For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்.டி.டிவிக்கு ஒருநாள் தடை விதித்தது கருத்து சுதந்திர விதிமுறை மீறல் : கருணாநிதி, வைகோ, கண்டனம்

கருத்துரிமைக்கு எதிராக என்டிடிவி செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு விதித்துள்ள ஒரு நாள் தடையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: என்.டி.டிவி ஒளிபரப்புக்கு பாஜக அரசு ஒருநாள் தடை விதித்ததற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார். கருத்துரிமைக்கு எதிராக என்டிடிவி செய்தித் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு விதித்துள்ள ஒரு நாள் தடையை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

பதான் கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் செய்தி வெளியிட்டதற்காக தடை விதிக்கப்பட்டது. எல்லா தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பரப்பிய போது என்.டி.டிவிக்கும் மட்டும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடைக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

NDTV one day Ban Vaiko, Karunanidhi condemned

திமுக தலைவர் கருணாநிதி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையைப் பார்க்கும்போது, நெருக்கடி நிலை காலத்தில் கழக ஏட்டிற்கும் , அதில் நான் எழுதிய கட்டுரைகளுக்கும் விதிக்கப்பட்ட தடை உத்தரவு தான் நினைவிற்கு வருகிறது. மத்திய பாஜக அரசின் செயல்பாடு கருத்துச் சுதந்திர விதிமுறை மீறலாகும். மத்திய அரசு இப்படிப்பட்ட நடைமுறைகளைத் தொடருமானால், அது இரண்டாவது நெருக்கடி நிலைக்குத் தான் வழி வகுக்கும் என்பதோடு, அந்தக் கறுப்பு நாட்களைத்தான் இந்திய மக்களின் நெஞ்சில் நிரந்தரமாகச் செதுக்கி விடும். எனவே பிரதமர் அவர்களே இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு, ஜனநாயக உரிமைக்கும் கருத்துச் சுதந்திரத்திற்கும் இந்த ஆட்சியில் இனி எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாது என்ற உத்தரவாதத்தை வெளியிட முன் வர வேண்டும். இல்லாவிட்டால், மத்திய பாஜக அரசு, ஜனநாயகப் போர்வையில் சர்வாதிகாரத்தையே நடைமுறைப்படுத்துகிறது என்று நாடெங்கிலும் எழுந்துள்ள குற்றச்சாட்டு, உண்மை என்றாகி விடும்.

மனித உரிமை மீறல்

ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர், ராம் கிஷன் கிரேவால் தற்கொலை செய்து கொண்டார். அவர் நடத்திய போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததற்காகவும், தற்கொலைக்கு இரங்கல் தெரிவிக்கச் சென்றதற்காகவும் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இரண்டு நாட்களில், மூன்று முறை கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் மத்திய அமைச்சர் ஒருவர் இந்தப் போராட்டத்தை அரசியல் நாடகம் என்று வர்ணித்திருக்கிறார். இரங்கல் தெரிவிப்பதும், போராட்டத்தை ஆதரிப்பதும் தனி மனித சுதந்திரம் மற்றும் ஜனநாயக உரிமையின்பாற்பட்டவை.

கைது செய்வதன் மூலம் அதைத் தடுக்க நினைப்பது மனித உரிமை மீறலாகும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியத் திட்டம் என்பது அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியிலேயே அறிமுகப்படுத்தப்பட்டு, அனைவராலும் வரவேற்கப்பட்டு, ஆதரிக்கப்பட்டு வரும் திட்டம். அந்த திட்டத்தை குறைகளை நீக்கி நிறைவாகவும் முழுமையாகவும் நடைமுறைப்படுத்துவது பற்றியும், மத்திய பா.ஜ.க அரசு உடனடியாக நல்ல முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்துகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வைகோ அறிக்கை

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் , பஞ்சாப் மாநிலம் பதன்கோட் ராணுவ முகாம் மீது ஜனவரி மாதம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான செய்திகளை என்.டி.டி.வி. தொலைக்காட்சி ஒளிபரப்பியது. பாதுகாப்பு தொடர்பான தகவல்களையும், அரசின் ரகசியமான ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளையும் பகிரங்கமாக ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டி, மத்திய அமைச்சர்கள் குழு அளித்துள்ள பரிந்துரையை ஏற்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நவம்பர் 9 ஆம் தேதி ஒரு நாள், என்.டி.டிவி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப தடை விதித்து இருக்கிறது.

இது தொலைக்காட்சி ஊடகங்கள் மீது மட்டும் நடத்தப்பட்டுள்ள தாக்குதல் அல்ல, ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் மீது தொடுத்துள்ள தாக்குதல் ஆகும். நெருக்கடி கால இருண்ட வரலாற்றை மீண்டும் நினைவூட்டுவது போன்ற மோடி அரசின் இந்நடவடிக்கை கடுமையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.

மோடி அரசின் செயல்பாடுகள் அனைத்தும் நாட்டை சர்வாதிகாரப் பாதையில் அழைத்துச் செல்லக்கூடிய வகையில்தான் இருக்கின்றன. நாட்டின் பாதுகாப்புக்கு கேடு விளைவிக்கும் வகையில் பத்திரிகை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டால் அவற்றின் மீது சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. ஆனால் பாஜக அரசு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களை அச்சுறுத்திப் பணிய வைக்கும் முயற்சியில் இறங்கி இருப்பது அரசியல் சட்டம் வழங்குகின்ற கருத்துரிமையைப் பறிக்கும் செயல் ஆகும்.

மோடி அரசு இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதைப் பார்த்தால் இந்தியா ஜனநாயகப் பாதையில்தான் சென்றுகொண்டிருக்கிறதா? என்ற ஐயப்பாடு எழுகிறது என்று வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
DMK president Karunanidhi and MDMK leader Vaiko today hit out at Prime Minister Narendra Modi over the widely condemned oneday ban on NDTV India, freedom of expression was being "stifled" in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X