For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தும் நடவடிக்கை அரசுக்கு கிடைத்த வெற்றி: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அரசின் தொடர் முயற்சியால் தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Mullai Periyaru water raise 142 feet: TN people get victory – Jayalalitha

சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110-ன் கீழ் வாசித்த அறிக்கையில்: "முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்ற தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தமிழக அரசு எடுத்த திடமான, உறுதியான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மற்றும் உச்ச நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு முன்பு தமிழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட வலுவான வாதங்கள் மூலம் தமிழகத்திற்கு கிடைத்த நியாயமான தீர்ப்பினையடுத்து, மத்திய அரசின் ஒத்துழைப்போடு நேற்று, அதாவது, 17.7.2014 அன்று, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்கு மேற்பார்வை குழு எடுத்த முடிவினை அடுத்து; அடைப்பான்கள் கீழ் இறக்கப்பட்டன.

இது தமிழ்நாட்டிற்கு கிடைத்த வெற்றி; தமிழக மக்களுக்கு குறிப்பாக விவசாயப் பெருங்குடி மக்களுக்கு கிடைத்த மகத்தான வெற்றி. இந்த நடவடிக்கை மூலம் 37 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க இந்த வெற்றி என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி இருக்கிறது. இதன் மூலம், முல்லைப் பெரியாறு நதிநீர்ப் பிரச்சனையில் தமிழக மக்களின் உரிமை நிலைநாட்டப்பட்டு இருக்கிறது.

5 மாவட்ட மக்கள்

தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு உயிர் நாடியாக விளங்கும் முல்லைப் பெரியாறு அணை குறித்து கேரள மற்றும் சென்னை உயர் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்கள் 2002-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன.

கேரளா ஒத்துழைப்பு

இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, எனது அறிவுரையின் பேரில், எனது தலைமையிலான தமிழக அரசின் சார்பில் எடுத்துரைக்கப்பட்ட வலுவான வாதங்களை அடுத்து, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து முதற்கட்டமாக 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும்; அணையினை பலப்படுத்தும் எஞ்சிய பணிகளை மேற்கொள்ளலாம் எனவும்; இப்பணிகளை மேற்கொள்வதற்கு தமிழக அரசுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் 27.2.2006 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கேரளா சட்டத்திருத்தம்

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பினை முற்றிலும் அவமதிக்கும் வகையில், கேரள அரசு, 2003ம் ஆண்டு கேரளா நீர்ப்பாசனம் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டது. இந்த திருத்தச் சட்டத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உச்ச மட்ட நீரளவு 136 அடி என நிர்ணயம் செய்யப்பட்டது. கேரளா அரசின் இந்த சட்ட திருத்தம் செல்லத்தக்கது அல்ல என உத்தரவிடக் கோரி 31.3.2006 அன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

குழு அமைப்பு

முல்லைப் பெரியாறு அணையின் வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசமைப்பு பிரிவு, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டாக்டர் ஏ.எஸ். ஆனந்த் அவர்களை தலைவராக கொண்டு; 5 நபர்களை கொண்ட ஒரு அதிகாரம் படைத்த குழுவினை அமைக்க உத்தரவிட்டது. முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சர் கருணாநிதி இந்த குழுவில் தமிழகம் இடம்பெறாது என அறிவித்தார்.

அறிக்கை வெளியிட்டேன்

தமிழகத்தின் சார்பில் இந்தக் குழுவில் பிரதிநிதியை நியமித்தால் தான் தமிழகத்தின் நலனை காப்பாற்ற முடியும் என நான் அறிக்கை வெளியிட்ட பின் தமிழகத்தின் சார்பில் ஒரு பிரதிநிதியை முந்தைய மைனாரிட்டி தி.மு.க அரசு நியமித்தது.

சரித்திரம் மிக்க தீர்ப்பு

தமிழ்நாடு மற்றும் கேரள அரசின் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்டும்; ஆய்வுகளின் அடிப்படையிலும்; அதிகாரம் படைத்த குழு தனது அறிக்கையினை 25.4.2012 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு அளித்தது. உச்ச நீதிமன்ற தலைமை நீதியரசர் தலைமையிலான 5 நீதியரசர்களை கொண்ட அரசமைப்பு அமர்வு தனது தீர்ப்பினை 7.5.2014 அன்று வழங்கியது.

அணை நீர்மட்டத்தை உயர்த்த உத்தரவு

இந்த தீர்ப்பில், கேரள அரசின், கேரள பாசன மற்றும் நீர்ப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டம், 2006, அரசமைப்பு சட்டத்திற்கு முரணானது என்று உத்திரவிட்டதோடு; உச்ச நீதிமன்றம் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரையில் உயர்த்திக் கொள்ளலாம் என்ற தீர்ப்பிற்கு கேரள அரசு குறுக்கீடு ஏதும் செய்யக் கூடாது என்றும்; அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டவாறு தமிழ்நாடு அரசு பராமரிப்பு பணி மற்றும் வலுப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மேற்பார்வைக்குழு

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பினை நடைமுறைப்படுத்தும் வகையில், மூவர் குழுவை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு பாரதப் பிரதமரை 3.6.2014 அன்று நான்நேரில் சென்று, டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்ததோடு; அதில் உள்ள அம்சங்களை மா பிரதமருக்கு விரிவாகவும், தெளிவாகவும் எடுத்துக்கூறினேன். கோரிக்கையில் இருந்த நியாயத்தைப் புரிந்து கொண்ட பிரதமர் ஆவன செய்வதாக உறுதி அளித்தார்.

தமிழக அரசு வலியுறுத்தல்

அதன்படி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கேற்ப மேற்பார்வைக் குழுவை அமைப்பதற்கான ஆணையை 1.7.2014 அன்று மத்திய அரசு வெளியிட்டது. இந்த ஆணை கிடைக்கப் பெற்றவுடன்; மேற்பார்வை குழு கூட்டம் உடனடியாக கூட்டப்பட வேண்டுமென்று மேற்பார்வைக் குழுவின் தலைவரை தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

நீர்மட்டத்தை உயர்த்த நடவடிக்கை

அதன் அடிப்படையில், இந்தக் குழுவின் முதல் கூட்டம் 8.7.2014 அன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்திலேயே முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்துவதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டுமென்று தமிழகத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது. மேற்பார்வைக் குழுவின் இரண்டாவது கூட்டம் நேற்று, அதாவது, 17.7.2014 அன்று நடைபெற்றது.

இறக்கப்பட்ட அடைப்பான்கள்

இந்தக் கூட்டத்தில் உச்ச நீதிமன்றத்தின் ஆணையை நிறைவேற்றும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டு; அவ்வாறு 142 அடி வரை நீரை தேக்கி வைப்பதற்கு ஏதுவாக அடைப்பான்கள் நேற்றே இறக்கப்பட்டன.

தமிழகத்திற்கு கிடைத்த நீதி

அணையின் அடைப்பான்கள் கீழே இறக்கப்பட்டு 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை, தமிழகத்திற்கு, தமிழக மக்களுக்கு, கிடைத்த வெற்றி. "வெற்றி" என்பதை விட இது தமிழக மக்களுக்கு "வழங்கப்பட்ட நீதி" என்பதை தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்". இவ்வாறு முதல்வர் பேசினார்.

English summary
TamilNadu Chief Minister said assembly, Mullai Periyaru Dam water level increase 142 feet, TamilNadu people get victory.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X