For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கும்பி எரியுது, குடல் கருகுது இந்த வீண் ஆடம்பர கட்-அவுட் ஒரு கேடா?.. ஸ்டாலின் கொந்தளிப்பு

தமிழக அரசின் ஆடம்பர கட் அவுட் கலாசாரத்துக்கு திமுக செயல் தலைவர் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக மக்கள் டெங்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் செத்து மடியும் நிலையில் வீண் ஆடம்பர கட் அவுட் ஒரு கேடா என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சாடியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

பொதுமக்களின் கடும் வெறுப்புக்குள்ளாகி இருக்கின்ற பேனர், கட்-அவுட் கலாசாரத்தைத் தவிர்ப்போம் என திமுக தொண்டர்களுக்கு பலமுறை அன்பு வேண்டுகோள் விடுத்ததுடன், உங்களில் ஒருவனாக அதுகுறித்து கடிதமும் எழுதியிருக்கிறேன். ஆடம்பரமான இத்தகைய பேனர், கட்அவுட்டுகளுக்குப் பதில் திமுகவின் இருவண்ணக் கொடிகளை பறக்கவிட்டு, நமது கொள்கை முழக்கத்தைத் தொடர்ந்திடுவோம் என்றும் வலியுறுத்தினேன். தமிழகத்தின் பல இடங்களிலும் திமுக தொண்டர்கள் இதனைக் கடைப்பிடிப்பதில் எனக்கு மகிழ்ச்சி ஏற்படுவதையும், ஒருசிலர் ஆர்வமிகுதியின் காரணமாக ஆடம்பர விளம்பரங்களான பேனர், கட்அவுட்டுகளை வைப்பதால் ஏற்பட்ட மனவருத்தங்களையும் முன்பே வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறேன்.

பல நேரங்களில் பேனர், கட்-அவுட்டுகளை அகற்றினால்தான் நிகழ்ச்சிக்கு வருவேன் என அன்புப் பிடிவாதம் காட்டிய நிகழ்வுகளும் உண்டு. எளிமையான விளம்பரங்கள், எங்கெங்கும் கழக கொடிகள், அன்பு பொங்கும் உற்சாக வரவேற்பு இவையே திமுகவின் நடைமுறையாக இருக்கவேண்டும் என்பதைக் செயல் தலைவர் என்றமுறையில் தொடர்ந்து வலியுறுத்தி, 'கட்-அவுட் கலாசாரத்திற்கு கெட்-அவுட்' சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில், இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் முக்கியமான உத்திரவினைப் பிறப்பித்துள்ளது கவனத்திற்கு உரியதாகும்.

சென்னை, அரும்பாக்கம் ராணி அண்ணாநகரைச் சேர்ந்த திருலோசன குமாரி என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'தனக்கு சொந்தமான இடத்தில், அரசியல் தலைவர்களின் பேனர், கட்-அவுட் ஆகியவை தொடர்ந்து வைக்கப்படுவதால் வீட்டிற்கும், அதையொட்டி இருக்கின்ற வாடகைக்கு இயங்கும் கடைகளுக்கும் இடையூறாக இருப்பதாகவும், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அதனால் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் கட்-அவுட், பேனர், பிளக்ஸ் போர்டு வைக்கும் முறையை முறைப்படுத்த வேண்டும்', என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அக்டோபர் 24ந் தேதி அளித்த உத்தரவில், "தமிழகம் முழுவதும் ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் தமிழ்நாடு திறந்தவெளிச் சட்டம் 1959-ல், அவ்வப்போது மேற்கொள்ளப்படும் திருத்தங்களைக் கடைபிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதையும் மீறி எப்போதாவது கட்-அவுட், பிளக்ஸ், பேனர் வைக்க அதிகாரிகள் அனுமதி அளித்தாலும், உயிரோடு இருக்கும் நபர்களுக்கு இத்தகைய கட்-அவுட், பேனர், பிளக்ஸ் போர்டுகள் வைக்க அனுமதிக்கக் கூடாது.

உயர்நீதிமன்ற உத்தரவு

உயர்நீதிமன்ற உத்தரவு

இதுதொடர்பாக, அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள், ஒன்றியங்கள், நகராட்சி மற்றும் மாநகராட்சி நிர்வாகங்களுக்கும் தமிழக தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என இந்த நீதிமன்றம் அறிவுறுத்துகிறது", என உத்திரவிட்டுள்ளார். போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு எரிச்சலூட்டும் வகையிலும் அமையும் இத்தகைய பேனர், கட்-அவுட் கலாசாரம் முடிவுக்கு வரவேண்டும் என கருதக்கூடிய அனைவரும் இந்தத் தீர்ப்பினை வரவேற்பார்கள். அதேவேளையில், தனிப்பட்ட முறையில் திருமணம், வரவேற்பு, பிறந்தநாள், காதணி போன்ற குடும்ப விழாக்களை தனிப்பட்ட நடத்துவோர், உரிய அனுமதி பெற்று, விழா நடைபெறும் இடத்தில், தங்கள் குடும்பத்தினரின் படங்களுடன் பேனர் வைப்பதற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்பது நமது விருப்பமும் வேண்டுகோளாகும்.

தவறான முன்னுதாரணம்

தவறான முன்னுதாரணம்

எனினும், அடிக்கு அடி பேனர் வைக்கும் கலாசாரத்தை உருவாக்கி, இந்தியாவுக்கே தவறான முன்னுதாரணத்தைக் காட்டி வரும் ‘குதிரை பேர' அ.தி.மு.க., அரசு, நீதிமன்ற உத்தரவினை மதிக்காமல் செயல்படுவது சட்டமீறல் மட்டுமின்றி, நீதிமன்ற அவமதிப்பாகும். அவமதிப்பதும், அதன்பிறகு நீதியின் கரங்களால் குட்டுப்படுவதும் அ.தி.மு.க.வுக்குப் புதியதல்ல. சமச்சீர் கல்வி, கெயில் திட்டம், காவிரி வழக்கு என தொடர்ந்து உயர்நீதிமன்றத்தாலும், உச்சநீதிமன்றத்தாலும் குட்டு வாங்கிய ஆட்சிதான் அ.தி.மு.க. ஆட்சி.

விசாரிக்க மறுத்த ஹைகோர்ட்

விசாரிக்க மறுத்த ஹைகோர்ட்

இந்தநிலையில், நீதிமன்ற உத்திரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும், எனவே உத்திரவுக்கு தடைகோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக எடுத்துக் கொண்டு விசாரணை செய்ய வேண்டும் என மாநகராட்சி சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, "இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய முகாந்திரம் என்ன?", என்று கேள்வி எழுப்பிய அமர்வு நீதிபதிகள், உத்திரவுக்கு தடை விதிக்க மறுத்து, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்ததுடன், தனி நீதிபதியின் உத்திரவை உறுதி செய்தனர்.

நீதிமன்ற அவமதிப்பு

நீதிமன்ற அவமதிப்பு

எனவே, உயிருடன் உள்ளவர்களின் படங்களுடன் பேனர், கட்-அவுட் வைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்திரவு உறுதி செய்யப்பட்டு இருந்த நிலையில், திருச்சியில் அரசு சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக நகரெங்கும் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்ட பேனர், கட்-அவுட்டுகளில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர்,, ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு இணையாக, தற்போதைய முதல்வர், துணை முதல்வர் ஆகியோரின் படங்களும் இடம்பெற்றிருந்தது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பாகும். இதன்மூலம், ‘தமிழ்நாட்டில் நடக்கும் ஆட்சி நிர்வாகம் ஒரு நடைப்பிணம்', என்பதை ஆட்சியாளர்கள் தாங்களாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்கள். திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய இப்படிப்பட்ட பேனர், கட்-அவுட் அத்துமீறல்கள் அப்பட்டமாக அரங்கேறியுள்ளன.

கந்துவட்டி தற்கொலைகள்

கந்துவட்டி தற்கொலைகள்

நிர்வாக சீர்கேடும், நீதிமன்ற அவமதிப்புமும் நிறைந்த அ.தி.மு.க. ஆட்சியின் அலங்கோல நிலையை உயர்நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லும் எண்ணத்துடன், திருச்சியில் பேனர்கள், கட்-அவுட்டுகள் அனுமதியின்றி விதிமீறல்களுடன் வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக, சமூக ஆர்வலர் ‘டிராபிக் ராமசாமி' சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அக்டோபர் 26ந் தேதி இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கில், "அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை ஒரு நாளுக்குள் (அக்டோபர் 27) அகற்ற வேண்டும் எனவும், அதுதொடர்பான அறிக்கையை வருகிற திங்கட்கிழமை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்", எனவும் உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கத்தால், டெங்கு காய்ச்சல் உயிர்பலிகள் நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கந்துவட்டி கொடுமையினால் தீக்குளிப்பு உயிர்ப்பலிகளும், தற்கொலை முயற்சிகளும் தொடர்கின்றன.

குடல் கருகுதே

குடல் கருகுதே

இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல், எம்.ஜி.ஆருக்கு விழா என்று சொல்லிக்கொண்டு, தங்களுக்கு கட்-அவுட் வைத்துக்கொள்ளும் சுயமோகிகளின் கைகளில் சிக்கித் தவிக்கிறது தமிழ்நாடு. தாழ்ந்து கிடக்கும் தமிழகத்தின் நிலைக்குக் காரணமான உருவங்களை எல்லாம் உயர்ந்து நிற்கும் பேனர், கட்-அவுட்டுகளில், பார்க்கும் பொதுமக்கள், "கும்பி எரியுது, குடல் கருகுது இந்த வீண் ஆடம்பர கட்-அவுட் ஒரு கேடா?" எனக் கேட்கிறார்கள். மக்களின் உயிரையும் நலனையும் மதிக்காத ‘குதிரை பேர' அ.தி.மு.க. அரசு, நீதிமன்றத்தையும் அவமதித்து ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கிறது. எத்தர்களின் பித்தலாட்டம் இன்னும் எத்தனை நாளைக்கு?

இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.

English summary
DMK Working President MK Stalin slammed that the TamilNadu Govt on banner issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X