For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருப்பு, சிவப்பு, நீலம்- அம்பேத்கரின் சிறந்த மாணவராக வெளிப்படும் காலா ரஞ்சித்- நெட்டிசன்கள் பாராட்டு

காலா எனும் சிறந்த படத்தைக் கொடுத்ததாக இயக்குநர் ரஞ்சித்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தாம் ஏற்றுக் கொண்ட தத்துவ ஆசான் அம்பேத்கரின் ஆகச் சிறந்த மாணவராக காலா படம் மூலம் இயக்குநர் பா. ரஞ்சித் தம்மை வெளிப்படுத்தியிருப்பதாக கொண்டாடப்படுகிறார்.

சமூக வலைதளங்களில் இயக்குநர் பா. ரஞ்சித்தின் காலா படம் போற்றி புகழப்படுகிறது. தலித் விடுதலை பேசும் படமா? நில உரிமை கோரும் படமா? மண்ணரசியலை பேசுகிற படமா? என பல கோணங்களில் அலசுகின்றனர் சமூக ஆர்வலர்கள். அவற்றில் சில:

Akilan Gangadharan காலா தலீத் அரசியலை மட்டும் பேசும் படமா என கேட்டால் நான் அதை மறுத்திடுவேன். காலா, தலித் அரசியலுடன் அடிப்படை உரிமை மீட்பு போராட்டத்தை பேசும் புரட்சி படம். ரஜினியின் திரை மைல்கல்லில் இப்படம் ஒரு சாதாரண படமாக அமைந்து விடாது என்பதே உண்மை, ரஜினி என்ற பிம்பத்தை இயக்குனர் ரஞ்சித் பயன்படுத்தி தனது கருத்துகளை சொல்வதால் அதற்கு பெரிய தாக்கமும் கனமும் இருக்கிறது. இப்படம் ரஞ்சித் படமா இல்லை ரஜினி படமா என்றால் இப்படத்தின் இறுதியில் வரும் மூன்று வண்ணங்கள் கருப்பு, சிகப்பு, நீலம் தான் பதில், இப்படம் ஒரு பெரியாரிய படம், இது ஒரு கம்யூனிசியப் படம், இது ஒரு அம்பேத்கரிய படம் என்று பிரித்திடலாம், ரஜினிக்கான ஸ்கோப்பும் படத்தில் ஏக போக இருக்கிறது, அவருக்கான ஸ்டைல் & கரிஸ்மாவும் படத்தில் நல்லா ஒர்க்கவுட் ஆகியுள்ளது. ஒட்டு மொத்தமாக இது ரஞ்சித் படமாகவும் ரஜினி படமாகவும் உருவெடுத்துள்ளது. இதுவே இப்படத்தின் பெரிய பலம்.

Netizens hails Ranjiths Kaala

படத்தின் கதையை நான் சொல்ல விரும்பவில்லை ஆனால் மேலோட்டமாக சொல்ல வேண்டுமானால் தாராவியில் வாழும் உழைக்கும் மக்களை ஆளும் வர்க்கம் தனது சக்தியால் எப்படி ஒடுக்குகிறது அதை தாராவியின் பெரும் புள்ளியான காலாவும் மக்களும் எப்படி எதிர்க்கொள்கிறார்கள் என்பதே கதையின் மையக்கரு. அலட்டல் இல்லாமல் ஓபனிங் கொடுக்கிறார் ரஜினி, நெல்லையில் இருந்து கிளம்பி மும்பை தாராவியில் குடியமர்கின்றனர். திரை முழுக்க அவர்கள் பேசும் நெல்லை தமிழ் எந்த இடத்திலும் பிசிரு தட்டவில்லை, அச்சு அசல் நெல்லை வட்டார வழக்கையும் அவர்கள் வாழ்வியலையும் திரையில் கொண்டு வந்துள்ளனர். காலா மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரன்கள், பேத்திகள் என எளியவராய் வரும் காட்சிகள் கவிதை. காலாவின் முன்னாள் காதலாக வரும் ஹீமா குரேசியும் காலாவிற்குமான காட்சிகள் கபாலியை நினைவுப்படுத்தி விட்டுச் செல்கிறது, இருந்தும் அத்தனை அழகு, மிகவும் ரசித்து இந்த திரைக்கதையை எழுதியிருப்பார் இயக்குனர் என திரையில் கதை சொல்கிறது.

'நிலம்' நம் உரிமை என்ற ஒற்றை சொல் படம் முழுக்க நம் தலையில் ரிங்காரமிடுகிறது. பல அரசியலை அலேக்காக பேசிக் கொண்டே நகர்கிறது. மற்றும் பல அரசியல் நிகழ்வுகளையும் பேசிக் கொண்டே நகர்கிறது, குறிப்பாக சொல்லப் போனால் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஒரு போலீஸ் உணர்ச்சி பொங்க பேசியருப்பார் அதற்கு பின்பு அவரை அவர்கள் உயர் அதிகாரிகள் கார்பிரேட்டுக்கு எதிராக பேச கூடாது என்பதை போல் ஒரு காட்சி வரும். தூத்துக்குடி துப்பாக்கி சூடு நிகழ்வும் அன்று களத்தில் நடந்ததுமாக படம் பேசுவது யதார்த்தமாக இருப்பினும் அதுவே உண்மையும் கூட, படம் பார்க்கும் உங்களுக்கும் அந்த நினைப்பு வருமென நம்புகிறேன். படம் யாருக்கும் தெரியுமோ இல்லையோ ஆளும் அரசான பாஜகவும், மோடியும், தாக்கரேக்களும் வந்துப் போனால் உங்களுக்கு அரசியல் பார்வை இருக்கிறது என்றே பொருள்.

உழைக்கும் மக்களின் பெரிய ஆயுதமே அவர்கள் உடல் தான், அவர்கள் கூட்டம் தான் என்று மீண்டும் இப்படத்தில் அடித்தும் இடித்தும் கூறியிருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித். படத்தின் இசை அசாத்தியம், பின்னணியில் பிண்ணியெடுத்திருக்கிறார் சந்தோஷ், பாடல்கள் ஒவ்வொன்றும் தரம். முக்கியமாக இப்படத்தில் பாடல் வரிகள் சொல்லும் கதைகள் கவிதைகள் ஏராளம், விடுதலை முழக்கமாகவும் சரி காதல் கவிதையாக உமா தேவியாகவும் சரி வரிகளில் அத்தனை ஆழம். வசனங்கள் எல்லாம் தீப்பொறி. இறுதியில் வரும் மூன்று நிறங்கள் தான் இந்தியாவிற்கும் சரி தமிழ்நாட்டிற்கும் சரி தேவை, கருப்பு/சிவப்பு/நீலம். அம்பேத்கரின் சிறந்த மாணவராக பா.ரஞ்சித்தை பார்க்கிறேன், 'கற்றவை, பற்றவை'. மிக கச்சிதமாக இதை செய்துள்ளார். மொத்தத்தில் காலா... சமூகத்திற்கு தேவையான படம்.

Vijayakumar Venkatajalam காலா ரஞ்சித் படம் , ரஜினிபடம் , தனுஷின் தயாரிப்பு படம் என்பதைத்தாண்டி என் பார்வையில் காலா நமக்கான படம். நம் வாழ்க்கையில் காலாவை பாடமாக ஏற்றுக் கொள்ளும் படம். அதிகார வர்க்கங்கள் நம்மை காக்கா , குருவிகளைப் போல நிஜ வாழ்க்கையில் சுட்டுத்தள்ளியதை கண்கூடப் பார்த்த நாம் துவண்டு விழாமல் எப்படி நமக்கான உரிமைகளை மீட்க மீண்டும் மீண்டும் போராட வேண்டும் என்பதை தனக்கான ஸ்டைலில் வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.

Netizens hails Ranjiths Kaala

சென்னை, மும்பை போன்ற வானுயர்ந்த கட்டிடங்களை கொண்ட மெட்ரோசிட்டியின் மையப்பகுதிகளில் ஒடுக்கப்பட்ட ஏழைமக்கள் தகரங்களையும் , கீற்றுகளையும் கொண்டு கட்டமைத்து வாழ்ந்துவரும் சேரிகளை நாம் கடந்து சென்றிருப்போம்! அவர்களுக்கான நிலங்களை பெரிய விலை கொடுத்து வாங்கி மாடர்ன் சிட்டிகளாகவும் , கார்ப்பரேட் கம்பெனிகளாகவும் , வணிக வளாகங்களாகவும் மாற்ற அரசியல்வாதிகள் , அதிகார வர்க்கத்தினர் அதிக பணம் , இடத்திற்கு மாற்றாக ஊருக்கு வெளியில் தனி வீடு கொடுத்தாலும் அவர்கள் வேறெங்கும் செல்லாமல் அங்கே வாழ்வதற்கான கருவை அருமையாக பதிவிட்டிருக்கிறார் ரஞ்சித் !

முதல் முப்பது நிமிடங்கள் மெல்ல மெல்ல நகரும் திரைக்கதை இடைவேளைக்கு முன்னர் விஸ்வரூபம் எடுத்து ருத்ரதாண்டவமாடுகிறது ! கபாலி படத்தில் கதையிலும் , ரஜினியின் நடிப்பிலும் முக்கியத்துவம் தந்த ரஞ்சித்தால், ரஜினியிடம் ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் ரெகுலரான மாஸ் இல்லை என்ற சலிப்பை பரவலாக விமர்சனம் கண்ட ரஞ்சித் இந்த முறை ரசிகர்களுக்காக தனது கதையுடன் பல்வேறு இடங்களில் வசனத்தால் மாஸிற்க்கு பஞ்சமில்லாமல் வெளுத்து வாங்கியிருக்கிறார் ! அது ரஜினிக்கே உண்டான தனித்துவம் ! சண்டைக்காட்சிகள் , யதார்த்த நடிப்பு , பஞ்ச் டயலாக் காட்சிகளில் ஒளிப்பதிவாளரின் கைவண்ணம் சக ஒளிப்பதிவாளர்களை பொறாமைப்பட வைத்தாலும் ஆச்சர்யப்படுவதிற்க்கில்லை !

பாட்ஷாவின் அந்தோணிக்கு ( மார்க் ஆண்டனி ) பிறகு ரஜினியின் நடிப்பிற்கு போட்டியான ஒரு வில்லனை காண முடிகிறது ! நானா படேகரின் நடிப்பை காண தமிழ் ரசிகர்கள் உண்மையில் கொடுத்து வைத்தவர்கள் தான் ! சந்தோஷின் பிண்ணனி இசை நம் மனதை ரணகளப்படுத்தும் ! மனுஷன் ரசிச்சி செஞ்சிருக்கார் ! புலிக்கு பிறந்தது பூனையாகாது என்பதை இடைவேளை மழை சண்டைக்காட்சியில் நிரூபித்திருக்கிறார் திலீப் சுப்பராயன் !

படத்தின் எல்லா கதாபாத்திரங்களும் தங்களின் பங்களிப்பை சிறப்பாக ஆற்றியிருந்தாலும் ரஜினியின் மாஸிற்கும் , நானே படேகரின் நடிப்பிற்கும் முன்னால் சாதாரணமாக தோன்றும் ! படத்தைப்பார்த்து பொங்க வேண்டிய காவிக்கூட்டமே சமூக வலைத்தளங்களில் காலாவிற்கு ஆதரவளிப்பது ரஞ்சித்திற்கு கூடுதல் பலம் ! காலா ரஞ்சித்தின் சித்தாந்தம் !

English summary
Netizens hailed Director Pa Ranjith's Kaala Film.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X