For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிர்மலா தேவி விவகாரம்: "குற்றவாளிகளே வழக்கை விசாரிப்பதா?"

By BBC News தமிழ்
|
பேராசிரியர்
Getty Images
பேராசிரியர்

அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மாணவிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்த அழைத்த விவகாரத்தில், பல்கலைக்கழகம் அமைத்துள்ள குழுவைக் கலைக்க வேண்டுமென மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் முன்பாக இன்று காலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக துணைவேந்தர் அமைத்திருக்கும் குழுவை கலைக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் வலியுறுத்தினர்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத்தின் தலைவரான புவனேஸ்வரன், "நிர்மலாதேவியின் ஆடியோவில் அவர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்காகவே இந்தச் செயலைச் செய்ததாகக் கூறுகிறார். அது குறித்து ஊடகங்கள் கேட்டபோதும் அவர் அதனை மறுக்கவில்லை. அப்படியிருக்கும் நிலையில், அதே உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரிக்க எப்படி ஒரு குழுவை அமைக்க முடியும்? அந்தக் குழுவை உடனடியாகக் கலைத்துவிட வேண்டும்" என்று குறிப்பிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் நியமித்த ஒரு நபர் விசாரணை என்பதும் சரியல்ல என்றும் பெண் ஒருவரும் தொழிற்சங்கவாதி ஒருவரும் இணைக்கப்பட்டு, அந்தக் குழுவை விரிவாக்க வேண்டும் என கூட்டு நடவடிக்கைக் குழு கூறியிருக்கிறது.

இதற்கிடையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "இந்த விவகாரத்தில் துணை வேந்தர்தான் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். வேந்தர் என்ற முறையில் ஆளுனர் எப்படி நடவடிக்கை எடுக்க முடியுமெனத் தெரியவில்லை. இதில் ஏதோ குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்" என்று கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியும் இந்த விவகாரத்தில் ஆளுனரின் நடவடிக்கையை விமர்சித்துள்ளது. "ஆளுனர் புரோகித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் தான் வேந்தர் ஆவார். கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ, அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை. கல்லூரிகளில் நடந்த விஷயங்கள் குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். ஆனால், இந்த விவகாரம் குற்றவியல் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில் அது தொடர்பாக விசாரிக்கவும், வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது" என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், உயர்கல்வித் துறை அமைச்சர் அன்பழகனிடம் இது தொடர்பாக கேட்டபோது வேந்தர் என்ற முறையில் நடவடிக்கை எடுக்க ஆளுனருக்கு அதிகாரம் இருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்கிடையில், அருப்புக்கோட்டை காவல்நிலையத்தில் வைத்து பேராசிரியை நிர்மலா தேவியிடம் விசாரணை நடைபெற்றுவருகிறது.

அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவரும் நிர்மலா என்பவர் அந்த கணிதத் துறையில் இளநிலை படிக்கும் 4 மாணவிகளிடம் பேசுவது போன்று வெளியான ஒலிநாடாவில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், பல்வேறு வசதிகளை செய்துதர வேண்டிய உயர்பதவியில் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டியிருப்பதாகவும், அதற்காக அந்தக் கல்லூரி மாணவிகளை சில விஷயங்களுக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறுவது பதிவாகியிருந்தது.

இந்த விஷயங்களை சம்பந்தப்பட்ட மாணவிகள் ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கப்படும்; பட்ட மேற்படிப்பில் எளிதாக இடம் வாங்கித் தருவதுடன், மாதந்தோறும் நினைத்துப் பார்க்க முடியாத தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி அந்த ஒலிநாடாவில் பேசியிருந்தார்.

இவற்றுக்குத் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என மாணவிகள் கூறுவதும் இதில் பதிவாகியிருந்தது.

இந்த ஒலிநாடா வெளியானதும் நிர்மலாதேவி கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதன் பிறகு நேற்று பிற்பகலில் அவரைக் காவல்துறை கைதுசெய்தது. ]

பிற செய்திகள்:

BBC Tamil
English summary
அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரியின் பேராசிரியர் ஒருவர் மாணவிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்த அழைத்த விவகாரத்தில், பல்கலைக்கழகம் அமைத்துள்ள குழுவைக் கலைக்க வேண்டுமென மதுரைக் காமராஜர் பல்கலைக்கழகத்தின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தியிருக்கிறது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X