For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோக்கியா ஆலை மூடல்: நேரடியாக 6,900 பேர் வேலை இழப்பு- மறைமுகமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகேயுள்ள ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா மொபைல் நிறுவனம் செல்போன் தயாரிக்கும் பணிகளை இன்று முதல் நிறுத்தியுள்ளது. இதன் மூலம் நேரடியாக 6900 தொழிலாளர்கள் வரை வேலை இழந்துள்ளனர். மறைமுகமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழந்துள்ளனர்.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம் கடந்த 2006ஆம் ஆண்டில் ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் தயாரிப்பை தொடங்கியது. வரி ஏய்ப்பு புகாரில் சிக்கிய நோக்கியா நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த 5,600க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு என்கிற பெயரில் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுவிட்டனர்.

இதனிடையே, நவம்பர் 1ஆம் தேதி முதல் நோக்கியா நிறுவனம் மூடப்படும் என்று அந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, செல்போன் தயாரிக்கும் பணிகளை நோக்கியா நிறுவனம் இன்று முதல் நிறுத்தியுள்ளது.

Nokia Chennai unit shut; workers accept severance pay after management ultimatum

1.5 கோடி செல்போன்கள்

உலகின் மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தி ஆலையாக, சென்னை அருகே, ஸ்ரீபெரும்புதுாரில், 2006ல் நோக்கியா ஆலை துவங்கப்பட்டது. மாதத்துக்கு, 1.5 கோடி மொபைல் போன்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இந்த ஆலை, 7,500 பேருக்கு நிரந்தர வேலை அளித்தது.

மைக்ரோசாப்ட்

18 வயது முதல் 35 வயதுக்கு உட்டபட்டவர்கள் வேலை பெற்றனர்.குறிப்பாக, 60 சதவீதத்துக்கும் அதிகமான இளம்பெண்கள், நோக்கியா நிறுவனத்தில் வேலைக்கு சேர்க்கப்பட்டனர். லாபகரமாக இயங்கி வந்த ஆலை, இந்த ஆண்டு, ஏப்ரலில், உலகின் கணினி மென்பொருள் ஜாம்பவானாகத் திகழும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. இந்தியா மட்டும் அல்லாமல் பிற நாடுகளில் இருந்த, நோக்கியா நிறுவனங்களையும், மைக்ரோசாப்ட் வாங்கியது.

ரூ. 21 ஆயிரம் கோடி வரிபாக்கி

இந்நிலையில், 'இந்திய வருமான வரித்துறைக்கு, சென்னை நோக்கியா நிறுவனம், 21 ஆயிரம் கோடி ரூபாய், வரி பாக்கி வைத்துள்ளது. எனவே, வருமான வரியை செலுத்தும் வரை, சென்னை நோக்கியா ஆலையை முடக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில், வருமான வரித்துறை வழக்குத் தொடர்ந்தது.

ஆலை முடக்கம்

இந்த வழக்கை, விசாரித்த உச்ச நீதிமன்றம், வருமான வரித்துறை கோரிக்கையை ஏற்று, வரி பாக்கிக்காக, சென்னை நோக்கியா ஆலையை முடக்கியது. இதனால், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட, விற்பனை ஒப்பந்தப்படி, சென்னை நோக்கியா ஆலையை, விற்க முடியவில்லை.

முடங்கிய ஒப்பந்தம்

இதற்கிடைய, தமிழக வணிக வரித்துறைக்கு, 2,400 கோடி ரூபாய், வரி செலுத்த வேண்டும் என, வணிக வரித்துறை, நோக்கியா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த சட்ட சிக்கல்களால், சென்னை நோக்கியா நிறுவனம் செய்து கொண்ட விற்பனை ஒப்பந்தம் முடங்கியது.

தொழிலாளர்கள் விருப்ப ஓய்வு

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் செய்துகொண்ட விற்பனை ஒப்பந்தம் முடங்கியதால், நோக்கியா நிறுவனம், மொபைல் போன் உற்பத்தியை படிப்படியாகக் குறைத்தது. இதைத் தொடர்ந்து, நிரந்தர ஊழியர்களுக்கு, விருப்ப ஓய்வு திட்டத்தை, கடந்த மே மாதம் அறிவித்தது.இதை எதிர்த்து, நோக்கியா தொழிலாளர்கள் நடத்திய போராட்டம் பலன் அளிக்கவில்லை. 6,000 பேர் விருப்ப ஓய்வில் விடைபெற்றனர்.

உற்பத்தி நிறுத்தம்

இறுதியாக, 900 பேர் மட்டுமே, சென்னை நோக்கியா ஆலையில் பணிபுரிந்து வந்தனர். இவர்களும், பெரிய அளவில் உற்பத்தியை மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று முதல் சென்னை நோக்கியா ஆலை தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது.

வேலையிழப்பு

இதனால் வேலையிழந்துள்ள சுமார் 900 தொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான உடன்படிக்கை ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக நோக்கியா நிர்வாகம், தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை சார்பில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இழப்பீடு எவ்வளவு

அதன்படி தொழிலாளர்களுக்கு, நோக்கியா நிறுவனத்தில் பணிபுரிந்த அனுபவத்திற்கு ஏற்ப 7.5 லட்சத்தில் இருந்து 9 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கிடைக்கும் என தெரிகிறது.

மறைமுக வேலையிழப்பு

நோக்கிய ஆலையை மூடக்கூடாது என்று கம்யூனிஸ்ட் கட்சியினரும், திமுக, தேமுதிக, மதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் வலியுறுத்தினர். நோக்கியா ஆலையை தமிழக அரசு ஏற்று நடத்த முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்பதால் தமிழக அரசு மவுனம் சாதித்தது. இந்த நிலையில் நோக்கியா நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்திவிட்டது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோர் நேரடியாகவும் மறைமுகமாக வேலையிழந்துள்ளனர்.

English summary
The curtains finally came down on the Finnish MNC ‘Nokia’ after its last act on the Indian stage. Members of the Nokia India Thozhilalar Sangam (NITS) and all 850 employees finally agreed to the severance package put forth by the Nokia management at the tripartite meeting held at Sriperumbudur on Thursday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X