For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநர் விசாரணை ஆணையம் செல்லாது... சிபிஐ விசாரணை தேவை - டாக்டர் ராமதாஸ்

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விவகாரம் குறித்து ஆளுநர் மற்றும் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர் அமைத்த விசாரணை ஆணையம் செல்லாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

சென்னை: மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் புரோஹித்துக்கோ, துணைவேந்தர் என்ற முறையில் செல்லத்துரைக்கோ எந்த அதிகாரமும் கிடையாது என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாட்டில் பல்கலைக்கழகங்களை நிர்வகிக்கும் பதவியில் உள்ளவர்களைத் திருப்திப்படுத்துவதற்காக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் வலை வீசிய அக்கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இது வரவேற்கத்தக்க நடவடிக்கை என்றாலும் கூட, இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

Nirmala Devi case: Ramadoss statement about Governors inquiry commission

பல்கலைக்கழக நிர்வாகத்தின் உயர்பதவியிலுள்ள சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளுக்கு தனியார் கல்லூரி மாணவிகளை பலியாக்க உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி முயன்ற விவகாரம் வெளியானதுமே அதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாமக தான் முதன் முதலில் வலியுறுத்தியது. பேராசிரியை நிர்மலா தேவியை கைது செய்வதுடன், இதன் பின்னணியில் உள்ளவர்கள் அனைவரையும் அம்பலப்படுத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; இதற்காக இவ்வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியது.

ஆனால், நிர்மலா தேவியை கைது செய்துள்ள காவல்துறையினர், இது மாணவிகளுக்கும், நிர்மலா தேவிக்கும் இடையிலான பிரச்சினையாக மட்டும் கருதி, அத்துடன் இந்த வழக்கை முடித்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். மற்றொருபுறம், இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் தலைமையிலான விசாரணைக் குழுவை ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தும், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் 5 பேர் கொண்ட விசாரணைக் குழுவை துணைவேந்தர் செல்லத்துரையும் அறிவித்துள்ளனர். இவையும் பாலியல் ஊழலை மூடி மறைக்கும் முயற்சி தான்.

மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட பல்கலைக்கழக வேந்தர் என்ற முறையில் ஆளுநர் புரோஹித்துக்கோ, துணைவேந்தர் என்ற முறையில் செல்லத்துரைக்கோ எந்த அதிகாரமும் கிடையாது. ஆளுநர் புரோஹித் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் தான் வேந்தர் ஆவார். கல்லூரிகளை நிர்வகிக்கும் அதிகாரமோ, அங்கு நடக்கும் தவறுகள் குறித்து விசாரிக்கும் அதிகாரமோ வேந்தருக்கு இல்லை.

கல்லூரிகளில் நடந்த விஷயங்கள் குறித்து கல்லூரிக் கல்வி இயக்ககம் மட்டுமே விசாரணை நடத்த முடியும். அதுவும் கல்லூரி நிர்வாகத்தில் ஏதேனும் தவறுகளோ, விதிமீறலோ நடந்தால் மட்டுமே கல்லூரிக் கல்வி இயக்ககம் தலையிட முடியும். ஒரு கல்லூரிக்குள், அதுவும் தனியார் நிர்வாகத்திலுள்ள கல்லூரியில், மாணவிகளை தவறாக வழி நடத்த ஆசிரியை முயன்றால் அது பற்றி நிர்வாக ரீதியிலான நடவடிக்கைகளை கல்லூரி நிர்வாகம் மட்டுமே எடுக்க முடியும்.

ஆனால், இது குற்றவியல் பிரச்சினையாக மாறிவிட்ட நிலையில் அது தொடர்பாக விசாரிக்கவும், வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தவும் புலனாய்வு அமைப்புகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் உயர்பதவிகளில் இருப்பவர்களின் சார்பில் தான் கல்லூரி மாணவிகளுக்கு உதவிப் பேராசிரியை பாலியல் வலை வீசினார் என்று குற்றஞ்சாற்றப்படும் நிலையில், சந்தேகத்தின் நிழல் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்லத்துரை மீதும் விழுந்துள்ள சூழலில், அவர் எந்த அடிப்படையில் விசாரணைக்கு ஆணையிட முடியும்?

அவர் விசாரணையை எதிர்கொள்ள முடியுமே தவிர, விசாரணைக்கு ஆணையிட முடியாது. இந்த விஷயத்தில் தலையிட்டு விசாரணைக்கு ஆணையிட ஆளுநருக்கும் அதிகாரமில்லை.

ஒருவேளை, இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு தொடர்பு இருப்பதாக உறுதி செய்யப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் ஆணையை மட்டுமே ஆளுநர் பிறப்பிக்க முடியும்; விசாரணைக்கு ஆணையிட முடியாது.

இதற்கெல்லாம் மேலாக பல்கலைக்கழக நிர்வாகிகளின் தூண்டுதலில் தான் கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த நிர்மலாதேவி முயன்றார் என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புத்தாக்கப் பயிற்சிக்கு உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி அழைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால், பயிற்சி வகுப்பில் அவர் பங்கேற்கவில்லை. மாறாக பல்கலைக்கழகத்தில் குளிரூட்டி வசதி கொண்ட அறை அவருக்காக ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகத்தின் அதிகாரவரிசையில் உதவிப் பேராசிரியர் என்பவர், அதிலும் குறிப்பாக தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியருக்கு பல்கலைக்கழகத்தில் எந்த மரியாதையும் இருக்காது.

ஆனாலும், நிர்மலாதேவிக்காக குளிரூட்டப்பட்ட அறையை பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிகள் ஆய்வுத் துறை தலைவராகவும், பல்கலைக்கழக மானியக்குழுவின் மனிதவள மேம்பாட்டு மைய இயக்குனருமான வி. கலைச்செல்வன் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்.

அவர் அங்கு 10 நாட்களுக்கும் மேலாக தங்கி, அவரது சொந்த வேலைகளை கவனித்திருக்கிறார். அதுமட்டுமின்றி, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி மாணவிகளுக்கு பல்வேறு சலுகைகளை செய்து கொடுப்பதாக நிர்மலா தேவி அவரது தொலைபேசி உரையாடலில் குறிப்பிட்டிருப்பதால் பல்கலைக்கழகத்தின் உயர்நிலை நிர்வாகிகளுக்கு இதில் நிச்சயம் தொடர்பு இருக்க வேண்டும். இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பல்கலைக்கழகம் தனி விசாரணை நடத்துவது தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வது ஆகும்.

மாணவிகளுக்கு பாலியல் வலை வீசப்பட்டது எளிதாக கடந்து செல்லக்கூடிய ஒன்றல்ல. மாணவிகளின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் இதில் தவறு செய்த அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். இதற்காக இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். செல்பேசி எண்ணில் நிர்மலா தேவியுடன் யார், யாரெல்லாம் தொடர்பு கொண்டனர் என்பது குறித்த விவரங்களை உடனடியாக கண்டறிந்து, அவர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

English summary
Dr Ramadoss said that there is no authority for the Governor Prohit or Vice-Chancellor as a university to order an inquiry into the sexual harassment of the students.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X