For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

3 தமிழர் விடுதலை வழக்கில் தீர்ப்புக்கு எதிர்ப்பு: கருணாநிதிக்கு நெடுமாறன், கொளத்தூர் மணி கண்டனம்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை; ராஜிவ் வழக்கில் மூன்று தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்க திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளதற்கு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ. நெடுமாறன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ராஜிவ் வழக்கில் மூன்று தமிழர் விடுதலை தொடர்பாக ஏப்ரல் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்திருந்தார். இது ஒரு கட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று கருணாநிதி கூறியிருந்தார்.

இதற்கு ராஜிவ் வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் எதிர்ப்பு தெரிவித்து, இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

பழ. நெடுமாறன்

இந்நிலையில் கருணாநிதிக்கு கண்டனம் தெரிவித்து உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் குறித்த வழக்கில் ஏப்ரல் 25-ஆம் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சதாசிவம் அவர்கள் கூறியிருப்பது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்தது அல்ல . அரசியல் ரீதியான விளைவுகள் இதனால் ஏற்படும்" என தி. மு. க. தலைவர் மு. கருணாநிதி கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியையே மிரட்டும் வகையில் கருணாநிதி கூறியிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென கருணாநிதி முன்னர் பேசியதெல்லாம் ஒப்புக்காகவே என்பது இதன் மூலம் தெரிகிறது.

7 பேரின் வழக்கில் தீர்ப்பு வெளி வருவதை விட அவருக்கு தனது கட்சியின் நலன் பெரிது என கருதுகிறார். இவருடைய தேர்தல் ஆதாயத்திற்காக அந்தத் தீர்ப்பை ஒத்தி வைக்க வேண்டுமென நிர்பந்தம் செய்வது நீதித் துறையை அவமதிக்கும் போக்காகும்.

இவ்வாறு நெடுமாறன் கூறியுள்ளார்.

கொளத்தூர் மணி

திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி மாண்புமிகு சதாசிவம் அவர்கள் கோவையில் 18-04-2014 அன்று நடைபெற்ற நீதிபதிகளின் மாநாட்டின் முடிவில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் "வழக்கின் தீர்ப்பினை ஒரு வாரத்திற்குள் (தான் ஓய்வு பெறும் நாளுக்கு முன்னதாக ) வழங்கப்படும்,அதுவரைப் பொறுத்திருங்கள்", எனக் கூறியுள்ளார்.

அவரது பதவிக்காலம், அவரது பிறந்த நாள் அடிப்படையில் 26-04-2014 - உடன் நிறைவடைகிறது. அந்த அடிப்படையில் 25-04-2014க்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும், அதுவரை பொறுத்திருங்கள் என்றும் கூறியுள்ளார். அவர் பேட்டியில் கூறியிருக்காவிட்டாலும், எந்த ஒரு நீதிபதியும் தான் விசாரித்த வழக்குகளின் தீர்ப்பை, தான் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக வழங்குவது என்பது மரபான ஒன்றுதான்.

ஆனால் ஏதோ 24-04-2014 அன்று தமிழ்நாட்டில், நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுவதைக் கணக்கில் கொண்டே, பேட்டி கொடுக்கப்பட்டதைப் போல, தலைமை நீதிபதியின் இயல்பான பேட்டியை விமரிசனம் செய்து தி.மு.க. தலைவர் கலைஞர் தனது தேர்தல் பரப்புரையில் கூறியிருப்பது அனைவரையும் முகம் சுளிக்கச் செய்துள்ளது.

மரண தண்டனையிலிருந்து மீண்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவர் உள்ளிட்ட எழுவரையும் விடுவிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா? இல்லையா? என்பதே வழக்கின் அடிநாதமாய் உள்ள பொருளாகும். அவ்வழக்கில் சாதகமான தீர்ப்பு வந்தால் கலைஞர் தொடர்ந்து எழுப்பிவரும் "மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி " எனும் கருத்துக்கு வலுசேர்ப்பதாகவே அது அமையும்.

எதையும் அரசியலாக்கி அரசியல் சதுரங்கம் விளையாடுவதைப் போலவே - தமிழின உணர்வாளர்களும், மனிதநேயப் பற்றாளர்களும் ஏங்கி எதிர்பார்த்து நிற்கும் தீர்ப்பு குறித்த அறிவிப்பையும் அரசியலாக்குவது ஒரு முதிர்ந்த அரசியல் தலைவருக்கு அழகல்ல.

இருபத்து முன்றாண்டு காலம் சிறையில் வாடும் எழுவருக்கும், அது போலவவே இருபது ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் போன்றோருக்கான விடுதலைக்கும் முன்னோடியாக உள்ள இத்தீர்ப்பு குறித்து திசைதிருப்பும் திருகல் வாதங்களை முன்வைக்கும் கலைஞரின் சுயநல அரசியல்போக்கைத் திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

நீண்ட நெடிய உச்சநீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக ஒரு தமிழர் தலைமை ஏற்று அமர்ந்துள்ளார். அவரது குறைவான பதவிக் காலத்தில் முத்திரைப் பதிக்கும் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

தனது தீர்ப்புகளில் எல்லாம்டாக்டர் அம்பேத்கர் அவர்களின் மேற்கோள்களைப் பொருத்தமாக சுட்டிக்காட்டித் தீர்ப்பை எழுதும் பழக்கமுள்ள அவர், பதினைந்து பேர்களின் மரண தண்டணையை ஆயுள் தண்டணையாக குறைத்து வழங்கிய தீர்ப்பு, எதையும் அழுத்தம் திருத்தமாக, தெளிவாக சொல்வதில் நமது அரசியல் சட்டம் பெரிதும் மதிக்கப்படுகிறது என்றே தொடங்குகிறது. மேலும், அரசின் எந்நிலையில் உள்ளோர் பிறப்பித்த ஆணையாக இருந்தாலும் அதைப் பரிசீலிக்கிற உரிமையை நீதிமன்றங்களுக்கு வழங்கியுள்ள பிரிவு 32ஐக் குறிப்பிட்டு அம்பேத்கர் கூறியுள்ள மேற்கோளையும் எடுத்துக் கூறியே, தீர்ப்பினை வழங்கியுள்ளார்.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்குள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை அறிவிக்கலாம். அதை பயன்படுத்தியே முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த மாண்புமிகு கே.ஜி. பாலகிருஷ்ணன் கேரளத்தவர் என்பதால் ஓணம் பண்டிகைக்கு விடுமுறை அறிவித்தார். ஆனால் மாண்புமிகு சதாசிவம் அவர்களோ புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ஐ உச்ச நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக விடுமுறை அறிவித்து அம்பேத்கருக்கு தனது நன்றியை, மரியாதையை வெளிப்படுத்தினார்.

சட்ட உதவி மையம் என்பது நீதித் துறையில் போதிய நிதியின்றி திணறியபடி இயங்கிவந்த அவல நிலையை மாற்றி, ஏழை எளிய மக்களும் தங்களுக்கான நீதியைப் பெறுவதற்கு வாய்ப்பாக அரசே தனியாக சட்ட உதவி வாரியத்தை உரிய நிதி ஒதுக்கீடோடு அமைத்திட வேண்டுமென அவர் பரிந்துரைத்து வழிவகை கண்டது அடித்தட்டு மக்களின் நலனில் அக்கறையுள்ள அனைவரும் போற்றி வரவேற்ற ஒன்றாகும்.

மேலும், மனித மலத்தை மனிதனே அள்ளும் கொடுமைக்கு முடிவுகட்டி வழங்கிய தீர்ப்பும் மனிதநேயர் அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

உச்ச நீதிமன்ற நீதி காலத்தில், ஸ்டெய்ன்ஸ் பாதிரியார் வழக்கில் தண்டனை பெற்ற தாராசிங்கின் தண்டனையை உறுதி செய்தது, தனியார் முதலாளிகளின் நலனுக்குக்காக மக்களின் நலனுக்கு எதிராக நிலங்களை கையகப்படுத்தல் கூடாது என்ற அறிவுரையோடு, கெய்ல் நிறுவன நில ஆக்கிரப்பை எதிர்த்து தீர்ப்பு, பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு கருணை காட்டி சிறையில் இருந்த காலத்தை தண்டனையாகக் கருதி விடுவிக்கும் போக்கைக் கண்டிக்கும் குறிப்புரையோடு அவ்வழக்குகளில் தண்டனைகளை உறுதி செய்தது, புகழ் பெற்ற நடிகரான சஞ்சய்தத்துக்கு ஐந்தாண்டு தண்டனையை வழங்கியது என பல முத்திரைத் தீர்ப்புகளை வழங்கியவர் நீதிபதி சதாசிவம் அவர்கள்.

அவ்வாறான ஒரு நீதிபதியை, தமிழருக்கு, தமிழ்நாட்டுக்குப் புகழ் சேர்த்த ஒரு நீதிபதியை, தன் சுயநல அரசியல் நோக்கத்திற்காகக் களங்கப்படுத்துவது மேலும் கண்டிக்கத்தக்கதும், அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டியதுமாகும்.

இவ்வாறு கொளத்தூர் மணி கூறியுள்ளார்.

English summary
World Tamil Movement leader Pazha. Nedumaran, Dravidar Viduthalai Kazhagam leader Kolathur Manid has condemned DMK leader on the Rajiv case judgment row.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X