For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை வாபஸ் பெறுக.. நாம் தமிழர் பொதுக்குழுவில் தீர்மானம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மாணவி வளர்மதிக்கு எதிரான குண்டர் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Recommended Video

    'Protest girl' Valarmathi arrested under Gundas act-Oneindia Tamil

    15-08-2017 அன்று சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் அன்னை அருள் மண்டபத்தில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

    1. கிராமப்புற மாணவர்களும், எளியப் பின்புலத்தைக் கொண்ட மாணவர்களும் மருத்துவராகும் கனவை அழிக்கும் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு அளிக்கப்பட்டிருக்கும் ஓராண்டு விலக்கிற்கு என்ன காரணங்கள் உள்ளதோ அதே காரணங்கள் எப்பொழுதும் உள்ளது என்கிற காரணத்தால் அதை நிரந்தர விலக்காக விரிவடையச் செய்ய வேண்டும் எனவும், மருத்துவ மேற்படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்தவர்களுக்கு வழங்கப்படும். 50% இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வழிவகை வேண்டும் எனவும், இந்திய அரசியல் சட்டத்தில் மாநிலப்பட்டியலில் இருந்த கல்வியைப் பொதுப்பட்டியலுக்கு மாற்றிய இந்திய அரசின் நடவடிக்கையைக் கண்டிப்பதுடன் மீண்டும் மாநிலப் பட்டியலிலேயே வைக்கவும் மத்திய, மாநில அரசுகளை நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.

    Naam Tamilar request general body meeting pass the resolution

    2. நாகை, கடலூர் மாவட்டங்களின் 45 கிராமங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கப்படுவதாகத் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அறிவித்திருப்பது வெந்தப்புண்ணில் வேலைப்பாய்ச்சும் கொடுஞ்செயலாகும். ஏற்கனவே, நெடுவாசல், கதிராமங்கலம் மற்றும் நாகை திருவாரூர் மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் மீத்தேன், ஹைட்ரோகார்பன், ஒ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய் பதிப்பு முதலிய அபாயகரத் திட்டங்களால் மண்ணும், நீரும் மாசுபட்டு, சூழ்நிலை மண்டலம் சீர்கெட்டு அவற்றிற்கெதிராகத் தமிழகம் முழுக்கப் போராட்டங்கள் நடந்தேறி வரும் நிலையில் இப்போது காவிரிப்படுகையில் பெட்ரோலீய முதலீட்டு மண்டலம் அமைக்க அனுமதி அளித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஏற்கனவே, ரசாயனத் தொழிற்சாலைகளால் சூழ்நிலை மண்டலம் பாதிக்கப்பட்டிருக்கிற கடலூர் மாவட்டத்திற்கும், மீன்பிடி தொழிலையும், வேளாண்மையையும் முழுமுதற் தொழிலாய் கொண்டிருக்கிற நாகப்பட்டினம் மாவட்டத்திற்கும் மிகப்பெரிய சூழல் கேட்டை இது உருவாக்கும். ஆகவே, பெட்ரோலீய முதலீட்டு மண்டலம் அமைக்கிற திட்டத்தினை முற்றாகக் கைவிட வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    3.'சோழ நாடு சோறுடைத்து' என்ற மிகையில்லாப் புகழுரைக்கு இலக்கணமாய்த் திகழும், உலகின் மிக நீண்ட சமவெளி பகுதியைக் கொண்ட ,தமிழகத்தின் உணவு உற்பத்தியில் பெரும்பங்கு வகிக்கும் 'தமிழகத்தின் நெற்களஞ்சியம்' காவிரிப்படுகையினைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, இயற்கைக்கு ஊறு விளைவிக்கும் ஹைட்ரோ கார்பன் எடுத்தல், மீத்தேன் எடுத்தல், ஒன்.என்.ஜி.சி. எண்ணெய்க்குழாய்களைப் பதித்தல் போன்ற நாசகாரத்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை ரத்துச் செய்து, அக்கொடியத் திட்டங்களைக் கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    4. காவிரி நதி மீது கர்நாடகத்திற்கு உள்ள உரிமையைவிட அதிகப்படியான உரிமையைத் தமிழகம் கொண்டுள்ளதை உலக நதிநீர் பங்கீட்டு விதிகள் உறுதிப்படுத்தியுள்ளபோதும் தமிழகத்திற்குரிய நதிநீர் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதும், மரபுகளும், விதிகளும் மீறப்பட்டு வருவதும் ஜனநாயகத்தைப் போற்றி ஒழுகி வரும் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியாகும். சட்டத்தின்படி அமைக்கப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித்தீர்ப்பு வெளியாகி 10 ஆண்டுகளைக் கடந்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாதிருப்பது அப்பட்டமான சனநாயகத் துரோகமாகும். எனவே, இனியும் காலம் தாமதியாது உச்ச நீதிமன்றம் உத்தரவினை மதித்து உடனடியாகக் காவிரி மேலாண்மை வாரியமும், காவிரி ஒழுங்காற்றுக்குழுவும் அமைக்கப்பட வேண்டும் எனவும், காவிரி நடுவர் மன்றத்தைக் கலைத்துவிட்டு ஒற்றைத்தீர்ப்பாயத்தை இந்தியா முழுக்க அமல்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    5. தமிழ்ப் பேரினத்தின் தனிப்பெருங்கலை அடையாளமாகத் திகழும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவச் சிலையை நள்ளிரவில் மெரீனா கடற்கரைச்சாலையில் இருந்து அகற்றியது தமிழ்த்தேசிய இனத்திற்கு நேர்ந்த அவமானமாகும். போக்குவரத்து இடையூறு எனச் சிலை அகற்றத்திற்குக் காரணம் கற்பிக்கும் தமிழக அரசின் நிலைப்பாடு மிகவும் கண்டிக்கத்தத்தக்கது. அகற்றப்பட்ட நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் சிலையை மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் நடுவே நிறுவி தமிழ்ப்பேரினத்தின் ஒப்பற்ற பெருங்கலைஞனை கௌரவிக்க வேண்டும் எனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி அறிவுறுத்துகிறது.

    6. நீர் மேலாண்மையையும், நீரியல் நிபுணத்துவத்தையும் துளியும் கைக்கொள்ளாத தமிழக அரசின் அலட்சியப் போக்கு குறித்து அடுக்கடுக்கான கேள்விக்கணைகளைக் காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது. கடந்த 142 ஆண்டுக்காலத்தில் ஏற்படா மிகப்பெரும் வறட்சிக்கும், நீர்ப்பற்றாக்குறைக்கும் தமிழகம் ஆட்பட்டதற்கு முற்றும் முழுதாகப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் தமிழகத்தின் ஆட்சியாளர்கள்தான். இனியாவது நீரியல் நிபுணர்களைக் கொண்ட நீர் மேலாண்மை குழுவை அமைத்து தமிழகத்தின் நீர்வளத்தைப் பெருக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனத் தமிழக அரசை நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    7. இந்தியா முழுக்கப் பல்வேறு பொருளாதாரப் பின்புலம் கொண்ட மாநிலங்கள் இருக்கையில் அவையாவற்றிற்கும் ஒரே வரிவிதிப்பு முறையை 'சரக்கு மற்றும் சேவை வரி மசோதா' எனும் பெயரில் அறிமுகப்படுத்தி, அவ்வரிவிதிப்பு முறையை ஜி.எஸ்.டி.மன்றங்களே தீர்மானிக்கும் என்பதன் மூலம் மாநிலத்தின் கூட்டாட்சித் தத்துவமும், பொருளியல் தன்னாட்சி உரிமையும் படுகுழியில் தள்ளப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சிறு, குறு முதலாளிகளை ஒழித்து, பன்னாட்டு, உள்நாட்டு தரகு முதலாளிகளை வளர்த்தெடுக்கும் அரசின் நோக்கம் தெள்ளத் தெளிவாகிறது. ஏழை, நடுத்தர மக்கள் மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கின்றனர். ஆகவே, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையானது இந்தியச் சந்தையினை ஒற்றைச்சாளரமாக்கி அந்நிய முதலீட்டாளர்களை ஊடுருவச் செய்வதற்குத்தான் உதவுமே ஒழிய, நாட்டின் சிறு வளர்ச்சிக்கும் துணை நிற்காது என நாம் தமிழர் கட்சி இப்பொதுக்குழுவின் வாயிலாக முரசறிவிக்கிறது.

    8. உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூரில் பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் குடுவைத் தட்டுப்பாட்டால் 63-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே வாரத்தில் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் ஏற்பட்ட தேசியத் துயரமாகும். இது முழுக்க முழுக்க அம்மாநில அரசின் அலட்சியப் போக்காலும், நிர்வாகத் திறமையின்மையின் விளைவாகவுமே நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அதனை மூடி மறைத்து, மூளை வீக்கமே குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம் எனத் திசைதிருப்ப முயலும் உத்திரப்பிரதேச அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. ஆகவே, மத்திய அரசு இதில் தலையீட்டு அரசியலற்ற ஒரு நேர்மையான நீதிவிசாரணையை நடத்தி இறந்து போன குழந்தைகளின் மரணத்திற்கு உரிய நீதியை நிலைநாட்ட வேண்டும் என நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    9. கீழமை நீதிமன்ற நீதிபதித் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தேர்வு முறையைக் கொண்டு வர முயலும் மத்திய அரசின் செயலானது மாநில அரசின் நீதித்துறை நிர்வாகத்தில் தலையீடு செய்து, மாநில சுயாட்சி முறையைப் பறிக்கும் அதிகார அத்துமீறலாகும். நீதிபதித் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தேர்வு முறையைக் கொண்டு வர முயலும் மத்திய அரசின் செயலை நாம் தமிழர் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது. வழமை போலவே மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளின் மூலமாகவே கீழமை நீதிமன்றங்களுக்கான நீதிபதிகள் தேர்வு நடைபெறவேண்டும் எனவும், இவ்விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தந்து மாநில சுயாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டுமென நாம் தமிழர் கட்சி அறிவுறுத்துகிறது.

    10. நாம் தமிழர் கட்சி எச்சரித்தது போலவே உணவுப்பாதுகாப்புச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ள தமிழக அரசு விரைவில் பொது விநியோக முறையை மூடும் செயலில் மும்முரமாக இறங்கியுள்ளது. பொது விநியோகப் பயன்பாட்டாளர்கள் குறித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டுவிட்டு, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தமிழக அரசு கூறுவதும், மானியத்தினை நிறுத்தப் போவதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பலனளித்துவிட்டு பிறகு அதனை மத்திய அரசு மறுப்பதும் அப்பட்டமான மோசடிச் செயலாகும். ஆகவே, இந்திய உணவுச்சந்தையைக் கைப்பற்றத் துடிக்கும் இலாபவெறி வேட்டைக்கு இந்தியாவைப் பலிகடா ஆக்கப்படுவதைத் தடுக்க உலக வர்த்தகக் கழகத்திலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என மத்திய அரசை இப்பொதுக்குழுவின் வாயிலாக நாம் தமிழர் கட்சி வலியுறுத்துகிறது.

    11. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை அனுசரித்ததற்காகத் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வர் மீதும், நெடுவாசல் போராட்டத்தை ஆதரித்துப் பரப்புரை செய்ததற்காகப் பல்கலைக்கழக மாணவி வளர்மதி மீதும் குண்டர் சட்டத்தினைப் பாய்ச்சிருப்பது சகிக்கவே முடியா பெருங்கொடுமையாகும். இது அரசியலமைப்புச் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அரசப்பயங்கரவாத நடவடிக்கையாகும். இதனை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ஆகவே, அநீதியாகத் தொடுக்கப்பட்ட குண்டர் சட்டத்தினை ரத்துச் செய்ய வேண்டும் எனவும், போராடும் மக்களின் மீது சட்டத்தினைப் பாய்ச்சி சிறையிலடைக்கும் அதிகாரப்போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி அறிவுறுத்துகிறது.

    12. நீதிமன்றம் பல முறை எச்சரிக்கைவிடுத்தும் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை சொந்த நலனுக்காகத் தள்ளிப்போடுவதை நாம் தமிழர் கட்சி கண்டிக்கிறது. உள்ளாட்சி நிருவாகம் முற்றும் முழுவதுமாக முடங்கியுள்ள சூழலில் மக்கள் அடிப்படை தேவைகள் தீர்க்கப்படாமல் அவதிக்குள்ளாகும் நிலையில் உடனடியாகத் தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தவேண்டும் என்று நாம் தமிழர் கட்சி அறிவுறுத்துக்கிறது. ஏற்கனவே அறிவித்ததைப் போலத் தமிழகம் முழுக்க உள்ள அனைத்து உள்ளாட்சி இடங்களிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று இப்பொதுக்குழு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.

    English summary
    Naam Tamilar request general body meeting pass the resolution asking to withdrawn goondas on Valarmathi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X