For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கை கொடுத்த காற்றாலைகள்… ஜூன் 1 முதல் தமிழகத்தில் மின்வெட்டு ரத்து: ஜெ.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: காற்றாலை மின்சாரத்தை கருத்தில் கொண்டு, ஜூன் 1ஆம் தேதி முதல் தற்போது நடைமுறையில் உள்ள மின்வெட்டுகள் நீக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

No power cuts in TN from June 1, says Jayalalithaa

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

''பொருளாதார வளர்ச்சிக்கும், தொழில் துறை வளர்சிக்கும் இன்றியமையாததாக விளங்குவது மின்சாரமே ஆகும். 2011 ஆம் ஆண்டு மே மாதம் மூன்றாவது முறையாக நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, தமிழகத்தின் மின் தேவை 12,000 மெகாவாட் என்ற அளவில் இருந்தது. ஆனால், கிடைத்த மின்சாரமோ வெறும் 8,000 மெகவாட் தான். அதாவது கிடைத்த மின்சாரத்திற்கும், தேவைப்பட்ட மின்சாரத்திற்குமான இடைவெளி 4,000 மெகாவாட்டாக இருந்தது.

மேலும், தமிழ்நாடு மின்சார வாரியமும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வந்தது. இவற்றையெல்லாம் சீர் செய்வதற்கான பகீரத முயற்சிகளை எனது தலைமையிலான அரசு எடுத்ததன் விளைவாக, கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2,500 மெகாவாட் அளவுக்கு புதிய மின் உற்பத்தி நிறுவு திறன் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர, 500 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய நடுத்தர கால ஒப்பந்தங்கள் போடப்பட்டு, அந்த மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. இது தவிர, 3,300 மெகாவாட் மின்சாரத்தை நீண்ட கால அடிப்படையில் வாங்குவதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இந்த மின்சாரம் வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து படிப்படியாக பெறப்படும்.

புதிய மின் உற்பத்தி நிலையங்கள் மூலமும், கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் மூலமும் நமக்குத் தேவையான மின்சாரம் தற்போது கிடைக்கப் பெற்று வருகிறது. எனவே, கடந்த ஐந்து நாட்களாக தமிழகத்தில் மின் தடை என்பதே இல்லாத நிலை உருவாகியுள்ளது. வரும் ஜூன் மாதம் முதல் காற்றாலை மூலம் அதிக அளவில் மின்சாரம் கிடைக்கும்.

காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் பயன்படுத்திட வேண்டும் என்று நான் தமிழ்நாடு மின்சார வாரியத்தை அறிவுறுத்தியுள்ளேன்.

ஜூன் மாதம் முதல் கிடைக்கப் பெறும் காற்றாலை மின்சாரத்தையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் இதுவரை நடைமுறையில் உள்ள மின் கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தையும் 1.6.2014 முதல் அறவே நீக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இதன்படி, தற்போது உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை நடைமுறையில் உள்ள 90 விழுக்காடு மின் கட்டுப்பாடு 1.6.2014 முதல் நீக்கப்படும். இதே போன்று, உயர் மின் அழுத்த தொழில் மற்றும் வணிக மின் நுகர்வோர்களுக்கு மற்ற நேரங்களில் தற்போது நடைமுறையில் உள்ள 20 விழுக்காடு மின் கட்டுப்பாடும் 1.6.2014 முதல் நீக்கப்படும்.

இதன் மூலம் 1.11.2008 முதல் தமிழ்நாட்டில் முந்தைய தி.மு.க. ஆட்சியினரால் அமல்படுத்தப்பட்ட மின் கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றிலும் நீக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நடவடிக்கையின் காரணமாக தமிழ்நாட்டில் தொழில் வளம் மேலும் பெருகவும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் வழிவகை ஏற்படும்.

நான் ஏற்கெனவே உறுதி அளித்தபடி மின் வெட்டே இல்லாத மாநிலம் என்ற நிலைக்கு தமிழ்நாட்டை மூன்றே ஆண்டுகளில் கொண்டு வந்ததில் நான் பெருமிதம் அடைகிறேன்'' இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

English summary
The Tamil Nadu Chief Minister, J Jayalalithaa today said, there will be no power cuts from June 1, 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X