For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மெல்லிசை மன்னர் எம்எஸ் விஸ்வநாதன் காலமானார்... அதிகாலையில் உயிர் பிரிந்தது!

By Shankar
Google Oneindia Tamil News

மெல்லிசை மன்னர் என தமிழ்ச் சமூகத்தால் அன்புடன் அழைக்கப்பட்ட பிரபல இசையமைப்பாளர் எம்எஸ் விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 87.

மனயங்கத் சுப்ரமணியன் விஸ்வநாதன் என்ற இயற்பெயர் கொண்ட எம்எஸ் விஸ்வநாதன் பாலக்காட்டில் உள்ள எலப்புள்ளி கிராமத்தில் 1928-ல் பிறந்தவர். அவரது பெற்றோர் மனயங்கத் சுப்பிரமணியன் - நாராயணி குட்டி.

MS Viswanathan passes away

நான்கு வயதில் தந்தையை இழந்து வறுமையில் வாடிய எம்எஸ்வி, மிக இளம் வயதிலேயே நாடகக் குழுவில் சேர்ந்தார். நடிக்கவும், பாட்டுப் பாடவுமே அவரது விருப்பமாக இருந்தது.

13 வயதில் திருவனந்தபுரத்தில் தனது முதல் மேடைக் கச்சேரியை நடத்திய எம்எஸ்வி, 1950களில் எஸ்எம் சுப்பையா நாயுடு மற்றும் சிஆர் சுப்பாராமன் ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றினார்.

1952-ல் சி ஆர் சுப்பாராமன் காலமாகிவிட, அந்த நேரத்தில் அவர் பணியாற்றிக் கொண்டிருந்த மருமகள், சண்டி ராணி, தேவதால் மற்றும் ஜெனோவா போன்ற படங்களை முடித்துக் கொடுத்தவர் எம்எஸ்விதான்.

பின்னர் கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் தயாரித்த பணம் படத்துக்கு இசையமைப்பாளர்களாக எம்எஸ்வியும் டிகே ராமமூர்த்தியும் ஒப்பந்தம் செய்யப்பட்டனர். எம்எஸ்வி - டிகே ராமமூர்த்தி இரட்டை இசையமைப்பாளர்கள் முதன் முதலில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமான படம் பணம்-தான்.

அதன் பின்னர் இந்த இரட்டையர்கள் காலம்தான் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தது. 1952-லிருந்து 1965 வரை இந்த இருவரும் இணைந்து காலத்தால் மறக்க முடியாத பல காவியப் பாடல்களைப் படைத்தனர்.

இருவரும் இணைந்து 100-க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும். டிகே ராமமூர்த்தியைப் பிரிந்த பிறகு, தனியாக 700-க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்தார் எம்எஸ் விஸ்வநாதன். கடைசியாக அவர் இசையமைத்த படம் சுவடுகள்.

தமிழ் தவிர, மலையாளத்தில் 74 படங்களுக்கும், தெலுங்கில் 31 படங்களுக்கும் இசையமைத்துள்ளார் எம்எஸ்வி.

கடந்த சில வாரங்களாகவே உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று அதிகாலை 4.15 மணிக்கு காலமானார். இவர் தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதும், சிறந்த இசையமைப்பாளருக்கான கேரள அரசு விருதும் பெற்றவர்.

காலத்தால் அழியாத பல காவியப் பாடல் தந்த எம்எஸ் விஸ்வநாதனின் மனைவி ஜானகி கடந்த 2012-ம் ஆண்டு மறைந்தார். எம்எஸ்வி - ஜானகி தம்பதிக்கு நான்கு மகன்கள், மூன்று மகள்கள்.

அவரது உடல் சென்னை சாந்தோமில் உள்ள இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறுகின்றன.

English summary
Legendary Music Director MS Viswanathan was passed away today early morning at a private hospital Chennai. He was 87.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X