For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Exclusive: இந்துத்வாவாதிகள் அச்சுறுத்தினாலும்.. என் பணி அதே பாணியில் தொடரும்.. வி.சி.க. ரவிக்குமார்

என் பணி அதே போணியில் தொடரும் என்று எழுத்தாளர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    வி.சி.க. ரவிக்குமார் Exclusive பேட்டி- வீடியோ

    சென்னை: எந்த அச்சுறுத்தல் வந்தாலும் எனது பணியும், பாதையும் மட்டும் என்றுமே மாறாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், எழுத்தாளருமான ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

    ரவிக்குமார் எழுத்தாளர்! வழக்கறிஞர்!! மக்கள் சிவில் உரிமை கழகத்தின் ( பி.யு.சி.எல்) தமிழகத் தலைவராக இருந்தவர்!!! தமிழ் இலக்கியத்தில் ஆய்வு செய்து பி.எச்.டி பட்டம் பெற்றவர்!!!

    வங்கிப் பணியிலிருந்து விலகி 2006 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர். வகுப்புவாதத்துக்கு எதிராக எழுதியும் பேசியும் வருபவர். தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

    My Life is in danger: VCK General Secretary Ravikumar

    இந்நிலையில் இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை மூலம் தகவல் வந்தது. இதையடுத்து, தமிழக, புதுச்சேரி மாநில முதல்வர்களை சந்தித்து இவர் பாதுகாப்பும் கேட்டுள்ளார். எந்த மாதிரியான அச்சுறுத்தல் ஏற்பட்டது, இதுகுறித்து அவரது கருத்தும் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள "ஒன் இந்தியா தமிழ்" முயன்றது. ரவிக்குமார் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை:

    கேள்வி: அச்சுறுத்தல் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பது எப்படி முதலில் உங்களுக்கு தெரியவந்தது?

    தமிழக உளவுத்துறை என்னையும், எங்கள் கட்சி தலைவர் திருமாவளவனையும் தொடர்பு கொண்டு, உங்களுக்கு ஏதாவது பாதுகாப்பு வேண்டுமா? உங்களுக்கு பாதுகாப்பு கேட்டு மத்திய அரசிடம் ஏதாவது விண்ணப்பித்து இருக்கிறீர்களா என்று கேட்டார்கள். தலைவருக்குத்தான் பாதுகாப்பு வேண்டும் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளோம் என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், "இல்லை.. இல்லை..உங்களுக்கு பாதுகாப்பு கேட்டிருக்கிறீங்களா?" என்றார்கள். "இல்லையே.. ஏன் கேட்கிறீர்கள்" என்று கேட்டேன். பிறகுதான் சொன்னார்கள், "கர்நாடகத்தை சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோர் அடுத்ததாக எழுத்தாளர் ரவிக்குமாரை கொலை செய்ய குறி வைத்துள்ளதாக மத்திய உளவுத்துறையிலிருந்து தகவல் வந்திருக்கிறது" என்றனர்.

    இதையடுத்து நாங்கள் மத்திய உளவுத்துறை அதிகாரிகளையும் தொடர்பு கொண்டு இதுகுறித்துகேட்டோம். அவர்களும் அதை உறுதிப்படுத்தினார்கள். அதன்பிறகுதான், இதற்குமேல் இதில் அலட்சியப்படுத்தக்கூடாது என்று நினைத்து கடந்த 27-ம் தேதி தமிழக முதலமைச்சரை நானும் எங்கள் தலைவரும் சந்தித்து பாதுகாப்பு கேட்டு மனு கொடுத்துள்ளோம். என் குடும்பம் புதுச்சேரியில் இருப்பதால், அவர்களுக்கும் பாதுகாப்பு தேவை எனக் கருதி புதுச்சேரி முதல்வரிடமும் மனு கொடுத்துள்ளோம்.

    கேள்வி: கொலை மிரட்டல் பட்டியலில் உங்கள் பேர் தவிர, தமிழகம் மற்றும் இந்திய அளவிலான வேறு யாராவது பெயர்கள் இருந்தனவா?

    'நியூஸ் மினிட்' செய்தி தளத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள், கர்நாடகாவின் சிறப்பு புலனாய்வு குழுதான் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பான புலன் விசாரணையை மேற்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் கேட்டபோது, மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த அமால் ஆலே என்பவரை கைதுசெய்திருப்பதாகவும், அவரிடமிருந்து ஒரு டைரி கைப்பற்றப்பட்டிருப்பதாகவும், அதில் 34 பெயர்கள் கொண்ட பட்டியல் இடம் பெற்றிருப்பதாகவும் கூறினார்கள். அந்த 34 பேரில் 8 பேர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள். மற்றவர்கள் இந்தியாவின் பிற மாநிலத்தை சேர்ந்த பத்திரிகையாளர்கள். ஏன் இவர்களை எல்லாம் குறி வைத்து இப்படி பட்டியல் இட்டிருக்கிறார்கள் என்று கேட்டோம். அதற்கு அவர்கள், "இந்து ராஷ்டிரத்தை நாங்கள் நிர்மாணிக்க விரும்புகிறோம். ஆனால் இந்த லிஸ்ட்டில் உள்ளவர்கள்தான் தடையாக இருக்கிறார்கள். அதனால் தடையாக இருப்பவர்களை எல்லாம் நாங்கள் அழிப்பது என்று முடிவு செய்துள்ளோம்" என்று கைது செய்யப்பட்ட நபர் கூறியதாக தெரிவித்தனர். எனவே என்னை தவிர 33 பேர் இந்த பட்டியலில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யார் என்று தெரியவில்லை.

    கேள்வி: தமிழகத்தில் நீங்கள் ஒரு முக்கியமான செல்வாக்கு மிக்க தலித்கட்சி. இதுபோன்று ஒரு அச்சுறுத்தல் உங்களுக்கு ஏற்பட்டும், இதுவரை ஏன் எந்த போராட்டமும், எதிர்ப்புகளையும் நீங்கள் இதுவரை பதிவு செய்யவில்லையே ஏன்?

    இதை முதலில் அரசியல் ரீதியாகத்தான் பார்க்கிறோம். அதனால் அரசு தரப்பு மூலம் முதலில் எங்களது கோரிக்கையை வைத்துள்ளோம். இதைதவிர, இப்படி கொலை மிரட்டல் விடுத்துள்ளது குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள். திராவிடர் கழக தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, போன்றவர்கள் கண்டன அறிக்கைகளை விடுத்துள்ளனர். மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா என்னை தொடர்பு கொண்டு இதுகுறித்து விசாரித்து ஆறுதல் கூறினார். அதேபோல இடது சாரி கட்சிகளும் கண்டனங்களை பதிவு செய்ய உள்ளனர். எனினும் வருகிற 5-ம் தேதி புதுச்சேரியில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து எங்கள் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி எங்கள் எதிர்ப்புகளை முதல்கட்டமாக நடத்த உள்ளோம்.

    கேள்வி: தமிழக முதல்வர், புதுச்சேரி முதல்வர், இரண்டு பேரிடமும் பாதுகாப்பு கேட்டீர்கள். இதுவரை உங்களுக்கு நீங்கள் கேட்ட பாதுகாப்பு வழங்கி உள்ளார்களா?

    இன்னும் அதைப்பற்றி எதுவும் தெரியவில்லை. ஆனால் புதுச்சேரி முதலமைச்சர் எங்கள் முன்னிலையிலேயே காவல்துறை உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு, எங்கள் புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என்று சொன்னார். இது சம்பந்தமாக காலநேரம் தேவைப்படும் என்பதால் சற்று தாமதமாகிறது. ஆனால் நிச்சயமாக இரு அரசும் உரிய பாதுகாப்பு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    கேள்வி: உளவுப்பிரிவு ஏன் அந்த பெயர்ப் பட்டியலை பகிரங்கமாக வெளியிடவில்லை?

    அப்படி வெளியிட்டுவிட்டால் அது எல்லோருக்கும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்திவிடும் என்ற காரணத்தினால்கூட வெளியிடாமல் இருக்கலாம். ஆனால் அந்த கர்நாடக மாநிலத்தின் சிறப்பு புலனாய்வு குழு என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றால், "34 பேர் கொண்ட பட்டியலை மத்திய உளவுத்துறையிடம் அளித்துவிட்டோம். அவர்கள், சம்பந்தப்பட்ட நபர்கள் உள்ள மாநிலத்தித்தினுடைய காவல்துறைக்கு தகவல் தெரிவிப்பார்கள். புலனாய்வு நடந்து கொண்டிருப்பதால் இதை தவிர வேறு தகவல் எதுவும் வெளிப்படுத்தினால் அது சரியாக இருக்காது" என்று எங்களிடம் சொன்னார்.

    கேள்வி: இனி உங்களது எழுத்து எந்த மாதிரியாக இருக்கப் போகிறது? எழுத்தில் உங்கள் அணுகுமுறை எப்படி இருக்க போகிறது? அதில் மாற்றம் ஏதாவது இருக்க போகிறதா?

    அடிப்படையிலேயே நான் அம்பேத்கரையும் இந்திய அரசியல் சட்டத்தையும் ஏற்றுக் கொண்டவன். எங்கள் இயக்கமும் அப்படித்தான். எனவே இந்த நிலைப்பாட்டிலிருந்து எங்களால் மாற முடியாது. அண்ணல் அம்பேத்கரின் கொள்கை என்பது சாதியை ஒழிக்க வேண்டும் என்பதுதான். இந்த மாதிரியான அச்சுறுத்தல்கள் வரும்போது, சாதி ஒழிய வேண்டாம், சாதியை ஏற்றுக் கொள்கிறோம் என்று நாங்கள் சொல்ல முடியாது. எனவே சாதி ஒழிப்பு என்பதுதான் எங்களுக்கான அரசியல், அடித்தளம். இதை நாங்கள் ஜனநாயகபூர்வமாக இந்திய அரசியலமைப்பு சட்டம் வகுத்த தந்த வழியிலேயே அமைத்து கொண்டுள்ளோம். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் எங்களது எதிர்ப்பு குரலை வெளிப்படுத்துகிறோம். இது எங்களுடைய அரசியல் நிலைப்பாடு சம்பந்தப்பட்டது. எனவே எந்த மாற்றமும் இருக்காது. அதேபோல தனிப்பட்ட முறையில் நான் யாரையும் புண்படும்படி எழுதியதும் பேசியதும் இல்லை. என் எழுத்துக்கள் எல்லாமே ஆய்வின் அடிப்படையிலேயே அமைந்தது. எனவே என்னை நான் மாற்றிக் கொள்ள மாட்டேன். என் பணி எப்போதும் போல அதே பாதையில் தொடரும்.

    கேள்வி: இதை பத்தி வேற ஏதாவது சொல்லணும்னு நினைக்கறீங்களா?

    தமிழக அரசும், புதுச்சேரி அரசும் இந்த மாதிரியான பயங்கரவாத குழுக்கள் தங்களின் மாநிலங்களில் செயல்படுகின்றனவா என்பதை உடனடியாக ஆய்வு செய்து, அவை கண்டறியப்பட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதேபோல அந்த 34 பேர் உள்ள பட்டியலில் இருப்பவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க மத்திய அரசே முன் வரவேண்டும். ஏனெனில் பட்டியல் மத்திய அரசிடம்தான் தரப்பட்டுள்ளது. எனவே பாதுகாப்பு வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்குத்தான் உண்டு. சட்டம், ஒழுங்கு என்பது ஒரு மாநிலத்தினை பொறுத்தது என்றாலும், பாதுகாப்பு குறித்து அறிவுரைகளையும், வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு உடனடியாக செய்ய வேண்டும்.

    இவ்வாறு ரவிக்குமார் கூறினார்.

    English summary
    My Life is in danger: VCK General Secretary Ravikumar
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X