மீண்டும் கன மழை.. பள்ளிகளுக்கு லீவு உண்டா.. கலெக்டர் சொல்வது என்ன?
சென்னை: சென்னை மற்றும் புறநகர்களில் மாலைக்கு மேல் இடியுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இருப்பினும் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் திட்டம் தற்போது இல்லை என்று சென்னை கலெக்டர் அன்புச் செல்வன் கூறியுள்ளார்.
சென்னையில் அடுத்த கட்ட வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. நகரிலும், புறநகர்களிலும் கன மழை பெய்து வருகிறது. சென்னை நகரின் பல பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்கள் கவலையிலும், மகிழ்ச்சியிலும் ஒரு சேர மூழ்கியுள்ளனர். ராயபுரம், திருவொற்றியூர், ராமாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை வெளுத்துக் கொண்டிருக்கிறது.

இன்று மாலை வியாசர்பாடி, பெரம்பூர், சௌகார்பேட்டை, ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை, எழும்பூர், நுங்கம்பாக்கம், அயனாவரம், திருவான்மியூர் ஆகிய பகுதிகளில் கன மழை பெய்தது. இரவில், ராயபுரம், ராமாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், மகாலிங்கபுரம், முகப்பேர் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இடியுடன் கூடிய கன மழையாக பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கும் அளவுக்கு கன மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இருப்பினும் அதுகுறித்து தற்போது திட்டம் ஏதுமில்லை. மழையின் போக்கைப் பொறுத்து இதுகுறித்து காலையில்தான் முடிவு செய்யப்படும் என்று சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அன்புச் செல்வன் தெரிவித்துள்ளார்.