For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கர்நாடகம் புதிய அணை கட்ட பாஜக அனுமதி.. சட்டவிரோத போக்கை கண்டித்து 23ல் திக ஆர்ப்பாட்டம்

கர்நாடக அரசு புதிய அணை கட்ட மத்தியில் ஆளும் பாஜக அரசு சட்டவிரோதமாக அனுமதி வழங்கி வருகிறது. இதனைக் கண்டித்து திராவிடர் கழகம் சார்பில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கி. வீரமணி அறிவித்த

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் பல்வேறு திட்டங்களை பக்கத்து மாநிலங்களான கர்நாடகம் மற்றும் கேரளா உள்ளிட்டவை செய்து வருகின்றன.

இதனால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய நீர் முற்றுலும் தடைபட்டு தமிழகம் விரைவில் பாலைவனம் போல் ஆகிவிடும் என்றும் எச்சரித்துள்ளார் கி. வீரமணி.

இது போன்ற அசாதாரண சூழ்நிலையில் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்பட்டது போன்று தற்போதும் எடுக்க வேண்டும் என்றும் வீரமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து கி. வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

New Dam along Cauvery, DK announces protest on Feb 23

புதுப்புது அணைகள் கட்ட திட்டமிடுதலும் - நிதி ஒதுக்குதலும்!

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக ஆட்சியில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், நிச்சயமற்ற தன்மைகளும் நிலவியதினால், தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் பல்வேறு திட்டங்களை பக்கத்து மாநிலங்களான கருநாடகா, கேரளா, ஆந்திரா போன்றவை, தமிழ்நாட்டிற்குரிய நீர்வரத்துக்கு நிரந்தர தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும் வண்ணம் புதுப்புது அணைகளைக் கட்ட திட்டமிட்டும், நிதி ஒதுக்கியும், பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியும் செயல்படுகின்றன!

பாலையாகும் தமிழ்நாடு

கருநாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், கொல்லேகாலிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில், காவிரி ஆற்றின் குறுக்கே, சிவசமுத்திரம் அருவியின் அருகே, மேகதாது எனும் இடத்தில் அணை கட்டி, நீர்மின் நிலையம் தொடங்க, கருநாடக அரசு திட்டமிட்டு நிதி ஒதுக்கி செயல்படுத்தி வருகிறது. இந்த அணை கிருஷ்ண ராஜ சாகர் அணையைவிட பெரிதாக இருக்கும் என்று கருநாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திரா கூறியுள்ளார். ஒகேனக்கல்லில் இருந்து மிகவும் அருகிலுள்ள மேகதாது பகுதியில் கட்டப்படும் அணையால், தமிழகத்திற்கு காவிரி நீர் வரத்து முற்றிலும் நின்று போகும். இதனால், மேகதாதுவிலிருந்து 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டூர் அணை நிரந்தரமாக வறண்டு, தமிழ்நாடு பாலைவனமாகும்.

விவசாயம் பாதிப்பு

கருநாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை நிறைவேற்றினால், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம் உள்பட காவிரி டெல்டா மாவட்டங்கள் காவிரி ஆற்று நீர் வரத்து இன்றி, தமிழக விவசாயிகள் மிகவும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள்.

துச்சாதனன் கூட்டம்

தமிழ்நாட்டு எம்.பி,.க்கள் 50-க்கும்மேல் இருந்தும், துரவுபதையினை துகிலுரிந்தபோது வேடிக்கை பார்த்த துச்சாதனன் கூட்டம்போல் கைபிசைந்து நின்று, அ.தி.மு.க. கட்சியை உடைக்க திட்டமிட்டு டில்லியால் ஏவிவிடப்பட்ட ஏற்பாடுகளைச் சமாளிப்பதிலும்தான் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர்!

மத்திய பா.ஜ.க. அரசு கண்டும் காணாததுபோல உள்ள கொடுமையான நிலை

• கருநாடகத்திலிருந்து நமக்கு நடுவர் மன்றத் தீர்ப்பின்படி கிடைக்கவேண்டிய நீர்ப் பங்கீடு தரப்படவில்லை.
• காவிரி நதி நீர் ஆணைய அமைப்பிற்கு - அரசியல் காரணங்களினால் - மத்திய மோடி அரசே முட்டுக்கட்டை போடும் கொடுமை!
• உச்சநீதிமன்ற தீர்ப்பைக்கூட மதிக்க மறுக்கிறது கருநாடக அரசு!
• கேரளாவில் பாம்பாற்றில் அணை கட்டும் முயற்சி - அதனை எதிர்த்து வலிமையான குரல் தமிழக அரசிலிருந்து இன்னும் கிளம்பாத அவலம்!
• ஆந்திராவில் பாலாற்றிற்குக் குறுக்கே தடுப்பணைகள் எழுப்புதல் போன்ற கொடுமை!

கண்டும் காணாமல்..

தமிழ்நாட்டில் தி.மு.க. உள்பட அனைத்துக் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் குரல் எழுப்பினும், அம்மாநில முயற்சியைத் தடுத்து நிறுத்தவேண்டிய மத்திய பா.ஜ.க. அரசு, கண்டும் காணாததுபோல உள்ள கொடுமையான நிலை இன்றைய கண்கூடான யதார்த்தம்.

தடையில்லா சான்று

மேலும் வெந்த புண்ணில் வேலைச் செருகுவதுபோல, கருநாடக அரசின் அமைச்சரவை காவிரி ஆற்றின் குறுக்கே புதியதாக மேகதாது அணையைக் கட்ட சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் (ரூ.5912 கோடி) ஒதுக்கியுள்ளது.

• மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் தடையில்லா சான்றிதழ் வழங்கக் கூடாது
• 66.5 டி.எம்.சி. தண்ணீரை இவ்வணை கட்டப்பட்டால் தேக்கப்பட்டுவிடும்.
• கே.ஆர்.எஸ். என்ற கிருஷ்ணராஜ சாகர் அணையின் தேக்கம் 49 டி.எம்.சி. தான்.
• தமிழ்நாட்டிற்கு இனி தண்ணீர் வராமல் தடுக்க இது வசதியாகி விடும்.
• மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்த அணைக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கவே கூடாது!

அனைத்துக் கட்சிக் கூட்டம்

கருநாடக மாநிலத்தில் குண்டுராவ் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் (1981) மேகதாது அணைக்கு அடிக்கல் நாட்டிட அன்றைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி வருவதாக இருந்த நிலையில், தமிழ்நாட்டிலும், சட்டப்பேரவையிலும் (எம்.ஜி.ஆர். அப்பொழுது முதலமைச்சர் - அனைத்துக் கட்சிக் கூட்டமும் கூட்டப்பட்டது) கடும் எதிர்ப்பின் காரணமாக அத்திட்டம் தடை செய்யப்பட்டது. இப்பொழுது மீண்டும் தலைதூக்குகிறது - எம்.ஜி.ஆர். வழிவந்ததாகக் கூறிக்கொள்ளும் தமிழக அரசு அந்த முறையை இப்பொழுதும் பின்பற்றவேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் உடனே கூட்டிடவேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்குப் போட்டு தடையாணையைப் பெற்றிடுக!

தமிழக அரசு உடனடியாக தனது ஆட்சேபணையை மத்திய அரசுக்குத் தெரிவித்தாக வேண்டும். தமிழ்நாட்டு எம்.பி.,க்கள் பிரதமரைச் சந்தித்து புதிய அணைகட்ட அனுமதிக்கக் கூடாது என்று வற்புறுத்தவேண்டும். உச்சநீதிமன்றத்தில் புதிய வழக்குப் போட்டு தடையாணை (ஸ்டே) வாங்கவும் அவசர கதியில் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.

திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இதற்குக் கண்டனம் தெரிவித்து, எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில் பிப்ரவரி 23 ஆம் தேதி வியாழனன்று சென்னையிலும், தருமபுரியிலும் (சேலம், தருமபுரி, கிருட்டிணகிரி மாவட்டத் தோழர்களும் பங்கேற்க வேண்டும்) திராவிடர் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். தமிழ்நாட்டில் உள்ள அனைவரும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதற்கு எதிரான குரல் கொடுத்து தடுத்து நிறுத்திட முன்வரவேண்டும். இது அவசரம் - அவசியம்! மெத்தனம் கூடாது என்று கி. வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

English summary
DK leader K. Veeramani announced protest on Feb 23 for constructing dam along Cauvery by Karnataka government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X