For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அணு உலை: குஜராத் குரலை மதிக்கும் மத்திய அரசு தமிழர் உணர்வை அலட்சியப்படுத்துவதா? ஸ்டாலின்

அணு உலைகள் விவகாரத்தில் குஜராத்தின் குரலை மதிக்கும் மத்திய அரசு தமிழர்களின் உணர்வை அலட்சியப்படுத்துவது ஏன் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: அணு உலைகள் விவகாரத்தில் குஜராத்தின் குரலை மதிக்கும் மத்திய அரசு தமிழர்களின் உணர்வை அலட்சியப்படுத்துவது ஏன் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கூடங்குளம் அணுமின் நிலைய விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திரா சிங், ராஜ்குமார் சிங் ஆகியோருக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதம்:

கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வாழும் லட்சக்கணக்கான மக்களை கவலைக்குள்ளாக்கியிருக்கும், அதன் பாதுகாப்புஅம்சங்களை தங்களது கவனத்துக்குகொண்டுவர விரும்புகிறேன். சில மோசமான பாதிப்புகள் காரணமாக அடிக்கடி அணு உலைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என்ற வெளிவரும் செய்திகளின் காரணமாக, அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து அம்மக்கள் பீதியடைந்துள்ளனர். குறிப்பாக, அணு உலையின் இரண்டாவது அலகு இது போன்ற கோளாறுகளால் அடிக்கடி நிறுத்தப்படுவதும், உற்பத்தி பாதிக்கப்படுவதும் வேதனையையும் கவலையையும் அளிக்கிறது.

MK Stalin urges to shift out Kudankulam two nuclear plants

எனவே மக்களின் அச்சத்தைப் போக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதற்காக இந்த பிரச்சினையை தங்களின் கவனத்திற்கு கொண்டு வர இந்த கடிதத்தை எழுதுகிறேன். அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம், இந்திய அணுமின் கழகம், அணு சக்தித்துறை மற்றும் மத்திய - மாநில அரசுகள் ஆகியவை இந்த அணு உலைகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என 15 கட்டளைகளை, இந்த அணுமின் நிலையம் செயல்படுவதற்கான அனுமதித்து வழங்கிய உச்சநீதிமன்றம் 6 மே 2013 தேதியிட்ட தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறது என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

அந்த கட்டளைகளில் மிக முக்கியமான கட்டளை, பாதுகாப்பை தொடர்ந்து செயலாக்குதல் என்பது அணு உலை வடிவமைப்பு மட்டத்தில்மட்டுமல்லாது, அணுமின் நிலையத்தின் தொடர் செயல்பாடுகளிலும் கடைப்பிடிக்க வேண்டிய தொடர் நடவடிக்கை. அணுமின் நிலையம், கதிரியக்கப் பொருட்கள் ஆகியவற்றைபாதுகாத்தல், என்.எஸ்.எஃப்-ன் பாதுகாப்பைஉறுதிசெய்தல் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்திய அணுமின் கழகம், அணுசக்தி கட்டுப்பாட்டு வாரியம், ஒழுங்குமுறைஆணையம் ஆகியவை தொடர்ந்துகண்காணித்து, மூன்று மாதத்துக்கு ஒரு முறை அணுமின் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, ஏதாவது பாதுகாப்புக் குறைபாடுகள் தெரியவந்தால், அதனை உடனே சரிசெய்ய வேண்டும் என கூறியிருக்கிறது.

இது இப்படியிருக்க, தண்ணீர் மற்றும் நீராவி கசிவு (Water and steam leakage), மின்சார ஜெனரேட்டரில் பிரச்னை (problems in electricl generators) எனபல காரணங்களுக்காக அணு உலையின் இரண்டாவது அலகில் மின் உற்பத்தி அடிக்கடி நிறுத்தப்படுவதாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகவும், கூடங்குளம் அணு உலையை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் மனதில் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

கடந்த டிசம்பர் 8, 2017 அன்று டெல்லியில் நடைபெற்ற, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான "Conference of Ministers for Power and Renewable Energy" மாநாட்டில் பங்கேற்ற தமிழகமின்துறை அமைச்சரும் மேற்கண்ட செய்திகளை உறுதிப்படுத்தியுள்ளார். அந்த மாநாட்டில் பேசிய தமிழக மின்துறை அமைச்சர், கூடங்குளம் அணு மின் நிலைய இரண்டாவது அலகில் ஏற்படும் தொழில்நுட்ப கோளாறுகளின் காரணமாக, அதில் உற்பத்தி செய்யப்படும் முழுதிறனை தமிழகத்தால் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை" என்றும், "Stator Cooling water Motor Trip"-ல் ஏற்பட்ட பழுது காரணமாக கடந்த ஆகஸ்ட் 24, 2017 முதல் இரண்டாவது அலகு மூடப்பட்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளார். மேலும், "2000 மெகாவாட்டில் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட 1125 மெகாவாட் கிடைப்பதில்லை" என்றும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தைச் சுற்றி வாழும் மக்கள்தங்களுடைய பாதுகாப்பு குறித்து கவலையடைந்திருப்பதோடு, ஃபுகுசிமா அணுஉலைப் பேரழிவின் தாக்கங்களும் அவர்களது நினைவுகளில் நிழலாடி அச்சமூட்டி வருகிறது. உச்சநீதிமன்றம் மற்றொரு முக்கிய கட்டளையாக, கூடங்குளத்தில் அமைதியும் இயல்பு நிலையும் திரும்புவதற்கு ஏதுவாக போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட அனைத்து கிரிமினல் வழக்குகளையும் திரும்பப் பெற முயற்சிமேற்கொள்ளப்பட வேண்டும் என கூறியிருந்தது. இக் கட்டளையடங்கிய தீர்ப்பு வெளியாகி நான்கரை ஆண்டுகள் கடந்த பின்பும், உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவைபின்பற்றாதது கூடங்குளம் அணு உலையைசுற்றி வாழும் மக்களுக்கு அதிருப்தியை உண்டாக்கியிருப்பதோடு, உச்சநீதிமன்றத்தின்15 கட்டளைகளை நிறைவேற்றவும் மத்தியமற்றும் மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை, மாநில மற்றும் தேசிய நலனுக்கான திட்டம் என உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ள இத்திட்டத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் வழக்குகளை திரும்பப் பெறவும் ஆர்வம் காட்டவில்லை என்று மக்கள் கருதுகிறார்கள். கூடங்குளம் அணு உலையின் ஒன்றாம் மற்றும் இரண்டாம் அலகுகளின் பாதுகாப்பு குறித்து இதுபோன்ற சந்தேகங்கள் நிலவுகின்ற நேரத்தில் இருக்கின்ற உலைகள் பற்றிய பாதுகாப்பு குறித்து மக்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தாமல், அப்பகுதி மக்களுடைய அச்சத்தை தீர்க்க நினைக்காமல், தமிழகத்தில் உள்ள கூடங்குளத்தில் மேலும் இரண்டு அணு மின்நிலையங்களை (மூன்று மற்றும் நான்காம் அலகுகள்) அமைக்க இந்திய அரசுகையெழுத்திட்டிருப்பது ஆச்சர்யமளிக்கிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள 6000 மெகாவாட்உற்பத்தி திறன் கொண்ட ஆறு அணுஉலைகள் உள்ள மிதிவிருதி அணுமின்நிலையம் மக்கள் எதிர்ப்பு காரணமாக ஆந்திர மாநிலத்துக்கு மாற்றப்பட்டதை இங்கேசுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. குஜராத் மக்களின் குரலைமதித்து அதற்கேற்றபடி அணு உலையை மாற்றிய மத்திய அரசு, தமிழக மக்களின் நியாயமான குரலையும் அச்ச உணர்வையும் அலட்சியப்படுத்துவையும் புறக்கணிப்பதையும் முற்றிலுமாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

English summary
DMK Working President M.K. Stalin has urged the Central government to examine the safety of Kudankulam nuclear plants and also shift the upcoming units from the TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X