வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை: தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
சென்னை : வங்கக் கடலில் புதிதாக உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் 31ம் தேதி முடிவடைந்தது. வழக்கமான சராசரியாக 44 செ.மீ., பதிவாக வேண்டிய மழை இந்த ஆண்டு 9% குறைவாகவே பதிவாகியது.

இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர். மேலும் பருவமழையை விட பனிப்பொழிவு அதிக அளவில் இருக்கிறது. குறிப்பாக தென் தமிழகம் மற்றும் சென்னையில் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்நிலையில் வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாகவும் அதன் மூலம் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மைய வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனவரி 9 மற்றும் 10ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அன்றைய தினம் தரைக்காற்று மிக வேகமாக வீசும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.