For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நந்தினி கொலை.. குற்றவாளிகளை தண்டிக்க கோரி… தி.க. பெண்கள் மாநாட்டில் அதிரடி தீர்மானம்

சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த நந்தினியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

திருச்சி: சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு, நீதித்துறையிலும் பெண்களுக்கான வாய்ப்பு, பாலியல் சமத்துவம், ஆணவக் கொலைகள் ஒழிப்பு உள்ளிட்ட 36 தீர்மானங்கள் திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

திருச்சியில், திராவிடர் கழக மகளிர் அணி, மகளிர்ப் பாசறை சார்பில் நடைபெற்ற பெண்ணுரிமைப் பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. அதில் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை:

Murders of Nandhini should be punished, DK women wing resolution

திராவிடர் கழக மகளிரணி, மகளிர் பாசறை தோழர்கள் தாங்களும் தாலி அணியக் கூடாது. தங்கள் குடும்பத் திருமணத்திலும் தாலி அணிவிப்பது தவிர்க்கப்படல் வேண்டும்.

ஜாதி ஆணவக் கொலை தடுக்க..

ஈழத்தில் அரங்கேற்றப்பட்ட பாலியல் வன்கொடுமைகளுக்கும், குற்றங்களுக்கும் பொது விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வழி செய்தது போல் செந்துறை கீழ மாளிகை அடுத்த சிறுகடம்பூர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நந்தினியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொடூரமான முறையில் படுகொலை செய்த கொடியவர்களுக்கும் கடும் தண்டணை வழங்க ஆவன செய்ய வேண்டும். முக்கிய குற்றவாளிகள் தப்பித்துவிடாமல் உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜாதி ஆணவக் கொலைகள் கடுமையாகத் தடுக்கப்பட வேண் டும். தீர்ப்புகள் விரைந்து கொடுக்கப்படவும் வேண்டும்.

33 சதவீத இடஒதுக்கீடு

தனியார் நிறுவனங்களிலும், அமைப்புசாரா நிறுவனங் களிலும் பணிபுரியும் மகளிருக்கு ஊதிய பாதுகாப்புடன் கூடிய பேறுகால விடுமுறை வழங்க அரசு ஆவன செய்ய வேண்டும். சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண் களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் மேலும் காலதாமதம் செய்யப்படாமல் எதிர்வரும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் பொழுது அதில் உள் ஒதுக்கீடு மிகவும் அவசியம்.

பெண்களின் மண உரிமை

முழு மதுவிலக்கினைச் செயல்படுத்த பெண்கள் முழு முயற்சியுடன் செயல்படுதல் வேண்டும். பெண்கள் படிக்க விரும்பும் காலகட்டம் வரை திருமணத்தைப் தள்ளிப்போட வேண்டும். மணஉரிமை அவர்தம் தனி உரிமை; இதில் கட்டாயமோ நிர்ப்பந்தமோ கூடாது. பெண்களின் விருப்பத்தை அறியாமல் திருமணம் செய்து வைக்கும் நிர்ப்பந்தம் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும்.

பெண்களுக்கு தற்காப்புக் கலை

அனைத்துப் பள்ளிகளிலும் முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு நாள்தோறும் ஒரு வகுப்பு (குறைந்தது ஒரு மணிநேரமாவது) தற்காப்புக் கலைகளை பாடத்திட்டத்தில் சேர்த்து கற்றுத்தருதல் அவசியம். துப்பாக்கிச் சுடும் பயிற்சியும் இக்காலகட்டத்தில் தேவையே! பெண்களின் பெருமையை உயர்த்தும் வகையிலும், ஆணுக்கு நிகரானவர் பெண் என்ற கருத்து உறுதிப்படும் வகையிலும் பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்.

பெண்களை கொச்சைப்படுத்தும் மதநூல்களுக்கு தடை

கீதையைப் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்ற தனிநபர் மசோதா போர்வையில் செய்யப்படும் முயற்சி தோற்கடிக்கப்பட வேண்டும். பெண்களைக் கொச்சைப்படுத்தும் பழமொழிகள், சாத்திரங்கள், மதநூல்கள் தடைசெய்யப்பட வேண்டும். நடைமுறையிலிருந்து அகற்றப்பட வேண்டும்.

சம வேலைக்கு சம ஊதியம்

சின்னத்திரை, பெரியதிரை, புதினங்களில் பெண்களை முதன்மைப் பாத்திரம் வகிக்கும் வகையில் சித்தரிக்கப்பட வேண்டும். தற்போதுள்ள வில்லிகளாகச் சித்தரிக்கும், அவமானம் ஒழிக்கப்பட வேண்டும். சமவேலைக்குச் சம ஊதியம் என்ற வகையில் ஆண் பெண் ஊதிய விகிதத்தில் வேறுபாடு கூடாது.

பாலின சமத்துவம்

பாலின சமத்துவம் என்பது மனித உரிமை என்று அய்.நா. அறிவித்திருப்பதை இந்தியா முன்னெடுத்து உடனடியாக செயல்படுத்திட வேண்டும். 'குழந்தைக்கு முதல் ஆசிரியர் தாய்' என்பதால், எல்லா வகையான மூடநம்பிக்கைகளிலிருந்தும் பெண்கள் முற்றிலும் விலகி நிற்க வேண்டும்.

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்

பெயர், உடை ஆகியவற்றில் ஆண் பெண் வேறுபாடு தெரியும் வகையில் அமைந்திடக் கூடாது: ஆணா, பெண்ணா என்பது அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை உரிமையைச் சார்ந்ததேயாகும். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் ஆண்டுக்கு 12 சதவீதம் அதிகரித்து வருவது வெட்கக் கேடாகும். நகமும், பல்லும் உள்ள சட்டங்கள் மூலம் இவை தடுக்கப்பட வேண்டும்; இதுபோன்ற குற்றங்களில் விசாரணை அதிகாரிகளாகப் பெண்களே நியமிக்கப்பட வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது சமையல்

சமையல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக்கப்பட வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை பெண்கள் முழு உடற் பரிசோதனையைக் கண்டிப்பாகச் செய்து கொள்ளுதல் அவசியம். வயதானவர்கள் ஆண்டுக்கு இருமுறை செய்து கொள்ளல் விரும்பத்தக்கது.

சுயமரியாதை திருமணங்கள்

மதவாத அரசியல், மதவாத ஆட்சி அதிகாரம் ஆபத்தானதால் இவைகுறித்து ஏற்படுத்தும் விழிப்புணர்வில் பெண்கள் முக்கிய பாத்திரம் வகிக்க வேண்டும். திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம் செய்தல் அவசியம். சுயமரியாதைத் திருமணங்கள் மற்றும் சமூக நிகழ்ச்சிகளுக்குத் தலைமைப் பாத்திரம் பெண்களுக்கு வழங்கப்படுதல் வேண்டும். அதிலும் விதவைகள் என்ற கூறப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுதல் மேலும் சிறப்பானதாக அமையும். குழந்தைகளுக்கு முன்னொட்டாக (Initial) தாய், தந்தை ஆகியோரின் முதல் எழுத்து இணைக்கப்படுதல் அவசியம். (இரண்டு இனிஷியல்கள்)

இரவுப் பணியில் பாதுகாப்பு

குழந்தைகளுக்குச் சூட்டப்படும் பெயர்கள் மத சம்பந்தப்பட்டதாகவோ, அயல்மொழிக் கலப்பாகவோ இல்லாமல் பார்த்துக்கொள்வதில் பெண்கள் கவனம் செலுத்துவது முக்கியமாகும். இரவுப் பணிகளில் ஈடுபடும் பெண்களுக்குப் போதிய பாதுகாப்பும், வாகன வசதியும் செய்து கொடுக்கப்பட வேண்டும். ஓட்டுநர், நடத்துநர், பயணச் சீட்டு பரிசோதகர் போன்ற பணிகள் ஆண்களுக்கு நிகராகப் பெண்களுக்கும் அளிக்கப்படுதல் வேண்டும்.

ஊடகத் துறைகளில்..

மத்திய, மாநில அமைச்சர் பொறுப்பு பெண்களுக்கு அளிக்கும்பொழுது முக்கிய துறைகள் அவர்களுக்கு ஒதுக்கப்படுதல் வேண்டும். ஊடகத் துறைகளில் பெண்களுக்கான இடங்கள் அதிக அளவில் அளிக்கப்பட வேண்டும். பெண்களுக்கான உரிமைகள், சட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு பெண்கள் மத்தியில் பெரும் அளவில் ஏற்படுத்தப்பட வேண்டும்; அதற்கான தனித் துறையை ஏற்படுத்தி அதில் பெண்களைப் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்க வேண்டும்.

மலைவாழ் பெண் நீதிபதிகள்

மகளிர் காவல் நிலையங்கள் நகர்ப் புறங்களில் மட்டுமேயல்லாமல் பரவலாக எல்லாப் பகுதிகளிலும் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். விவாகரத்து வழக்குகள் விசாரணை - தீர்ப்பு குறுகிய காலத்தில் விரைந்து கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். பெண் நீதிபதிகள் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருக்கும் நிலை மாற்றப்பட வேண்டும் - விகிதாசார வகையில் அது அதிகரிக்கப்பட வேண்டும். அது பாலியல் ரீதியாக மட்டும் அமையாமல் சமூகநீதியை உள்ளடக்கியதாக இருப்பது அவசியம். குறிப்பாக தாழ்த்தப்பட்ட, மலைவாழ், பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும்.

பாலியல் கல்வி

ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு சமூகநீதி கிட்டிட, தாய் அல்லது தந்தையாரின் ஜாதியைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் சட்டத்திருத்தம் தேவை. ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்பவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கு தனி சதவீத ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். தொடக்கத்தில் 5 சதவீத இடஒதுக்கீடு என்று தொடங்கி படிப்படியாக அதனை உயர்த்தி ஜாதி அடிப்படை இடஒதுக்கீட்டின் அளவை குறைக்கவும் வழி செய்யப்பட வேண்டும். ஆண்கள் பெண்களுக்கென தனித்தனியே கல்வி நிறுவனங்கள் செயல்படாமல் ஒன்றிணைந்து படிக்கும் நிலை உருவாக்கப்படுதல் வேண்டும். பாலியல் கல்வி உரிய வகையில் போதிக்கப்படுதல் அவசியமாகும். விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பது தவிர்க்கப்பட்டு, பெண்களுக்கும் ஆண்களுக்கு நிகரான முக்கியத்துவம் அளிக்கப்படுதல் வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

English summary
Murders of Nandhini, who was brutally murdered by upper cast men, should be punished, DK women wing passed resolution in their conference held in Trichy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X