For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நமநமத்து கிடந்த தமிழ் திரையுலகத்தை கர்ஜித்து ஓட வைத்த சிவாஜி கணேசன்.. நினைவு நாள் இன்று!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: காவிரி பெற்றெடுத்த பிறவிக் கலைஞர்களில் ஒருவரான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினம் இன்று. இன்றைய நாளில் அவரை நினைவுகூர்வதில் ஒன்இந்தியா பெருமை கொள்கிறது. சிவாஜி கணேசனுக்கு சின்ன வயதில் படிப்பில் நாட்டமே இல்லை. ஆனால் பிறவியிலேயே அசாத்தியமான இரண்டு திறமைகள் இருந்தன.

ஒன்று மனப்பாட பயிற்சி!

ஒன்று மனப்பாட பயிற்சி!

எத்தனை பக்க வசனங்கள் இருந்தாலும், எத்தகைய தமிழாக இருந்தாலும், அவற்றை சிறிதும் பிசிறில்லாமல், நூற்றுக்கு நூறு சதம் முழுமையாக ஒப்புவிக்கும் பேராற்றல்தான் அவரது முன்னேற்றத்தின் முதல் பலமே. சுருக்கமாக சொன்னால், இப்போது கல்வி அமைப்பில் உள்ள உருப்போடும் திறன். வருடம் முழுவதும் படித்ததை உருபோட்டு அதை தேர்வில் மொத்தமாக தருவதில்தான் இன்றைய மாணவனின் எதிர்காலமே தீர்மானிக்கப்படுகிறது. சிவாஜி கணேசன் மட்டும் தனது உருப்போடும் திறனை கல்வியில் செலுத்தியிருந்தால் மிகச்சிறந்த கல்விமானாக திகழ்ந்திருப்பார்.

இரண்டாவது, சிறந்த நடிப்பாற்றல்!

இரண்டாவது, சிறந்த நடிப்பாற்றல்!

நடிப்பை ஒரு தொழிலாக இல்லாமல் தவமாக - உயிர் மூச்சாக - ஏற்றுக் கொண்டு மதித்து போற்றியவர் சிவாஜி கணேசன். கலைஞர் கருணாநிதியுடன் ஏற்பட்ட நட்பானது, அவரது எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றியது. சிவாஜி கணேசனை திரையுலகில் அறிமுகம் செய்ததிலும், கதாநாயகனாக உயர்த்தியதிலும் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு. 'பராசக்தி' படத்திற்கு பிறகு ஒரு புல்லைபோல் பிரவேசிக்க தொடங்கினார் சிவாஜி கணேசன். இதன்பிறகு புதுவெள்ளம் ஒன்று தமிழகம் முழுவதும் ஊடுருவி பாய தொடங்கியது. நமநமத்துக் கிடந்த தமிழ்த்திரையுலகம் சிவாஜியின் வருகைக்கு பின்னர் கர்ஜித்து எழுந்து ஓடத் தொடங்கியது.

மனதில் படிந்த சிவாஜி

மனதில் படிந்த சிவாஜி

சிவாஜியின் உடை, ஒப்பனை போன்றவைற்றை வைத்தே படத்தின் பெயர்களை எளிதாக கூறிவிடலாம், அந்த படத்தின் கதாபாத்திரத்தை விரைவாக இனம் கண்டுவிடலாம். ராணுவ வீரனா, அது பதிபக்தி, தொழிலதிபரா அது 'பாசமலர்', இஸ்லாமிய இளைஞனா, அது 'பாவமன்னிப்பு', பணச்செருக்கு தந்தையா அது 'பார் மகளே பார்', பாதிரியார் உடையா, அது 'வெள்ளைரோஜா'.. இப்படித்தான் சிவாஜி கணேசன் ரசிகர்களின் மனதில் பிரிக்க முடியாத அளவிற்கு படிந்துவிட்டார்.

சிவபெருமான் எப்படி இருப்பார்?

சிவபெருமான் எப்படி இருப்பார்?

கட்டபொம்மனையோ, கர்ணனையோ, சிவபெருமானையோ நாம் நேரில் பார்த்ததில்லை. அவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்றுகூட நமக்கு தெரியாது? அதற்கு எந்தவித ஆதாரமும் இதுவரை இல்லை. அதற்கு இனி ஒருகாலும் வாய்ப்பும் இல்லை. ஆனால் நமக்கு சிவாஜி கணேசனை தெரியும். அவர்கள் எல்லாம் இப்படித்தான் இருந்திருப்பார்கள் என்று கண்ணை மூடிக்கொண்டு சொல்லலாம்.

இமேஜ் பற்றி கவலையே இல்லை

இமேஜ் பற்றி கவலையே இல்லை

சிவாஜிக்கு இமேஜ் பற்றியெல்லாம் கவலையெல்லாம் கிடையாது. இப்போதுள்ள ஹீரோக்களை போல, ரசிகர்களிடம் நல்ல பெயர் வாங்கவும், வீரதீர சாகசங்கள் செய்துஒரு ஹீரோவாகவே அவர்கள் கண்கள் முன்னால் உலா வரவேண்டும், இப்படியெல்லாம் யோசித்ததும் கிடையாது, அப்படி கதாபாத்திரங்கள்தான் வேண்டும் என்று அடம்பிடித்ததும் கிடையாது. நல்லவனோ, கெட்டவனோ, கூனோ, குருடோ, நொண்டியோ, முடமோ, காவல்துறை அதிகாரியோ, திருடனோ, எதுவானாலும் என்ன தயங்காமல் ஏற்று நிறைவாக நடித்து தந்தவர்.

எல்லாமே நவரத்தினங்கள்தான்

எல்லாமே நவரத்தினங்கள்தான்

இதற்கு காரணம் சுய இமேஜைவிட நடிப்பின்மீது அவருக்கு இருந்த தீவிரமான ஈடுபாடுதான். ஒரு நடிகன் எந்த வேடமாக இருந்தாலும் அதை தயங்காமல் ஏற்று செய்வதே நிஜமான கலைஞன் என்பதில் அவர் பிடிவாதமாகவும் உறுதியாகவும் இருந்தார். சிவாஜி கணேசனின் நடிப்புக்கு எந்த படத்தை சொல்ல, எதை விட? எல்லாமே முத்துக்கள்தான்.. எல்லாமே வைரங்கள்தான்.. எல்லாமே மணிமகுடத்தில் பதிக்கப்பட்ட நவரத்தினங்கள்தான்... இந்த படத்தில்தான் அவர் நன்றாக நடித்திருப்பார் என்று பெயர்சொல்லி பட்டியலிட நான் விரும்பவில்லை.

அவயங்கள்கூட பேசும்

அவயங்கள்கூட பேசும்

சிவாஜி ஒரு பிறவிக்கலைஞர். தலைமுடி முதல் கால் விரல்நுனி வரை அனைத்துமே நமக்கு கதை சொல்லும். அவர் வாய்திறந்து பேசவே தேவையில்லை... கணைக்கும் சிம்மக்குரலும், துடிக்கும் உதடுகளும், உயர்நோக்கும் புருவங்களும், விம்மும் கன்னங்களும் என ஒவ்வொரு அவயமும் நடிப்பை கொண்டு வந்து நம் கைகளில் அள்ள அள்ள கொடுத்துவிட்டு இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா? என கேட்டுவிட்டு போகும். இவ்வளவு கூட வேணாம்.. அவரது நடை ஒன்று போதுமே.. 'பார்த்தால் பசிதீரும்' படத்தில் தாங்கி தாங்கி நடப்பதாகட்டும் திருவிளையாடலில் மீனவ வேடமாகட்டும்.. 'திருவருட்செல்வர்' படத்தில் பழுத்த சிவனடியாராகட்டும்.. ஒவ்வொரு நடையிலும் அவரத தன்னம்பிக்கைதான் வெளிப்படுகிறது.

வேறு யாரால் முடியும்?

வேறு யாரால் முடியும்?

தன்னுடைய இறுதிகால கட்ட படங்களில் அவரது பழுத்த அனுபவம் பளிச்சென்றே தெரியும். முதல்மரியாதை, தேவர்மகன், பசும்பொன் ஆகியவை. குறிப்பாக, முதல்மரியாதை படம். ஆயிரமாயிரம் ஆசைகளை உள்ளத்தில் தேக்கி வைத்து, பரிதவித்து, அதேநேரத்தில் ஆபாசமாக, விரசமாக இல்லாமல் கண்ணியத்துடன் உணர்ச்சிகளை வெளிப்படுத்த சிவாஜிகணேசனை தவிர யாரால் முடியும்?

தமிழன்னை பெற்ற தவப்புதல்வன்

தமிழன்னை பெற்ற தவப்புதல்வன்

கலையுலகிற்காக தமிழன்னை பெற்றுத்தந்த தவப்புதல்வன்தான் சிவாஜிகணேசன். உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புதக் கலைஞன்தான் சிவாஜிகணேசன். அனைத்துவித உணர்ச்சிக் குவியல்களை வெள்ளித்திரையில் கொட்டி வண்ணக் கோலம் படைத்தவர்தான் சிவாஜி கணேசன். இந்த திரையுலகம் பூமிப்பந்தில் வாழும்வரை, சிவாஜிகணேசனின் புகழ் என்றும் கலைவானில் ஜொலித்துக் கொண்டே இருக்கும்.

English summary
Nadigar Thilagam Sivaji Ganesan Memorial Day Today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X