதை செய்யும் வகையில் கலைஞரின் கைவண்ணத்தில் என்று முதன் முதலில் பெயர் போடச் செய்த பெருமை கலைஞருக்குத்தான் உண்டு. அதுதான் அவருடைய எழுத்தின் ஆற்றல்.

ஆந்திர திரையுலகின் முன்னணி நட்சத்திரம் மோகன்பாபு:

தேசத்தந்தை மகாத்மா காந்தி 1924ல் காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை ஏற்றார். அதே ஆண்டில் தமிழ்த் தந்தை ஒருவர் பிறந்திருக்கிறார் என்பதை நாம் அறியவில்லை. அவர்தான் கலைஞர். நாங்கள் நடிகர்களாக வளர்ந்தபோது தமிழ்நாட்டில் அரசியல் சிறப்பாக இருந்தது. ஒரு ராஜாஜி, காமராஜர், பெரியார், அண்ணா வரிசையில் நாங்கள் மதிக்கும் தலைவர் கலைஞர் அவர்கள். 'மு.கருணாநிதி' என்ற பெயரில் மு என்றால் முன்னுதாரணம், க என்றால் கருணை, ரு என்றால் ருத்ரம், நா என்றால் நாத்திகம், நி என்றால் நிதானம், தி என்றால் திராவிடம்.


கலைஞரின் வசனங்களால் அறிமுகமாகி தமிழர்கள் நெஞ்சில் நிறைந்திருக்கும் நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் புதல்வர் இளைய திலகம் பிரபு:

எனக்கு திருப்புமுனை தந்த படங்களில் ஒன்று கலைஞரின் பாலைவன ரோஜக்காள். அதன்பிறகு, காவலுக்கு கெட்டிக்காரன் படத்தில் ஆன்ட்டனி -கிளியோபாட்ரா வசனம் எழுதி, அதை பெரியப்பா கலைஞரே படித்து ஆடியோவாக கொடுத்தார். அதை அப்பாவிடம் கொடுத்ததும் அவரும் ஒரு ஆடியோவாகப் பேசினார். "பேரழகி கிளியோபாட்ரா என் உள்ளத்தில் கொலு வீற்றிருக்கும்போது போர்முனையில் எதிரிகளைப் பந்தாடுவதற்கு வீரம் தானாகவே வரும்" என்று பெரியப்பாவும், அப்பாவும் பேசிய ஆடியோ என்பது இதுதான் தமிழ் என்பதைத் காட்டியது. தனது நண்பனுக்கு சிலை வைக்க வேண்டும், அதை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்று இரவு பகலாக அவர் தவித்த தவிப்பை அறிவோம். அந்த சிலையை இப்போது வேறு இடத்தில் வச்சிட்டாங்க. ஆனாலும், அது பெரியப்பா வைத்த சிலைதான் என்பதை மறக்க மாட்டோம். அதற்கு நன்றி சொல்ல என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

கலைஞரால் கலையரசி எனப் பெயர் பெற்ற நடிகை ராதிகா:

நான் தி.மு.க வில் உறுப்பினராக இல்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லை. ஆனால், கலைஞர் என்ற தலைவரால் ஏற்பட்ட தமிழார்வத்தால் 1989ல் துறைமுகம் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தில் மேடையேறி பேசினேன். முரசொலி மாறன் அவர்கள் கூட, பீரங்கி கப்பல் ராதிகா புறப்பட்டு விட்டது என்று ஊக்கப்படுத்தினார். அதன்பிறகு ஊர் ஊராக, தெரு தெருவாக, கிராமம் கிராமமாக சென்று விடிய விடிய பிரச்சாரம் செய்தோம். வெற்றி கிடைத்தது. வெற்றி - தோல்வி இரண்டிலும் கலங்க மாட்டார். அனைவரையும் அரவணைத்துச் செல்வது கலைஞரின் பெரும் பலம். தமிழினம் - தமிழுணர்வு இருக்கும் வரை டாக்டர் அவர்களை மறக்க முடியுமா? மறக்கவே முடியாது.

கலைஞரின் கரங்களால் தனது கிறுக்கல்கள் கவிதை தொகுப்பை வெளியிட்ட இயக்குநர் பார்த்திபன்:

அனைவருக்கும் சூரிய வணக்கம். மரணம் துயரமானது. கலைஞரின் மரணம் உயரமானது. எழுத்தால் விட்டம் தொட்டவர். எழுந்தால் விண்ணைத் தொட்டவர். தமிழ் எனக்கு உயிர் போன்றது. கலைஞரை இழந்ததால் அந்தத் தமிழுக்கே உயிர் போனது. இங்கே இருப்பவர்கள் கலைஞரின் உடன்பிறப்புகளல்ல. உயர் பிறப்புகள். கறுப்பு - சிவப்பு என் கண்களில் இருக்கும். எந்தக் கரை வேட்டியும் கட்டாத நான் கலைஞர் வாழ்க என்று சொல்வதுதான் முக்கியமானது.

சுயமரியாதை உணர்வுமிக்கவரும் கலைஞர் மீது நேசம் கொண்டவருமான தேசிய விருது பெற்ற நடிகர் பிரகாஷ்ராஜ்:

கன்னட மொழியை தமிழில் எழுதி பேசி வந்த எனக்கு, கலைஞரைப் போல தமிழ் பேசி நடிக்க வேண்டிய வாய்ப்பு வந்தது. அவர் தமிழை அறிய பராசக்தியை பார்த்தபோது பயமுறுத்தவில்லை. நம்பிக்கை தந்தது. கலைஞரின் தமிழில் பண்பாடு இருந்தது. தன்மானம் இருந்தது. உரிமைக்கானப் போராட்டம் இருந்தது. அவரது இலக்கியத் தமிழ் தென்றலாக இருந்தது. அரசியல் தமிழ் புயலாக இருந்தது. அதைப் பேசி நடித்ததால் எனக்கு தேசிய விருது கிடைத்தது. ஒரே நாடு! ஒரே மொழி! ஒரே மதம்! என அச்சுறுத்துபவர்களிடமிருந்து நம்மையெல்லாம் பாதுகாத்து வைத்திருந்தவர் கலைஞர் என்பதை அவர் மரணத்தில்தான் உணர்கிறோம்.

காந்தி என்றால் அகிம்சை என்பதுபோல கலைஞர் என்றால் சமூக நீதி நினைவுக்கு வரும். சுயமரியாதை கூடிய சமூக நீதிக்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். "உங்கள் புன்னகை எத்தனை அழகாக இருந்தாலும் அதை என் உதட்டில் ஒட்டாதீர்கள்" என மாநில உரிமைக்காக அவர் எழுப்பிய முழக்கம் இந்தியாவுக்கே வழிகாட்டி. கலைஞரின் மரணம் வெறும் கண்ணீர் அஞ்சலிக்குரியதல்ல. வரலாற்றுச் சாதனைகளை திரும்பிப் பார்க்கும் புகழஞ்சலி. ஒரு நூற்றாண்டின் கலைஞர். பல நூற்றாண்டுகளின் தலைவர். அவரிடமிருந்து போராடும் வலிமை கிடைக்கிறது. ஒரு தலைவனிடமிருந்து வேறென்ன வேண்டும்?


கலைஞரின் திரைப்பட - தொலைக்காட்சித் தொடர்களில் பங்கேற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர்:

எங்கு மனிதம் இருக்கிறதோ அங்கெல்லாம் கலைஞர் இருக்கிறார். பராசக்தி வசனம் அபூர்வக் கலவை. ஒரு எழுத்தாளனின் வலிமை நடிகரின் வெளிப்பாடு. அந்த வீச்சுதான் நம்மைத் தாக்கியிருக்கிறது. என் திரைப்பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது. 5 படைப்புகளில் அவருடன் நான் பயணித்திருக்கிறேன். எழுதிக் கொடுப்பது மட்டுமல்ல, எப்படி படமாக்க வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்துவார். ஒரு நடிகனுக்கு எந்த வேலையும் இல்லை. கலைஞர் சொன்னதை மட்டும் செய்தால் போதும். களைப்புற்றார்... ஓய்வுற்றார் என்ற இரண்டு வார்த்தைகளை அவர் வாழ்க்கையில் எங்குமே சேர்க்கவே முடியவில்லை. அதுதான் கலைஞர். அவரைக் கொண்டாட வேண்டும்.


பெரியார் பாத்திரமாக நடித்து பெரியாரின் மோதிரத்தை கலைஞரின் திருக்கரங்களால் பெற்ற புரட்சித் தமிழன் சத்தியராஜ்:

உடன்பிறப்புகள் என்று தொண்டர்களை அழைக்கிற கலைஞர் தன்னை எப்படி அழைத்துக் கொள்வார் என ஒரு பேட்டியில் கேட்டபோது "மானமிகு சுயமரியாதைக்காரர்" என்று சொல்லி, உண்மையான பெரியார் தொண்டர் என்று நிரூபித்தவர் கலைஞர். கோப்புகளில் Beg to submit என்று இருந்ததில் beg என்பது கெஞ்சுவதாக இருக்கிறது என்று சொல்லி, அதனை அகற்றச் சொல்லியவர் கலைஞர். பெரியார் படத்தில் நான் நடிக்கும்போது பெரியார் எப்படி பேசுவார் என எனக்கு சொல்லிக் கொடுத்து, நடிக்கச் செய்தவர் கலைஞர். அவர் ஒரு மனிதனல்ல. சமூகநீதிக்கான தத்துவம். அவருக்கு இறப்பு கிடையாது. எப்போதும் நம்முடன் இருக்கிறார்.


தமிழ்த் திரையில் மண்வாசனை மணக்கச் செய்தவரும் கலைஞரின் அன்புக்குரியவருமான இயக்குநர் பாரதிராஜா:

நடிகர் திலகமும், கலைஞரும் இல்லையென்றால் இந்த பாரதிராஜாவே இல்லை. அகநானூறு, புறநானூறு, திருக்குறள் அனைத்தும் அவரிடம் எளிமையாக இருக்கும். தமிழ் என்றால் கலைஞர், கலைஞர் என்றால் தமிழ். அவர், மொழி காத்த தமிழன், இனம் காத்த தமிழன். கோடானுகோடி இதயங்களில் சிம்மாசனமிட்டிருக்கிற தமிழன். மனிதாபிமானமுள்ள மனிதன். வீரமுள்ள தமிழன். அப்படிப்பட்டவர் தமிழக அரசு கொண்டாடிய தமிழ் சினிமா நூற்றாண்டு விழாவில் கலைஞர் இல்லை என்பதில் எனக்கு வருத்தம் உண்டு. கலைஞரே உங்களுக்கு மரணமில்லை.

கலைஞரின் திரைத்தமிழை திரைப்பாடமாகக் கற்ற நடிகர் சிவகுமார்:

பராசக்தியில் இரண்டரை மணி நேரப் படத்தை கடைசி 4 நிமிட காட்சிகளில் கோர்ட் சீனாக வைத்து, மொத்த திரைப்பட உலகையே மாற்றியவர் கலைஞர். தன் கொள்கைகளை எப்படியாவது சாமர்த்தியமாக படத்தில் சேர்த்து விடுவார். சாக்ரடீஸ் நாடகத்தில் அதை சொல்லியிருப்பார் தரம் குறையாத கருத்துகள். தங்கம் போன்ற கொள்கைகள். மொழி எனக்கு மட்டும் உரியதல்லவே, அவர்களும் பேசட்டுமே பேசிப்பார்க்கட்டும் என்று அப்போதே சொல்லியிருப்பார். அரசியல் - கலை - இலக்கியத்தில் கலைஞரை எக்காலத்திலும் யாரும் அசைக்க முடியாது.

தமிழ் வானைப் போலவே, திரை வானிலும் சூரியனாக ஒளிரும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு தமிழ்த் திரையில் மின்னும் நட்சத்திரங்கள் நடத்திய புகழாஞ்சலி உரைகள் புத்துணர்வினால் இதயத்தை ஈர்த்தன. செந்தமிழ் போல தலைவர் கலைஞர் அவர்களும் என்றென்றும் செழித்த புகழுடன் விளங்குவார் என்பதை உணர்த்தின. மறக்க முடியாத வாழ்வில் எவராலும் துறக்க முடியாத கலைஞரை மனதில் கொண்டு, கலையுலகில் அவர் பட்டொளி வீசிப் பறக்க விட்ட - உயர்த்திப் பிடித்த கொள்கைக் கொடிகளை உயிருள்ளவரை உயர்த்திப் பிடிப்போம்! உன்னத மாற்றத்தை உருவாக்குவோம்!

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.

English summary
MK Stalin posts in facebook that the stars are praising the rising sun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X