For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விலை உயர்ந்துவிட்டதால் சத்துணவில் முட்டையையே நிறுத்துவதா? - ஸ்டாலின் கண்டனம்

சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவது வேதனையானது என்று ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முட்டை விலை அதிகமாகி விட்டது என்று காரணம் காட்டி முட்டைகள் கொள்முதலை நிறுத்தி, சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறுத்த அதிமுக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில், 2 வயது குழந்தைகள் முதல் சுமார் 69 லட்சம் பள்ளி மாணவ - மாணவியர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவுத் திட்டத்திற்குத் தேவையான முட்டைகளை கொள்முதல் செய்வதில் குதிரை பேர அதிமுக அரசு அலட்சியம் காட்டியிருப்பதால், சத்துணவு மையங்களுக்கு முட்டைகள் வழங்கப்படவில்லை என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

MK Stalin slams ADMK govt for stopping egg in noon meals scheme

பொறுப்பற்ற அதிமுக அரசின் இச்செயலுக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன்முதலில், 1989 ஆம் ஆண்டு முதல் சத்துணவுத் திட்டத்தில், இரு வாரங்களுக்கு ஒரு முட்டை வழங்கவும், பிறகு 1998-ல் வாரத்திற்கு ஒரு முட்டையும் வழங்கவும் உத்திரவிட்டு, பள்ளிக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கொடுத்து கிடைக்கவும், வறுமையால் பள்ளிக்கூடங்களில் இருந்து நிற்கும் குழந்தைகள் மீண்டும் பள்ளிகளில் சேரவும் வழிவகுத்த பெருமை தலைவர் கருணாநிதி அவர்களையே சாரும்.

2006-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த திராவிட முன்னேற்றக் கழகம், வாரத்திற்கு இரண்டு முட்டை வழங்கவும், 15.7.2007 முதல் வாரத்திற்கு மூன்று முட்டைகள் வழங்கவும் உத்திரவிட்டு, சத்துணவுத் திட்டத்தை மேலும் வலுப்படுத்தியது மட்டுமின்றி, வலிமை மிகுந்த வருங்கால சமுதாயத்தை உருவாக்கப் பாடுபட்டது என்பதை யாரும் மறந்து விட முடியாது.

சிறப்புக்குரிய இந்த சத்துணவுத் திட்டத்தில் கலவை சாதம் போடுவதாக குழப்பத்தை ஏற்படுத்திய அதிமுக அரசு, சத்துணவு ஊழியர்களின் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை உதாசீனப்படுத்தியது. முட்டை விலை குறைவாக இருந்தபோது, அதிகவிலை கொடுத்து முட்டைகளை கொள்முதல் செய்து, சத்துணவிற்காக வாங்கப்படும் முட்டைகளுக்கான டெண்டரிலும் முறைகேடுகளுக்கு வழிவகுத்தது.

குழந்தைகளுக்கு சத்துணவு வழங்கும் அமைப்பாளர்கள், சமையல்காரர்கள், ஊழியர்கள் நியமனத்திலும் மாவட்ட அளவில் லஞ்சம் தலைவிரித்தாடியது.

பல சத்துணவு அமைப்பாளர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடுகள் உயர்நீதிமன்ற விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்தது. இப்படி அனைத்து வகையிலும் சத்துணவுத் திட்டத்தை சீரழித்துள்ள குதிரை பேர அரசு இப்போது, முட்டை விலை அதிகமாகி விட்டது, என்று காரணம் காட்டி முட்டைகள் கொள்முதலை நிறுத்தி, சத்துணவுத் திட்டத்தில் முட்டை வழங்கும் திட்டத்தை முழுமையாக நிறுத்த நடவடிக்கை எடுத்து வருவது வேதனையானது.

குழந்தைகளின் எதிர்காலம் பற்றியோ, கல்வி வளர்ச்சி குறித்தோ, மாணவ - மாணவிகள் அவர்களுக்கு பெற வேண்டிய ஊட்டச்சத்து பற்றியோ கவலையும், அக்கறையும் இல்லாத ஒரு ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவது வெட்கக்கேடானது. சத்துணவுத் திட்டத்தில் இந்தக் குழப்பநிலை நீடிப்பது எதிர்கால சமுதாயத்தையே வீழ்த்தக்கூடிய படுபாதகச் செயல் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆகவே, உடனடியாக போதிய முட்டைகள் கொள்முதல் செய்து, ஏற்கனவே நடைமுறையில் உள்ளபடி சத்துணவுத் திட்டத்தில் முட்டைகள் வழங்குவதோடு, சமூகநலத்துறைச் செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர் பள்ளிக் குழந்தைகளுக்காக செயல்படுத்தப்படும் சத்துணவுத் திட்டத்தைச் செம்மையாக நடத்துவதிலும், மாணவ - மாணவியரின் உடல் ஆரோக்கியத்திலும், கல்வி முன்னேற்றத்திலும் கூடுதல் கவனம் செலுத்தவும் வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

English summary
DMK working president MK Stalin has slammed TN govt for stopping egg in noon meals scheme
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X