For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவை முதல்வர் நாராயணசாமிக்கு வந்த சோதனை... இரண்டில் ஒன்றுக்காக திமுகவின் தயவை நாடுகிறார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புதுச்சேரி: முதல்வராக பதவியேற்றும் அந்த மகிழ்ச்சியை முழுவதுமாகஅனுபவிக்க முடியாமல் இருக்கிறார் நாராயணசாமி. அவர் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றால் மட்டுமே முதல்வராக நீடிக்க முடியும்.

நாராயணசாமி போட்டியிட காங்கிரஸ் கட்சி சட்டசபை உறுப்பினர்கள் யாராவது ஒரு தங்கள் தொகுதியை விட்டுக்கொடுக்க வேண்டும். ஆனால் சொந்தக் கட்சிக்காரர்கள் வெற்றி பெற்ற தொகுதியை விட்டு கொடுக்க மறுத்து வருவதால் நாராயணசாமி முதல்வராக நீடிப்பதில் சிக்கல் நிலவுகிறது.

முதல்வர் பதவியை தக்க வைப்பதற்காக திமுக வெற்றி பெற்றுள்ள இரண்டு தொகுதிகளில் ஒன்றை விட்டுத்தர வேண்டும் என்று அவ்வப்போது சென்னை வந்து அப்ளிகேசன் போட்டு செல்கிறாராம் நாராயணசாமி.

புதுச்சேரி சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. காங்கிரஸ் 15 இடங்களிலும், திமுக 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி முதல்வராக பதவி ஏற்றார்.
இவர் சட்டசபை உறுப்பினராக இல்லாத நிலையிலும் பெருமளவில் லாபி செய்து முதல்வர் பதவியை கைப்பற்றினார்.

இந்நிலையில், அவர் போட்டியிட்டு வெற்றிபெற காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் தங்கள் தொகுதியை விட்டுக் கொடுக்க மறுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், நாராயணசாமி சட்டசபை உறுப்பினராவதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரியின் 19வது முதல்வராக, கடந்த 06ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார் நாராயணசாமி. அவருக்கும், அவருடன் அமைச்சர்களாக பொறுப்பேற்ற நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணராவ், கந்தசாமி, ஷாஜஹான், கமலக்கண்ணன் ஆகிய ஐந்து அமைச்சர்களுக்கும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுனர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

எதிர்கட்சி புறக்கணிப்பு

எதிர்கட்சி புறக்கணிப்பு

பதவியேற்பு விழாவை பொறுத்தவரை வழக்கமாக ஆளுநர் மாளிகையில்தான் நடைபெறும். ஆனால் இம்முறை இடப் பற்றாக்குறை காரணமாக கடற்கரை சாலையில் காந்தி மண்டபம் எதிரே பிரம்மாண்ட பந்தலில் பதவியேற்பு விழா நடந்தது. இந்த பதவியேற்பு விழாவை கடந்த ஆட்சியின் ஆளுங்கட்சியும் தற்போதைய எதிர்க்கட்சியுமான என்.ஆர். காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. ஆகிய எதிர்க் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணித்தனர்.

லட்சுமி நாராயணன்

லட்சுமி நாராயணன்

ராஜ்பவன் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ லட்சுமிநாராயணனும் பங்கேற்கவில்லை. இந்த லட்சுமி நாராயணன்தான், நாராயணசாமிக்காக தொகுதியை விட்டுத்தருவதாகக் கூறி, ராஜினாமா கடிதம் கொடுத்தவர். அதேசமயம் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்பதால், புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை லட்சுமி நாராயணனின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி பூட்டுப் போட்டனர்.

ராஜினாமா கொடுத்த எம்.எல்.ஏக்கள்

ராஜினாமா கொடுத்த எம்.எல்.ஏக்கள்

எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத லட்சுமி நாராயணன் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தையும் புறக்கணித்தார். இவரைப் போலவே ராஜினாமா கடிதம் கொடுத்த இன்னொருவரான மல்லாடி கிருஷ்ணராவ் பெரிய அளவில் லாபி செய்து அமைச்சர் பதவியை கைப்பற்றினார் என கூறப்படுகிறது.

நமச்சிவாயம் சமாளிப்பு

நமச்சிவாயம் சமாளிப்பு

புதுச்சேரி காங்கிரஸ் கட்சியில் உள்ளடி வேலைகள் நடைபெற்றாலும் நாராயணசாமி எந்த தொகுதியில் எப்போது போட்டியிடுவார் என்பது நேரம்வரும் போது தெரிய வரும் என்று கூறியுள்ளார் முதல்வர் பதவிக்கு முன்பு ஆசைப்பட்ட மாநில தலைவர் நமச்சிவாயம்.

கட்சிப்பணியாற்றுவார்

கட்சிப்பணியாற்றுவார்

லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.வுக்கு இந்த செயற்குழு கூட்டத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற உள்நோக்கம் எதுவும் இல்லை என்று கூறியுள்ள அவர், அவர் கோவிலுக்கு செல்வதால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று கடிதம் கொடுத்துள்ளார். அவர் தொடர்ந்து கட்சி பணியை ஆற்றுவார் என்றும் சமாளித்துள்ளார்.

ராஜினாமா கடிதங்களின் நிலை

ராஜினாமா கடிதங்களின் நிலை

மல்லாடி கிலுஷ்ணராவும், லட்சுமி நாராயணனும் கொடுத்த ராஜினாமா கடிதங்களுக்கு ஆறு மாதம் வரை உயிரும், உறுதியும், உத்திரவாதமும் இருக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும். இப்படி சொந்த சகாக்களே பதவிக்காக சண்டையிட்டுக் கொள்வதால் முதல்வராக உள்ள நாராயணசாமியிடம் சந்தோஷம் மிஸ் ஆகியுள்ளது.

திமுகவிடம் கோரிக்கை

திமுகவிடம் கோரிக்கை

முதல்வர் பதவியை தக்கவைக்க வேண்டுமெனில் தான் போட்டியிட இரண்டில் ஒன்றை விட்டுத்தர வேண்டும் என்று தி.மு.க.விடம் அடிபோடுகிறார் நாராயணசாமி.
எனவேதான் அவ்வப்போது ஸ்டாலினை சந்தித்து பேசி வருகிறார். பதவியேற்கும் முன்பு சென்னை வந்த நாராயணசாமி, நேற்றும் சென்னையில் ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார். தனது பதவியேற்பு விழாவில் பங்கேற்றதற்காக மு.க.ஸ்டாலினுக்கு நன்றி சொல்ல அவரை சந்தித்தேன் என்று கூறினார்.

வெற்றி பெற்ற தொகுதிகள்

வெற்றி பெற்ற தொகுதிகள்

காங்கிரஸ் கட்சியானது காமராஜ்நகர், லாஸ்பேட், நெல்லித்தோப்பு, ஏம்பலம், ஏனாம், அரியாங்குப்பம், வில்லியனூர், நெட்டப்பாக்கம் , ராஜ்பவன், மணவெளி திருநள்ளாறு, காலாப்பட்டு, பாகூர், ஊசுடு, உழவர்கரை ஆகிய 15 தொகுதிகளில் வென்றுள்ளது. கூட்டணியான திமுக உருளையன்பேட்டை, நிரவி டி.ஆர். பட்டிணம் ஆகிய இரு தொகுதிகளில் வென்றுள்ளது.

தோற்கடிக்க திட்டம்

தோற்கடிக்க திட்டம்

முதல்வர் பதவிக்காக பல ஆண்டு காலம் கனவு கண்டு, அடித்துப் பிடித்து பதவியை பிடித்த நாராயணசாமிக்கு புதுச்சேரி அரசியல்வாதிகள் ஆரம்பத்திலேயே ஆட்டம் காட்டுகிறார்கள். அதேவேளையில் நாராயணசாமியை சட்டசபைத் தேர்தலில் தோற்கடிக்க என்.ஆர். காங்கிரசும் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நாராயணசாமி எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அவரை தோற்கடிக்க வேண்டும் என்று எதிர்கட்சியினர் சபதம் போட்டுள்ளதால், நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக நீடிப்பாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

English summary
Pudhucherry Chief Minister Narayanasamy is asking DMK leader to resign one seat for him.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X