For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒற்றை துணுக்கு காற்றின் வழியே பறந்து வந்து.. செவியில் விழுந்து.. இதயம் விழுந்து.. ராஜா!

இசையமைப்பாளர் இளையராஜாவின் பிறந்த நாளினை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்த நாள்.. இன்று.

ஏழு ஸ்வரங்களுமே அண்ணாந்து பார்க்கும் இசை பிரமாண்டம் இளையராஜா. ஒற்றைத் துணுக்கு காற்றின் வழியே பறந்துவந்து செவியில் நுழைந்தாலும் அந்த பாடலின் முழு பிம்பமும், ராகமும், காட்சியும் கண்முன்னே வந்து செல்லும் சாத்தியத்தை கொடுத்தது இளையராஜா மட்டுமே.

இந்த அசாதாரண வெற்றிக்கு துவக்க புள்ளியினை விதைத்தது பாவலர் வரதராஜன். கால்நடை பயணங்களாய், மாட்டு வண்டி பயணங்களாய், அவர் போட்டு கொடுத்த இசைப்பாதையில் தலையில் ஹார்மோனிய பெட்டியை சுமந்து தடம் பதிக்க புறப்பட்டார் இளையராஜா. பாட்டு கேட்க ஆசையாக வைத்திருந்த ரேடியோவை விற்று சென்னைக்கு சகோதரர்களுடன் ரயில் ஏறி வந்த ராஜாவிடம், வருமானம் குறைவாக இருந்ததால், ராஜாவிடம் பணமே வாங்காமல் மேற்கத்திய இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத் தந்த தன்ராஜ் மாஸ்டர் இளையராஜாவின் குருநாதராக என்றும் உயர்ந்து நிற்கிறார்.

அன்னக்கிளி படத்திற்காக இளையராஜா தேர்வானபொழுது அதை அங்கீகரிக்க மறுத்தவர்கள் கண்முன்னே, "படபாடல்களை இசையமைத்து காட்டு" பஞ்சு அருணாச்சலம் சொன்னதும், திருமண மண்டபத்திலேயே அனைத்து பாடல்களையும் இசையமைத்து காட்டி திறமைக்கு அடித்தளமிட்டார் ராஜா. அதற்கு பஞ்சு அருணாசலம், "இசைக்கருவியே இல்லாமலேயே தாளத்துடன் இப்படி பாடல்களை போட்டு காட்டிவிட்டாயே, உன்னை எந்த பெயரில் அறிமுகப்படுத்துவது? உன் பெயர் ராசைய்யாதானே, ஆனால் ஏற்கனவே ஏ.எம்.ராஜா என்று பாடகர் உள்ளதால், இளையராஜா என்றே பெயரை வைத்துக்கொள்" என்று பெயர் சூட்டி திரையுலகில் அவரை தவழவிட்டார்.

மெல்லிய நீர்த்துளி ஒன்று கடின உழைப்பாலும், பாட்டாளி மக்களின் நேரடி உணர்வுகளை உள்வாங்கிய அனுபவத்தினாலும், மெல்ல மெல்ல ஊற்றாக பெருக்கெடுத்து, அருவியாக விழுந்து, காட்டாற்று வெள்ளம்போல் சிறிதுகாலத்திலேயே பெருக்கெடுத்து கட்டுக்கடங்காமல் தெறித்து ஓட தொடங்கியது. பொதுவாக ஒரு படத்தில் 5 பாடல் என்றால் 2 அல்லது 3 பாடல் ஹிட் ஆகும். ஆனால் ஒரு படத்தின் அனைத்து பாடல்களையுமே ஹிட் ஆக்கி தருபவர் ராஜாதான்.

இளையராஜாவின் பாடல்கள் என்றாலே மோகன், கார்த்திக், போன்றவர்களின் பாடல்களையே ஒலிபரப்புவதும், அவற்றினை சி.டி.க்களாக விற்பனை செய்வதும் நிறைய வழக்கத்தில் உள்ளன. உண்மைதான். அவற்றினை மறுப்பதற்கில்லை. ஆனால், அவரது ஏராளமான பிரபலமாக பாடல்கள் குறிப்பாக 70-களின் இறுதிகள், 80-களின் தொடக்கங்களில் வெளிவந்த பாடல்களை ரசிகர்கள் கேட்க மறந்துவிக்கூடாது. மீண்டும் ஒரு காதல் கதை படத்தில் வரும் அதிகாலை நேரமே, பட்டாக்கத்தி பைரவன் படத்தில் தேவதை ஒரு தேவதை.. நிழல்கள் படத்தில் தூரத்தில் நான் கண்ட உன்முகம், இதுபோன்ற ஏராளமான பாடல்களும் அவைகளில் அடக்கம்.

சராசரிகளை உடைத்தவர்

சராசரிகளை உடைத்தவர்

சராசரிகளை உடைத்து, பாய்ச்சல்களை புகுத்தி, புதிய வண்ண மெட்டுகளை மீட்டெடுத்தவர். அதற்கு உதாரணம் ஒன்று. ஒரு இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து பாடல் வரிகள் எழுதப்பட்டு, அது படமாகவும் எடுக்கப்பட்டுவிட்டது. பின்னர், அந்த சவுண்ட் ட்ராக்கை முழுவதுமாக நீக்கிவிட்டு அக்காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, அந்த பாடலின் உதட்டசைவு, உடலசைவு, மற்றும் காட்சிக்கு ஏற்ப இசையமைத்தது உலகில் எந்த இசையமைப்பாளரும் செய்யாத முயற்சி அது. அந்தப் படம்தான் ஹேராம். தொடையில் தட்டினாலும் பாடல் பிறக்கும்... அது "நெஞ்சத்தை கிள்ளாதே' படத்தில் வரும் "பருவமே புதிய பாடல்" பாட்டு. அனாயாசமான வெளிப்பாட்டுத் திறனே அவரது சூட்சுமம். அவ்வளவு ஏன், "தென்றல்வந்து தீண்டும்போது" பாடல் உருவாக்க தேவைப்பட்ட காலம் வெறும் அரைமணி நேரம்தான். அதுமட்டுமா..

இனம்-மொழி கடந்த இசை

இனம்-மொழி கடந்த இசை

'கீதா' கன்னடப்படத்தில் வந்த 'ஜெதயலி' என்ற ஒரு பாடல். இந்த பாடலின்மேல் அனைவருக்குமே ஒரு மையல். வெளிப்படை நயனத்துடன், நுட்பமான இசைக்கருவிகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட இந்த பாடல், கன்னட மக்களின் ரத்தநாளங்களில் கலந்தது என்றே சொல்லலாம். அதனால்தான் இன்றும் அவர்களது லைட் மியூசிக்கில் முதல் பாடலாக "ஜெதயலி" என்ற பாடல் ஒலித்து கொண்டிருக்கிறது. இந்த பாடலை பாடிய பின்னர்தான் கச்சேரி தொடங்கும் வழக்கும் இன்றும் அங்கு நடைமுறையில் உள்ளது. இந்த பாடலை இளையராஜா "நூறாவது நாள்" திரைப்படத்தில் "விழியிலே மணி விழியின்" என்ற பாடலாக பயன்படுத்தினார். இன்றுவரை இந்தியிலே பிரபலமாக உள்ள ' சத்மா' படத்தின் 'சுர்மை அன்கியோன்மேன்' (கண்ணே கலைமானே) பாடலாகட்டும், தெலுங்கில் 'சாகர சங்கமம்' படத்தில் வந்த 'மௌன மேல நோயி' (மௌனமான நேரம்) பாடலாகட்டும், மலையாளத்தின் 'ஓலங்கள்' படத்தின் 'தும்பி வா' (சங்கத்தில் காணாத) பாடலாகட்டும் இனம்-மொழிகளை உடைத்தெறிந்து காலத்துக்கும் நின்று இனிமை கூட்டுகிறது. காடு, மேடு, கழனிகளில் எங்கு பயணித்தாலும் நீரின் வேகம் குறைவதில்லை. அதுபோலத்தான் இளையராஜா. எந்த மொழியானால் என்ன, அங்கு ரீங்காரமிடுவது ராஜாவின் இசை மட்டுமே.

விரிவடையும் எல்லைகள்

விரிவடையும் எல்லைகள்

ராஜாவின் இசையை கேட்டு ரசித்தவர்களால் அதை விவரிக்க தெரியாத காலம் இருந்தது. ரசிகர்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்த தளம் இன்றி, களம் இன்றி தவித்தனர். மிஞ்சிப்போனால் ஒரு போஸ்ட் கார்டு. அதில் நான்கைந்து வரிகளில் முடிந்தவரை கொட்டும் உணர்வு வரிகள். இதில் மகிழ்ந்தவர்களோ ஏராளம். ஆனால், அதுகூட இயலாமல், மனதுக்குள்ளேயே உணர்வு குவியல்கள் அனைத்தையும் பூட்டி வைத்தவர்களும் உண்டு. ஆனால் காலம் வேகமாக உருண்டியது. 2000-ம் ஆண்டுகளில் இணையதள வருகை ஒவ்வொரு தனிமனிதனின் உணர்வுகளை வெளிக்கொணர வரும் நவீன சாதனமானது. இதன்மூலம் ரசிகர்கள் பூட்டிக்கிடந்த இசையின் உணர்வு வேட்கைகளை வெகு அழகாகவும், வார்த்தை நேர்த்தியுடனும், மனதில் பட்டதை உரிமையுடன், உவகையுடனும் எடுத்து சொல்ல உதவ தொடங்கியது. ஏராளமான ரசிகர்களை தாம் பெற்றிருக்கிறோம் என்று இளையராஜா அறிந்திருந்தாலும், இணையதளம் மூலம் ரசிகர்களின் எல்லை விரிவடைந்து கிடப்பதை அறிந்து கண்கலங்கி போனார். ரசிகனின் உணர்வுகளை நேரிடையாக அறிய தொடங்கும் வாய்ப்பு இணையதளம் மூலமாக கிடைத்தது. அன்றுமுதல் ரசிகர்களுக்கும், ராஜாவுக்கும் இணையதளம் ஒரு இணைப்பு பாலமாக நின்றுவருகிறது.

உலகை வலம் வரும் இமாலய மனிதர்

உலகை வலம் வரும் இமாலய மனிதர்

கோடானுகோடி ரசிகர்களின் உணர்வுகளை அறிந்த இளையராஜா, இன்று உலகம் முழுவதும் கச்சேரிகளை செய்து, ரசிகர்களை உவகை கடலில் மிதக்கவிட்டு வருகிறார். அவரது பாடல்களை கேட்க தொழில்நுட்பம் மூலம் ஆயிரம் வழி உண்டென்றாலும், இளையராஜாவை பார்ப்பதற்கென்றே முண்டியடித்து கூடும் கூட்டங்களுக்கு இன்றுவரை பஞ்சமில்லை. அதனால்தான் உலகை வந்துகொண்டிருக்கிறார் இந்த இமாலய மனிதர். உலக நாடுகளில் விதவித உணவு சாப்பிட்டாலும் அம்மா கையிலேயே சாப்பிடும் உணர்வே தனிதான். அதுபோலவே, பிறரது இசையை எவ்வளவு கேட்டாலும், நம் உதடுகள் முணுமுணுப்பது என்னவோ ராஜாவின் பாடல்களை மட்டுமே. இன்றும் தமிழகத்தில் எந்த ஒரு இசைக்கச்சேரி என்றாலும் ராஜாவின் பாடல்கள் இன்றி அந்த கச்சேரி நிறைவு பெறுவதில்லை.

வாத்திய கருவிகளின் ஆளும் திறன்

வாத்திய கருவிகளின் ஆளும் திறன்

கற்பனாசக்தியின் உச்சம்தான் இளையராஜா. மனதில் யோசிக்கும் இசைவடிவங்கள் அடுத்த வினாடிகளில் இசைக்குறிப்புகளாய் வந்துவிழும். இதற்கு காரணம் தாம் விரும்பியவாறே வளைந்து கொடுக்கும் ராகங்கள்தான். எனவேதான் ஹார்மானிய பெட்டியின் கட்டைகளும், வீணைகளின் தந்திகளும்கூட ராஜாவின் ஞானத்திற்கேற்றார்போல் நடனமிட்டு தாளமிடுகின்றன. சாமான்யனின் அனைத்து உணர்வுகளையும் வாத்திய கருவிகளாலேயே ஆளும் திறன் ராஜாவுக்கு மட்டுமே உரிய இயல்பின் ஊற்று.

என்றுமே நஞ்சாகாத இசை

என்றுமே நஞ்சாகாத இசை

இளையராஜா, அவர் நீடூடி வாழ ஒவ்வொரு இசை ரசிகனும் உளமார வாழ்த்துக்களை சிநேக உணர்வுடன் தெரிவித்து வருகின்றனர். அவரது மேற்கத்திய, கர்நாடக, கிராமிய பாடல்கள் வெறும் செவியின்பத்தை மட்டும் தருவதில்லை. எந்த ஒரு பாடலை எடுத்து கொண்டாலும் அது நம் நினைவுகளை மீட்டு கொடுத்துவிட்டேதான் செல்லும் என்பதை சத்தியமிட்டு சொல்ல முடியும். அனைத்து விதமான மனவியாதிகளுக்கும் ஒரே மாத்திரை இளையராஜாவின் இசை. அனைத்து பிரிவினரையும் இன, மத, மொழி பாகுபாட்டின் இடைவெளியை குறைத்து, நெருக்கத்தை கூட்டியிருப்பது இளையராஜாவின் இசை. மனநிலைக்கு ஏற்ப இசையமைக்கும் பாங்கை சாத்தியமாக்கியது இளையராஜாவின் இசை. தூக்கத்தை கொடுப்பதும், தூக்கத்தை கெடுப்பதும் இரண்டுமே இளையராஜாவின் இசையே. இளையராஜாவின் இசை மட்டும் அளவுக்கு மிஞ்சினால் என்றுமே நஞ்சாவதில்லை!

- வந்தனா ரவீந்திரதாஸ்

English summary
Ilayaraja is one of India's best film musicians. He made his debut in the Tamil film industry in 1976 by setting music for Annakali. He has composed more than 1000 Tamil, Telugu, Malayalam, Kannada and Hindi films. He was awarded the Padma Bhushan Award for the third highest award at the Indian Government in 2010.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X