மாஜி எம்.எல்.ஏ.வும், சிட்டிங் எம்.எல்.ஏவும்... நீலகிரி மாவட்ட திமுக வேட்பாளர்கள் பயோடேட்டா
சென்னை: நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. இதில் ஒரு தொகுதியில் முன்னாள் சட்டசபை உறுப்பினரை நிறுத்தியுள்ளது. இன்னொரு தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ. நிற்கிறார்.
நீலகிரி மாவட்ட திமுக வேட்பாளர்களின் பயோ டேட்டா.
பா.மு. முபாரக்
குன்னூர் தொகுதி வேட்பாளராக பா.மு.முபாரக் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் படுகர் இனத்தைச் சேராதவர் என்பதால் தொகுதி திமுகவினர் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. அதற்கு மத்தியில் முபாரக் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளார். மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார் முபாரக். 10 வது படித்துள்ளார். 1984-ஆம் ஆண்டு முதல் 1988 வரை இளைஞரணி மாவட்டச் செயலாளராக பதவி வகித்துள்ளார். 1988 முதல் 2001 வரை நீலகிரி மாவட்டச் செயலாளராகவும், 2001 முதல் 2015 வரை தேர்தல் பணிக் குழுச் செயலாளராகவும், 2015 முதல் மீண்டும் நீலகிரி மாவட்டச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். 1996-ஆம் ஆண்டில் கூடலூர் சட்டசபை உறுப்பினராகவும், 1997-ஆம் ஆண்டு அரசு தலைமை கொறடாவாகவும் இருந்தவர்.
திராவிட மணி
கூடலூர் தனித் தொகுதியில் திராவிட மணி மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2011 தேர்தலிலும் இங்கு வெற்றி பெற்றார். கூடலூர் தொகுதியில் திமுக பலம் வாய்ந்ததாக விளங்குவதால் திராவிடமணி தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது. தோட்டத் தொழிலாளர் மகன். கடந்த 20 வருடங்களாக கூடலூர் பகுதியில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.