For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மஞ்சள் விவசாயிகள் தற்கொலையை தடுக்க காலிங்கராயன் கால்வாய் நீரை திறக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: ஈரோடு மஞ்சள் விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க காலிங்கராயன் கால்வாய் நீரை திறந்துவிட வேண்டும் என்று திமுக பொருளாளர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் விவசாயிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் அதிர்ச்சியடைய வைக்கிறது. தான் பயிரிட்ட மஞ்சள் பயிர் கருகிப் போனதைப் பார்த்து முதலில் ஈரோடு மாவட்டம், ஊஞ்சலூரை அடுத்த கரட்டுப்பாளையத்தில் விவசாயி ராமலிங்கம் தற்கொலை செய்து கொண்டார். பிறகு அதே மாவட்டத்தில் உள்ள தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த மஞ்சள் விவசாயி முத்துச்சாமி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

காவேரி டெல்டா பகுதிகளில் நெற்பயிர் வாடுவதைப் பார்த்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றால் கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் பயிர் கருகுவதைப் பார்த்து விவசாயிகள் தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கிறார்கள் என்பது வேதனை தரும் செய்தியாக இருக்கிறது.

மஞ்சள் விவசாயத்துக்கு ஆதாரம்..

மஞ்சள் விவசாயத்துக்கு ஆதாரம்..

பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்திற்குட்பட்ட 24,500 ஏக்கருக்கும், காலிங்கராயன் கால்வாய் பாசனத்திற்குட்பட்ட 15,400 ஏக்கருக்கும், கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட இரண்டு லட்சத்து 7000 ஏக்கருக்கும் நீர் வழங்கப்பட்டு வருகிறது. மஞ்சள் விவசாயத்திற்கு இதுதான் ஆதாரம் என்பதால் இந்த தண்ணீரை நம்பியை இப்பகுதி விவசாயிகள் இருக்கிறார்கள்.

நீர் திறப்பு நிறுத்தம்

நீர் திறப்பு நிறுத்தம்

இந்த சூழ்நிலையில் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் தேதி காலிங்கராயன் கால்வாயிலிருந்து தண்ணீர் திறந்து விட்ட அதிமுக அரசு, செப்டம்பர் 9 ஆம் தேதியன்றே நிறுத்தி விட்டது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்ற இரு பேச்சுவார்த்தைகளில் "தண்ணீர் திறந்து விடப்படும்" என்று வாக்குறுதி கொடுத்தும் இதுவரை மஞ்சள் விவசாயத்தைக் காப்பாற்ற காலிங்கராயன் கால்வாயில் தண்ணீர் திறந்து விடவில்லை.

விவசாயிகள் தற்கொலை

விவசாயிகள் தற்கொலை

தொடர்ந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாலும், மஞ்சள் பயிர்கள் எல்லாம் வாடி, வதங்கி, கருகிப் போவதாலும் விவசாயிகள் மனமுடைந்து போயிருக்கிறார்கள். இதனால் தன்னெழுச்சியான போராட்டம் உருவாகி, அந்த விவசாயிகளின் துயர் துடைக்க நடைபெற்ற நேற்றைய போராட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத் துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்ட கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்று விவசாயிகளுடன் கைதாகியும் உள்ளார்கள்.

நீரை திறந்துவிடுக

நீரை திறந்துவிடுக

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தண்ணீர் திறந்து விடுவது குறித்து அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. உணர்வுபூர்வமான போராட்டத்திற்கு அதிமுக அரசு மதிப்புக் கொடுக்காததால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள மஞ்சள் விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆகவே காலிங்கராயன் கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறந்து விட்டு, மஞ்சள் விவசாயத்தை காப்பாற்றுமாறும், ஈரோடு மாவட்டத்தில் இதனால் ஏற்படும் விவசாயிகளின் தற்கொலைகளை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறும் அதிமுக அரசை கேட்டுக் கொள்கிறேன்

இவ்வாறு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

English summary
DMK Treasure MK Stalin has urged that TN gov should release the water from kalingarayan canal water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X