For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கோட்டையில் கெடுபிடி- தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியா? சென்னை பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை வளாகத்தில் பத்திரிகையாளர்கள் நேற்று கடுமையான கெடுபிடிகளுக்கு உள்ளாக்கப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் இரா. மோகன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரத்துக்கு விடப்பட்ட சவாலாகவே, தமிழக அரசின் நேற்றைய நடவடிக்கைகள் இருந்தன. பத்திரிகையாளர்கள் தலைமை செயலகத்துக்கு உள்ளே வருவதற்கு போலீசாரால் மிகப்பெரும் கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டது.

பத்திரிகையாளர் அறைக்குச் செல்லக் கூடிய வழி இழுத்து பூட்டப்பட்டது. 4-வது வாயில் அருகே பத்திரிகையாளர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த இடம், 500 மீட்டருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு எதிராக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பார்க்கும் போது தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் இருப்பதாக கருதவேண்டிய நிலை ஏற்பட்டது.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்த செய்தி சேகரிக்க சென்னை கோட்டைக்கு வந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் இங்கும் அங்குமாக காவல்துறையால் அலையவிடப்பட்டனர். காலை 10 மணி சட்டப்பேரவை நிகழ்ச்சிக்கு காலை 8.30 மணிக்கெல்லாம் வந்து காத்துகிடக்க பத்திரிகையாளர்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.

சட்டப்பேரவையின் 4-வது வாயில் அருகே உள்ள பத்திரிக்கையாளர் அறையின் அருகே உள்ள கதவு மூடப்பட்டதால் மாலை நாளிதழ்களில் பணியாற்றும் நிருபர்களும் தொலைக்காட்சிகளில் பணியாற்றும் நிருபர்களும் சட்டப்பேரவை நிகழ்வின் செய்தியை கொடுக்க மிகவும் சிரமப்பட்டனர். சட்டப்பேரவையிலும் பொதுக்கூட்டங்களிலும் அரசால் நடத்தப்படும் அனைத்து கூட்டங்களிலும் தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாக முதல்வரின் பேச்சு உள்ளது.

அமைதிப் பூங்காவாக இருக்கும் ஒரு மாநிலத்தில் பத்திரிகையாளர்களுக்கே இவ்வளவு கெடுபிடிகள் என்றால் தங்கள் பிரச்சனைக்காக கோட்டைக்கு புகார் அளிக்க வரும் அப்பாவி பொதுஜனங்களின் நிலை என்னவாக இருந்திருக்கும்? அவர்கள் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு கொடுக்க வந்திருக்க முடியும்? அதுவும் காவல்துறை மானிய கோரிக்கை நடக்கும் நாளிலே இந்த நிலை என்றால் இதற்கு பெயர் அமைதிப் பூங்காவா?

அமைதிப் பூங்காவாக இருக்கும் ஒரு மாநிலத்தில் பத்திரிகையாளர்கள் ஏன் அலைகழிக்கப்பட வேண்டும். பத்திரிகையாளர் அறைக்கு செல்லும் வழியில் உள்ள கதவுகள் ஏன் பூட்டப்பட வேண்டும். ஆண்டாண்டு காலமாக செய்தி சேகரித்து வந்த பத்திரிகையாளர்களை அந்த இடத்தை விட்டு ஏன் விரட்டி அடிக்க வேண்டும். அமைதிப்பூங்காவாக இருக்கும் நாட்டில் எல்லாம் இயல்பாகத்தானே இருக்க வேண்டும். பத்திரிகையாளர்களை கடமையை ஆற்றவிடாமல் கெடுபிடிகளும் நெருக்கடிகளையும் சந்தித்துக் கொண்டு கதவு பூட்டப்பட்ட இடத்தில் இருந்து தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று செய்தி கொடுக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றால் தமிழக அரசுடன் சேர்ந்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் வேலையை செய்ய வேண்டிய நிலைக்கு பத்திரிகையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

முரண்பட்ட, உண்மைக்கு மாறான செய்திகளை கொடுக்க வேண்டிய நிலைக்கு தமிழக ஊடங்கள் அரசால் நிர்பந்தபடுத்தப்பட்டுள்ளன என்பதுதானே யதார்த்தம்.

நேற்றைய சம்பவங்களுக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்களின் பணிவான வேண்டுகோள், ஒன்று பத்திரிகையாளர்களை சுதந்திரமாக பணியாற்ற அனுமதியுங்கள்.

இல்லை என்றால் பத்திரிகையாளர் அறைக்குப் பூட்டுபோட்டு விடுங்கள். ஏன் என்றால் நீங்களோ உங்கள் அமைச்சர்களோ அரசு அதிகாரிகளோ பத்திரிகையாளர்களை சந்திப்பதே இல்லை.

அரசின் நடவடிக்கைகள் செய்தி குறிப்புகளாகவும் அறிக்கைகளாகவும் புகைப்படங்களாகவும் ஃபேக்ஸ் மற்றும் மெயிலில் வந்துவிடுகின்றன. அன்றாட வேலைகள் இல்லாத இடத்துக்கு பத்திரிகையாளர்கள் வந்து செல்வதால் தேவையில்லாத பிரச்சனனகள் எழுவதாக அரசு அதிகாரிகளும் காவல்துறையும் நினைக்கலாம்.

பத்திரிகையாளர் அறை பூட்டப்பட்டுவிட்டால் பத்திரிகையாளர்கள் இல்லாத கோட்டையும் அமைதிப் பூங்காவாக திகழலாம் என நாங்களும் கருதுகிறோம்.

இவ்வாறு சென்னை பத்திரிகையாளர் சங்கத் தலைவர் இரா. மோகன் கூறியுள்ளார்.

English summary
MUJ has condemned the TN govt for restrictions in Assembly campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X