For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டி.எஸ்.பிவிஷ்ணு பிரியா தற்கொலையில் சிபிஐ விசாரணை தேவையில்லை - ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணு பிரியா தற்கொலை வழக்கில் சி.பி.ஐ விசாரணை தேவையில்லை என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்துள்ளார். விஷ்ணு பிரியவின் வழக்கு சி.பி.ஐ விசாரிக்கும் அளவிற்கு சிக்கலானதல்ல என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ் விஷ்ணு பிரியா வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், காவல்துறை உயரதிகாரிகளின் தொந்தரவு காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலே விஷ்ணுப்பிரியாவின் தற்கொலைக்கு காரணம் என்று பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

மகளின் மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் உள்துறை செயலருக்கு மனு அளித்தார். எதிர்கட்சியினரும் சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனையடுத்து சனிக்கிழமையன்று சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழக முதல்வர். அதோடு கோகுல்ராஜ் கொலை வழக்கும் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றப்பட்டது. எனினும் விஷ்ணு பிரியாவின் தற்கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று சட்டசபையில் திமுக, உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தியதோடு வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் ஜெயலலிதா

சட்டசபையில் ஜெயலலிதா

சட்டசபையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பதிலளித்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, "காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை குறித்து தீவிர புலன் விசாரணை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய ஏதுவாக அவ்வழக்கு தற்போது மாநில குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இவ்வழக்கும் விஷ்ணுபிரியா புலன்விசாரணை செய்து வந்த கோகுல்ராஜ் கொலை வழக்கும் மாநில குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை (சிபிசிஐடி) விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அப்பிரிவினர் இவ்வழக்குகளைத் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சி.பி.ஐ விசாரணை அவசியமில்லை

சி.பி.ஐ விசாரணை அவசியமில்லை

எனவே, விஷ்ணு பிரியா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை குறித்து எந்த அவசியமும் எழவில்லை. சிபிஐ விசாரணை தான் சரியான பாதையில் இருக்கும் என்பதும், சிபிசிஐடி விசாரணை அவ்வாறு இருக்காது எனக் கூறுவதும் தவறான கருத்து என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி விசாரணை

சிபிசிஐடி பிரிவால் சிறுவன் தில்ஷன் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கு, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த உமா மகேஸ்வரி கொலை, மருத்துவர் எம்மா கோன்சால்வேஸ் கொலை போன்ற வழக்குகள் சரியாக புலன்விசாரணை செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இங்கே நான் சுட்டிக் காட்டியது ஒரு சில உதாரணங்கள்தான்.

நேர்மையான விசாரணை

நேர்மையான விசாரணை

சிபிஐ விசாரணை மட்டுமே நேர்மையான விசாரணை என்ற கருத்து சரியானது அல்ல. அகில இந்திய அளவில் பரபரப்பாக உள்ள ஒரு முக்கிய வழக்கில் சிபிஐ முன்னாள் இயக்குநர் மீதே குற்றம் சுமத்தப்பட்டு உச்ச நீதிமன்ற விசாரணையிலும் அது உள்ளது என்பதை இங்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

அரசியல்வாதிகள் வழக்கு

அரசியல்வாதிகள் வழக்கு

மேலும், தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சம்பந்தப்பட்ட ஒரு சில வழக்குகள் உச்சநீதிமன்ற உத்தரவிற்கு பிறகே சிபிஐ-யால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதையும் இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். வெளிநாட்டுக் கார் இறக்குமதி வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில், தமிழகத்தில் ஒருவரை சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் சிபிஐ கைது செய்து விசாரணை செய்தது. அந்த வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது. ஆனால் அதே குற்றச்சாட்டுக்கு உள்ளான வேறு சிலரை சிபிஐ கைது செய்யவில்லை.

சங்கரசுப்பு மகன்

சங்கரசுப்பு மகன்

வழக்கறிஞர் சங்கர சுப்பு மகன் கொல்லப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணை செய்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் விவரங்களை தாக்கல் செய்து, வழக்கை முடிவுக்குக் கொண்டு வர கோரியது. இதனை ஏற்றுக்கொள்ளாத சென்னை உயர் நீதிமன்றம் 7.12.2012 தேதியில், பணி நிறைவு செய்த காவல் துறை உயரதிகாரி ராகவன் தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட்டு அந்த விசாரணை இன்னமும் நிலுவையில் உள்ளது.

சந்திரா வழக்கு

சந்திரா வழக்கு

உடுமலைப்பேட்டை காவல் துறையினரால் சந்திரா என்பவர் துன்புறுத்தப்பட்டதாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டில் சென்னை உயர்நீதிமன்றம் 24.9.2014 அன்று சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. சுமார் ஒரு வருடத்திற்குப் பின்னரும், சிபிஐ இந்த விசாரணையை முடிக்கவில்லை. எனவே, சிபிஐ விசாரணையே சரியானதாக இருக்கும் என சொல்லப்படுவது ஒருவருடைய தனிப்பட்ட கருத்து தானே தவிர உண்மை நிலையின் அடிப்படையில் சொல்லப்படுவது அன்று.

சிபிஐ தேவையில்லை

சிபிஐ தேவையில்லை

எனவே, இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தவேண்டிய அவசியமில்லை. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கானது சிபிஐ விசாரிக்கும் அளவுக்கு மிகச்சிக்கலான வழக்கு அல்ல. சிபிசிஐடியே இந்த வழக்கில் நடுநிலையுடன், விரைவாக புலன் விசாரணை மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.

English summary
CM Jayalalitha has said that there is no need for CBI probe into the death of DSP Vishnupriya.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X