• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கயிலையே மயிலை... தேரும்.. அறுபத்து மூவர் திருவிழாவும்

By Mayura Akilan
|

சென்னை: மதுரையில் சித்திரை திருவிழாவைப் போல பிரச்சித்தி பெற்றது பங்குனி மாதம் சென்னை மயிலாப்பூரில் நடைபெறும் அறுபத்து மூவர் திருவிழா. பத்துநாட்களும் தினம் தினம் வீதி உலா வரும் இறைவனைக் காண கண் கோடி வேண்டும். நான்கு மாட வீதிகளில் வலம் வரும் கம்பீரமான தேரினைக் காண சொந்த பந்தங்கள் புடை சூழ கோவிலுக்கு வருவதே ஒரு சுக அனுபவம்தான்.

63 நாயன்மார்களுக்கு காட்சி தருவதற்காகவே வெள்ளிச்சப்பரத்தில் எழுந்தருளும் கபாலீஸ்வரரையும், அன்னை கற்பகாம்பாளையும் காண்பதற்காக சென்னை மட்டுமல்லாது சுற்றுவட்டாரங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மயிலைக்கு திரள்வார்கள்.

'கயிலையே மயிலை... மயிலையே கயிலை' என்று போற்றப்படும் பெருமைக்குரியது மயிலாப்பூர். மயிலாப்பூர் என்ற பெயரே மயிலை என்று மருவியது. மயிலாப்பூர் என்றால் இதற்கு, மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர் என்று பொருள். பிரமாண்ட புராணம் இந்தத் தலத்தை மயூரபுரி, மயூரநகரி ஆகிய பெயர்களால் குறிப்பிடுகிறது.

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் என்னும் அடியார் வாழ்ந்த தலம் இது. சுந்தரர் திருத்தொனட்த் தொகையில் ‘துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் தென்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்' என்று இந்த அடியாரைப் போற்றுகிறார்.

ஈஸ்வரனுக்கு ஒப்பாக தனக்கும் ஐந்து தலைகள் என்று கர்வம் கொண்ட பிரம்மனின் ஒரு சிரத்தைக் கொய்து, அந்தக் கபாலத்தை கையில் ஏந்தியதால், கபாலீஸ்வரர் எனும் திருப்பெயருடன் சிவனார் அருளும் மிக உன்னதமான திருத்தலம் இது. ஸ்வாமி மேற்கு நோக்கி அருள்வது கூடுதல் விசேஷம்.

அருள்மிகு கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர் கோயில், சென்னையில் மட்டுமின்றி உலகலாவிய அளவில் புகழ் பெற்ற திருக்கோயில் ஆகும். கற்பகம் என்பதற்கு வேண்டும் வரம் தருபவள் என்று பொருள். இவளைத் தரிசித்துவிட்டே ஸ்வாமியைத் தரிசிக்கும்படியான அமைப்பு, இக்கோயிலின் சிறப்பம்சம். சைவ சித்தாந்தங்களும் சக்தியின் மூலமாகவே சிவத்தை அடையமுடியும் என்கின்றன. அதற்கு உகந்த முறையில் திகழ்கிறது கபாலீஸ்வரர் ஆலயம். இங்கு வந்து அம்பாளைப் பிரார்த்தித்தால், நினைத்தது நிறைவேறும்; எண்ணிய காரியங்கள் யாவும் ஈடேறும்.

மயில் வடிவில் அன்னை

மயில் வடிவில் அன்னை

மயிலாப்பூர் பற்றி கூறப்படும் புராண கதைகள் சுவாரஸ்யமாகவே இருக்கிறது. ஒருமுறை கயிலை மலையில் அம்பாளுக்கு பிரணவம், பஞ்சாட்சரம் குறித்து உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவபெருமான். அப்போது, அழகிய மயில் ஒன்று தோகை விரித்து நடனம் ஆடிக்கொண்டிருந்தது. அதைக் கண்டு அம்பாளின் கவனம் சிதறியது. இதனால் கோபம் கொண்ட சிவ பெருமான், ‘பூலோகத்தில் மயிலாகப் பிறப்பாய்' என்று அம்பாளை சபித்துவிட்டார்.

புன்னை மரத்தடியில் தவம்

புன்னை மரத்தடியில் தவம்

தனது தவற்றை உணர்ந்த அம்பிகை, ஸ்வாமியிடம் சாப விமோசனம் வேண்டினாள். அவளிடம், தொண்டைநாட்டுக்குச் சென்று தவமியற்றும்படி பணித்தார் சிவபெருமான். அதன்படி, தொண்டை நாட்டில் அமைந்த இத்தலத்துக்கு மயிலுருவில் வந்த அம்பிகை, இங்கே புன்னை மரத்தின் கீழ் இருந்த சிவலிங்கத்தை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தாள்.

சாப விமோசனம்

சாப விமோசனம்

அம்பிகையின் பக்தியால் மகிழ்ந்த சிவபெருமான் அவளுக்குக் காட்சியளித்து சாப விமோசனம் தந்தார். அவரிடம் ‘இந்தத் தலத்திலேயே தாங்கள் கோயில் கொண்டு உலகத்தவர்க்கு அருள் பாலிக்கவேண்டும்' என வேண்டிக் கொண்டாள் அம்பிகை. அதன்படியே சிவனார் இங்கே கோயில் கொள்ள, அவருடன் அம்பாளும் கற்பகவல்லி எனும் திருப்பெயருடன் அருள்கிறாள். அவள் மயிலாக வந்து வழிபட்ட தலம் ஆதலால், இவ்வூரும் மயிலை என்று பெயர் பெற்றது.

பங்குனி பெருவிழா

பங்குனி பெருவிழா

கபாலீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர பிரம்மோற்சவம் 10 நாள் நடைபெறுகிறது. இந்த ஆண்டு கோலவிழியம்மனுக்கு கிராமதேவதை பூஜையுடன் திருவிழா தொடங்கியது. 14ம் தேதி கொடியேற்றத்துடன் விழா நடைபெற்று வருகிறது. முதல் நாள் இரவு தல விருட்சமான புன்னைமரத்தடியில் அம்பிகை மயில் வடிவில் ஈசனைப் பூஜிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூன்றாம் நாளான 16ம் தேதி நடைபெற்ற அதிகார நந்தி சேவையைக் காண மக்கள் பெருந்திரளாக குவிந்தனர். ஐந்தாம் நாளான இன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் இறைவன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

ஆடி அசைந்து வரும் தேர்

ஆடி அசைந்து வரும் தேர்

ஏழாம் நாள் திருவிழாவான ஞாயிறன்று நான்கு மாட வீதிகளிலும் திருத்தேர் பவனி வரும். தேர்திருவிழாவை காண சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிவது வழக்கம். மாடவீதிகளில் பல இடங்களில் இருந்தும் வரும் பக்தர்களுக்கு தொண்டு நிறுவனங்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் மோர் உள்ளிட்ட பானங்களை வழங்கி உபசரிப்பார்கள்.

எட்டாம் திருவிழா

எட்டாம் திருவிழா

எட்டாம் நாள் திருவிழாவான அறுபத்து மூவர் உலா திருமயிலைக்கே சிறப்பு சேர்க்கும் பெருவிழா. அன்று காலையில் திருக்குளத்தின் கரையில் திருஞான சம்பந்தர், மண்குடத்தில் எலும்பாக இருக்கும் பூம்பாவைக்கு உடலும் உயிரும் கொடுக்கும் விழா நடைபெறும்.

63 நாயன்மார்களுக்கு காட்சி

63 நாயன்மார்களுக்கு காட்சி

மதியத்திற்கு மேல் ஸ்ரீ கபாலீஸ்வரர்-கற்பகாம்பிகை மற்றும் பரிவார தேவதைகளோடு சிவனடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்கள் நான்கு மாட வீதிகளிலும் உலா வருவதைத் தரிசிக்க கட்டுக் கடங்காத மக்கள் கூட்டம் அலைமோதும். நள்ளிரவு வரை நடக்கும் இந்த விழாவைக் காண கண்கோடி வேண்டும். பக்தர்கள் தங்களால் இயன்றளவு தானம் வழங்குவது இவ்விழாவின் தனிச்சிறப்பு.

திருக்கல்யாணம்

திருக்கல்யாணம்

பத்தாம் நாளான பங்குனி உத்திர தினத்தன்று அம்மை அப்பனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்றைய தினம் திருமண விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் விருந்துண்டு மொய் எழுதிச்செல்வது சிறப்பு.

கிராமத்து பாணியில் திருவிழா

கிராமத்து பாணியில் திருவிழா

திருவிழா நடைபெறும் இந்த பத்துநாட்களும் மயிலாப்பூருக்கு வந்து செல்பவர்கள் ஏதோ கிராமத்து திருவிழாவை காண வந்தது போல மகிழ்ச்சியில் திளைத்துப் போவார்கள். மாட வீதிகளில் முளைத்திருக்கும் திடீர் கடைகளில் பொருட்கள் கொட்டிக்கிடக்கும். கமர்கட், ரவா லட்டு, தேங்காய் உருண்டை என கிராமத்து மிட்டாய்களும் சுவைக்க குவிந்திருப்பது தனிச்சிறப்பு.

என்ன பக்தர்களே மயிலாப்பூர் அறுபத்து மூவர் திருவிழாவைப் பார்க்க ஆவலாய் இருக்கிறதா? ஒரு எட்டு வந்துட்டு போங்களேன்.

English summary
Mylapore seems to have become livelier and merrier. Perhaps it is in anticipation of Mondey's festival when the 63 Nayanmars of Lord Shiva are taken out in a procession. On Monday festivities at the temple will begin at 9 a.m. The procession of the idols will be at 3 p.m. and it will take at least four hours to end.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X