• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சகாயங்கள் கிளம்பி வர வேண்டிய நேரம் இது!

|

சென்னை: ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று இரு தரப்பினரும் உன்னை பாரு, என்னைப் பாரு என்ற போட்டா போட்டி போட்டுக் கொண்டு மக்களின் கவலைகளைப் பார்க்க மறந்து வருகின்றனர். மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டிய அரசுக்கு அடி வயிற்றில் நெருப்பு எரிகிற போல நிலைமை. காரணம், அரசு நீடிக்குமா, ஆட்சி கவிழாமல் தப்புமா என்ற நித்தியகண்ட பூரணாயுசு சிச்சுவேஷன். தன் வீட்டில் நெருப்பு எரியும் போது ஒருத்தன் அதை அணைப்பானா சுற்றியுள்ள வீடுகளில் உள்ள நெருப்பை அணைக்க ஓடுவானா. இந்த கேள்விக்கான பதில் தான் இன்று தமிழகத்தில் நடக்கும் ஆட்சியின் நிலைமை.

ஆட்சிக்குள், அமைச்சரவைக்குள், அமைச்சர்களுக்குள், உள்கட்சிக்குள் என அவர்களுக்குள் நடக்கும் பூசலை சரி செய்வதற்கே அவர்கள் நேரம் சரியாக இருக்கிறது. அவர்கள் பூச பூச அங்கே ஓன்று இரண்டு ஓட்டைகள் வர மீண்டும் அவர்கள் பூச தொடங்க என்று அவர்கள் நேரமும் கவனமும் அதிலேயே போய்விடுகிறது. இதில் இவர்கள் மக்களின் குறைகளை பார்க்க நேரம் இருக்குமா என்ன. அந்த ஓட்டை உடைசல்களை பூசிக் கொண்டிருந்தால் இவர்கள் மக்களுக்கு என்று புது வீடெல்லாம் (திட்டங்கள்) கட்டுவது என்பது சாத்தியமாகுமா, ஏன் ஒரு சுவரை கட்டுவது கூட கேள்விக்குறி தான்.

Need of the hour is Sahayam IAS

மக்கள் திட்டங்களை அடுக்கி வைத்து அறிக்கை இட வேண்டிய ஆட்சியாளர்கள், மக்களின் திட்டங்களுக்காக பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க வேண்டிய எதிர்க்கட்சிகள் இன்று பெரும்பாலும் செய்து கொண்டிருப்பது இது தான். "ஆட்சி கவிழாது" என்று அவர்களும், "ஆட்சி நிலைக்காது" என்று இவர்களும் கோஷம்தான் தொடர்கதையாக தமிழக செய்தி தாள்களில் சூடான சுவையான உணவாய் நீடிக்கிறது. இடை இடையே இதற்கு இன்னும் சுவை கூட்டும் பதார்த்தங்களைப் போல அமைச்சர்களின் விமர்சன அறிக்கைகைகள் வேறு வரிசையாக மக்களை வந்து சேர்கிறது.

நாங்களும் ரவுடிதான்
ஸ்லீப்பர் செல் அரசியல்

இடையிடையே நாங்களும் ரவுடி தான் என்ற ரேஞ்சுக்கு, எங்க கையில் பல ஸ்லீப்பர் செல் இருக்கு. அவர்கள் வர வேண்டிய நேரத்தில் வெளியே வருவார்கள் என்றும் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஸ்லீப்பர் செல் என்று அரசியலுக்கு புது டெக்னிக்கை அறிமுகம் செய்து வைத்து பூச்சாண்டி காட்டும் வித்தையை, விநோதத்தை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த விசித்திரங்கள் எல்லாம் அரங்கேறும் வில்லங்க களமாக தமிழக அரசியல் தளம் இன்று. மறைந்த முதல்வர் விட்டு சென்ற ஆட்சியை ஏதோ உயில் எழுத மறந்து விட்டுச் சென்ற ஒரு ஜமீன் வீட்டு சொத்துப் போல அதை பிடித்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி சிலர் பேசுவது இன்னும் நீடிப்பது மக்களை எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது. விட்டு சென்றது ஒரு தலைமை பொறுப்பல்லவா.. அதை எப்படி சொந்தம் என்று சொந்தம் கொண்டாட முடியும்.. இது வினோதம் தானே .

ஜெயலலிதா சினிமா
சினிமா போல மாறிய அரசியல்

அப்பப்பா.. என்னென்னமோ நடக்கும் தமிழகம், தேர்ந்த நடிகர்கள் நடிக்கும் ஒரு திரைப்படம் போல காட்சி தருகிறது. நாம் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த ஆண்டு செப்டம்பர் 22 அன்று அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஒரு ஆளுமையின் மவுனத்தில் ஒரு சரித்திர திரைப்படம் முடிந்து அடுத்த திரைப்படம் ஆரம்பித்தது என்றும் சொல்லலாம். டிசம்பர் 5 அன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இறந்ததாக வந்த செய்தி இந்த புதிய அரசியல் கூத்து என்னும் திரைப்படத்தின் டீஸர். அதுவரை அம்மா என்றவர்கள் எல்லாம் சின்னம்மா என்று சொல்ல ஆரம்பித்து சிலாகித்து பேட்டி அளித்த ஆரம்பங்கள் திரைப்படத்தின் மார்க்கெட்டிங்கின் ஆரம்பம். அப்புறம் சின்னம்மா என்னும் புது முகத்தை கழக பொது செயலாளராக முதல்வரே முன்மொழிந்தது அமைச்சர்கள் எல்லாம் பயங்கரமாக மண்டை ஆட்டியது எல்லாம் மார்கெட்டிங்கின் அஸ்திவாரங்கள்.

தோற்றுப் போன நாயகி சசிகலா
மக்கள் ஆதரவைப் பெறத் தவறிய சசிகலா

அதன் பிறகு பெயர் தெரியாத ஒப்பனைக்காரர்களால் திருமதி சசிகலா அவர்கள் தோற்றத்தில் ஜெயலிதாவாக (முழுதாக சந்திரமுகியாக இல்லை முழுவதுமாக ஜெயலிதாவை போல) நெற்றி பொட்டு முதல் நீள ரவிக்கை பச்சை சேலை வாட்ச் என்று அப்பட்டமாக ஜெயலலிதாவின் பிம்பத்தை தன்னில் காட்ட முயற்சித்து இரு விரல் காட்டி மக்களை பார்த்தது எல்லாம் திரைப்படத்தின் அதி உச்சக் காட்சியாக மாறியது. ஆனால் என்ன செய்வது பெரிய படஜெட் படத்தில் அறிமுகமாகி தோற்று போகும் அதிர்ஷ்டம் இல்லாத புதுமுகத்தைப்போல சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகி சிறை வாசம் போனார் சசிகலா.

கோமாளித்தனங்களின் உச்சகட்டம்
யாருக்குமே பிடிக்காத ஆட்சி

அதன் பிறகு நடந்ததெல்லாம் கோமாளித்தனங்களின் உச்சகட்டம்.. இன்று வரை தொடர்கிறது இந்த நகைச்சுவை நாயகர்களின் அரசாட்சி! இடையே, வெளிநாட்டு மாப்பிள்ளை கேரகdடர் போல கமல் - ரஜினி போன்றோர் வந்து பரபரப்பை ஏற்படுத்தி செல்கின்ற்னர். அதேபோல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே ஒரு தகுதியை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சியைக் கேட்ட தீபா, அமைச்சர்களின் காமெடி பேட்டிகள் என்று விடாது கறுப்பாய் நீள்கிறது யாருக்குமே பிடிக்காத இந்த ஆட்சி. திரை துறையிலிருந்து அரசியல் களத்துக்குள் குதிக்க பச்சை சிக்னல் காட்ட யோசித்தபடி இருக்கும் திரு ரஜினிகாந்த் அவர்கள். அரசியல் களத்துக்குள் குதித்து விட்டேன் என்று இணையத்தில் பதிவிட்டு பிக் பாஸ் மூலம் சொல்லிவிட்ட கமல். இறங்கிவிட்டவருக்கும் இதுவரை திண்ணமாக இறங்காத அவரையும் கம்பளம் விரித்து வரவேற்க காத்திருக்கும் ரசிகர் கூட்டம்.

தந்திரக்கார அரசியல்வாதிகள்
நீயா நானா அரசியல்

யார் யாரோ பேசுகிறார்கள். என்னென்னவோ அறிக்கை விடுகிறார்கள். அத்தனையும் விவாதங்களாகிறது . அரசியலுக்கு வேறு அர்த்தம் கற்பித்து விட்ட அற்ப பதர்களின் புதிரான ஆட்சிக்குள் தமிழகம் இன்று !! தந்திரக்கார அரசியல் வாதிகளின் நானா நீயா என்ற சதுரங்க ஆட்டத்தில் வீழ்த்தப்பட்டு சிதறும் சிறு காய்களைப் போல நடப்பவை எல்லாம் சிந்தனையை என்னவோ செய்கிறது. சில கேள்விகளை எழுப்புகிறது. ஏன் அது என்ன யார் வந்தாலும் சிகப்பு கம்பளம் விரித்து கொண்டு வரவேற்க காத்திருக்கிறோம் நாம். யாரவது வந்து விட மாட்டார்களா. நடப்பவை எல்லாம் அழித்து புதிதாக எதுவும் எழுதி விட மாட்டார்களா என்ற ஏக்கத்தின் வெளிப்பாடு தான் கமல், ரஜினி போன்றவர்கள் அரசியலுக்கு வருவதற்கு கிடைக்கும் ஆதரவுக்குக் காரணம்.

சகாயங்கள் வர வேண்டும்
சகாயம் ஐஏஎஸ் மாதிரியான தலைவர் தேவை

நல்லது யார் செய்தால் என்ன, நல்லது நடந்தால் சரித்தான். அது திரைத்துறையிலிருந்து வந்தவர் செய்தாலும் சரி, பிற துறையிலிருந்து வந்தாலும் சரி. ஆனால் நடிகர்களுக்கு மட்டும் அரசியலில் குதிக்க ஆர்வம் உடனே வருகிறது. அதுதான் மக்களை ஆச்சரியப்படுத்துகிறது. காரணம், அந்த மாயக் கவர்ச்சிதான். ஆனால் இதுவரை நல்லதே செய்து கொண்டு நேர்மையாக வாழ்ந்து கொண்டிருக்கும் அதிகாரிகள் சகாயம் போல எத்தனையோ பேருக்கு அரசியல் ஆசை வராமல் இருப்பதுதான் மக்களை ஏமாற்றுகிறது. அவர்கள்தான் வர வேண்டும் என்பதே மக்களின் உண்மையான ஆசை, எதிர்பார்ப்பு. சகாயம் மட்டும் அல்ல ஊருக்கு சகாயம் செய்வதற்கு எத்தனையோ பேர் இருப்பார்கள். அப்படிப்பட்ட சகாயங்கள் ஒன்று திரண்டு எழுந்து வர வேண்டிய நேரமிது. சினிமா கவர்ச்சியைத் தாண்டி இந்த எழுச்சியைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். அப்படி வரும்போது ஒட்டுமொத்த தமிழகமும் அவர்கள் பின் நிற்கும் என்பதில் சந்தேகமில்லை..!

- Inkpena சஹாயா

English summary
Author Inkpena Sahaya has said in this article that the need of the hour of Tamil Nadu is the entry of Sahayam IAS in the politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X